Published:Updated:

`அரசியல் போதும்... என்னை விட்டு விடுங்கள்!' - குமாரசாமி `திடீர்' அறிவிப்பு

சத்யா கோபாலன்

முன்னாள் பிரதமர் எச்.டி தேவகவுடாவின் மகனும், கர்நாடகாவின் முன்னாள் முதல்வருமான குமாரசாமி அரசியலிலிருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

குமாரசாமி
குமாரசாமி ( Twitter )

கர்நாடகாவில் நடந்து வந்த காங்கிரஸ் - ம.ஜ.த கூட்டணி சில தினங்களுக்கு முன்பு முடிவுக்கு வந்தது. இந்தக் கூட்டணியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ-க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததால், முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காமல் போனது. இதனால் அவர் தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து அந்த மாநிலத்தில் அதிக பெரும்பான்மை பெற்றுள்ள பா.ஜ.க-வின் எடியூரப்பா தற்போது முதல்வராகப் பதவியேற்றுள்ளார்.

குமாரசாமி ராஜினாமா
குமாரசாமி ராஜினாமா
ANI

குமாரசாமி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்து ஒருவாரம் ஆன நிலையில், தற்போது அரசியலை விட்டு விலக விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி ஏ.என்.ஐ ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள அவர், ``நான் அரசியலுக்கு வந்ததும் இரண்டு முறை முதல்வரானதும் ஒரு விபத்துதான். நான் ஆட்சி செய்த காலத்தில் யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் சிறப்பாக நடந்ததாக நம்புகிறேன்; அது போதும் எனக்கு. தற்போது இவை அனைத்திலிருந்தும் விலகி இருக்க விரும்புகிறேன்.

என் தந்தை இன்னும் அரசியலோடு போராடிக் கொண்டிருக்கிறார். ஆனால், எனக்கு அந்த வலிமை இல்லை என நினைக்கிறேன். தற்போது அரசியல் செல்லும் வேகத்தில் என்னால் அதில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. தற்போதுள்ள அரசியல், நல்ல மனிதர்களுக்கானதல்ல; அது சாதியைத் தூக்கிப் பிடிப்பவர்கள் மற்றும் பழிவாங்க நினைப்பவர்களுக்கானதாக உள்ளது. நடப்பதைக் கடவுள் பார்த்துக்கொள்வார்.

குமாரசாமி
குமாரசாமி
ANI

நான் அரசியலிலிருந்து விலக உள்ள கேள்வியை என் குடும்பத்தைச் சேர்ந்த யாரிடமும் கேட்க வேண்டாம். என்னை அமைதியாக, நிம்மதியாக வாழவிடுங்கள். மக்களுக்கு நல்லது செய்ய எனக்குக் கிடைத்த வாய்ப்பில், நான் சிறப்பாகச் செயல்பட்டுள்ளேன். எனக்கு அதிகாரத்தில் இருக்கும் பதவி தேவையில்லை; மக்கள் மனதில் இருக்கும் பதவி கிடைத்தால் மட்டும் போதும்” எனக் கூறியுள்ளார்.