Published:Updated:

`எங்களைத் தடுக்கமுடியாது; பயப்பட மாட்டேன்!'- ஜெகன்மோகனை எச்சரிக்கும் சந்திரபாபு நாயுடு

தெலுங்கு தேசம் கட்சிப் பேரணி அறிவித்ததால் சந்திரபாபு நாயுடுவும் அவரின் மகனும் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தெலுங்கு தேசம் கட்சியினரை திட்டமிட்டு ஆளும் கட்சியினர் தாக்குவதாகவும், கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டிவருகிறார். இதை எதிர்த்து இன்று குண்டூரில் உள்ள தன் வீட்டிலிருந்து அட்மகூர் வரை பேரணி சென்று அங்கு ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தார்.

Chandrababu Naidu
Chandrababu Naidu
Twitter/@JaiTDP

அதற்காகக் காலை தன் அமராவதி வீட்டிலிருந்து குண்டூர் வீட்டுக்கு வந்தார் சந்திரபாபு நாயுடு. அவர் வருவதற்கு முன்பே அங்கு தொண்டர்கள் கூட்டமும் போலீஸ் கூட்டமும் திரண்டிருந்தது. அங்கிருந்த தொண்டர்களைக் காவலர்கள் அப்புறப்படுத்திக்கொண்டிருந்தனர்.

அவரது வீட்டு வாசலில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டிருந்தது. சந்திரபாபுவின் கார் வீட்டினுள் நுழைந்ததும் தொண்டர்கள், காவலர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தனர். இதனால் அவர் அரைமணி நேரம் வாகனத்திலேயே அமர்ந்திருந்தார்.

TDP protest
TDP protest
Twitter/@JaiTDP

பின்னர் வீட்டுக்குச் சென்ற சந்திரபாபு நாயுடுவை காவல்துறையினர் வீட்டுச் சிறையில் அடைத்தனர். அவரது வீட்டைச் சுற்றியிருந்த தொண்டர்களை அப்புறப்படுத்தி வீட்டின் கதவை அடைத்தனர். இருந்தும் வீட்டுக்கு வெளியில் தொடர்ந்து தொண்டர்கள் கோஷமிட்டுக்கொண்டே இருந்தனர். வீட்டினுள் சில தொண்டர்கள் மட்டுமே இருந்தனர். நீண்ட சலசலப்புக்குப் பிறகு தொண்டர்கள் மத்தியில் பேசினார் சந்திரபாபு நாயுடு.

வீட்டுச் சிறையில் சந்திரபாபு நாயுடு, மகன்!- அரசுக்கு எதிராகக் களமிறங்கியதால் ஜெகன்மோகன் அதிரடி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``இன்று ஜனநாயகத்தின் கறுப்பு நாள். ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுவிட்டது. இந்த அரசாங்கம் மக்களின் உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் நசுக்குகிறது. நான் அரசுக்கும் காவல்துறைக்கும் எச்சரிக்கை விடுக்கிறேன். இதற்கெல்லாம் நாங்கள் பயம் கொள்ளமாட்டோம். கைது செய்வதினால் எங்களைத் தடுக்கமுடியாது. எப்போதெல்லாம் என்னை அனுமதிக்கிறார்களோ அப்போதெல்லாம் `சலோ அட்மகூர்’ பேரணி தொடர்ந்துகொண்டே இருக்கும்.

TDP protest
TDP protest
Twitter/@JaiTDP

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் காவல்துறையினரால் விரட்டப்பட்ட கிராம மக்களை மீண்டும் அவர்களின் கிராமத்துக்கு அனுப்பிவைப்பதற்காகத்தான் அட்மகூர் செல்ல திட்டமிட்டிருந்தேன். இது அரசியல் கிளர்ச்சி. அரசியல் பிரிவினைவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நடக்கும் சதி. என்ன நடந்தாலும் நம் கட்சித் தொண்டர்கள் மனச்சோர்வு அடையக் கூடாது. எப்போதும் தன்னம்பிக்கையை இழக்காத என்.டி ராமாராவின் வழியில் நாம் தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்க வேண்டும்” எனப் பேசினார்.

இவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடுவின் மகன் நரலோகேஷ், ``இது சர்வாதிகாரம். ஜனநாயக விரோதமாக நாங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளோம். தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருகிறார்கள். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் வெளிப்படையாக எங்களை மிரட்டுகிறார்கள். காவலர்களும் அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறார்கள்” எனக் கடுமையாக விமர்சித்தார்.

TDP protest
TDP protest
Twitter/@JaiTDP

``ஜெகன் மோகன் ரெட்டியினால் ஆந்திராவில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. சந்திரபாபு நாயுடு வெறும் அரசியல் நாடகம் நடத்தி ஆதாயம் தேட முயல்கிறார். பொய்யான உண்ணாவிரதம் மற்றும் பொய்யான பேரணியை மக்கள் நம்பமாட்டார்கள்” என அமைச்சர் வெங்கடரமணா கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு