Published:Updated:

`ஹரியானாவின் `கிங் மேக்கர்’ நாங்கதான்!’ -முடிவுகள் வெளியாவதற்குள் தொடங்கிய போட்டாபோட்டி

ஹரியானாவில் இன்னும் தேர்தல் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்படாத நிலையில் அதற்குள் அங்கு ஆட்சியமைக்க மூன்று கட்சிகளுக்குள் கடும் போட்டி நிலவி வருகிறது.

ஹரியானா தேர்தல் போட்டி
ஹரியானா தேர்தல் போட்டி

இந்தியாவில் கடந்த 21- தேதி இரு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும், 18 மாநிலங்களில் இடைத்தேர்தல் வாக்குபதிவுகளும் நடைபெற்றன. இந்த அனைத்து வாக்குப்பதிவு முடிவுகளும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க அமோக வெற்றி பெற்ற பிறகு வரும் முதல் மாநிலத் தேர்தல் என்பதால் ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்கள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

மோடி
மோடி

மகாராஷ்டிராவில் தொடக்கம் முதலே பா.ஜ.க கோலோச்சி வருகிறது. அங்கு மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 145 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சியமைக்கலாம் என்ற நிலையில், பா.ஜ.க பெரும்பான்மையையும் தாண்டி முன்னிலையில் உள்ளது. ஆனால், ஹரியானாவைப் பொறுத்தவரை பா.ஜ.க - காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுக்கும் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

ஆரம்பத்திலிருந்தே பா.ஜ.க முன்னிலையில் இருந்தாலும், சில வாக்குகள் வித்தியாசத்திலேயே பா.ஜ.கவைப் பின் தொடர்கிறது காங்கிரஸ். இங்கு எந்தக் கட்சிக்கும் போதுமான பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜ.க- காங்கிரஸ் இல்லாமல் மூன்றாவது இடத்தில் ஜனநாயக ஜனதா கட்சி உள்ளது. தற்போதைய நிலவரப்படி, ஜே.ஜே கட்சி ஆதரவு அளித்தால் மட்டுமே அங்கு ஆட்சி அமைக்கமுடியும் என்ற சூழல் உள்ளது.

சோனியா
சோனியா

இதைப் பயன்படுத்தி தனக்கு யார் முதல்வர் பதவி வழங்குகிறாரோ அவர்களுக்கே என் ஆதரவு எனத் தெரிவித்துள்ளார் ஜனநாயக ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதலா. இது பற்றி செய்தியாளர்களிடம் பேசியுள்ள சவுதாலா, “ஹரியானாவின் கிங் மேக்கராக என் கட்சி இருக்கும் என நான் நம்புகிறேன். மக்கள் மாற்றத்தை நோக்கி வாக்களித்துள்ளனர். ஹரியானா சட்டசபை ஜே.ஜே.பியின் சாவியால் திறக்கப்படும்.

Live Updates: ஹரியானாவில் பா.ஜ.க - காங்கிரஸ் இடையே கடும் போட்டி!

எங்களுக்கு யார் முதல்வர் பதவிக்கான வாய்ப்பு அளிக்கிறார்களோ அந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்க நாங்கள் தயாராக உள்ளோம். இது சவுதாலா என்ற தனி ஒருவரால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல, என் கட்சி நிர்வாகிகள் அனைவரும் இணைந்து எடுத்த முடிவு” என்று கூறியுள்ளார்.

ஹரியானாவில் இன்னும் முழுமையாக வாக்கு எண்ணிக்கை நிறைவடையவில்லை. அங்கு மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. அதில் ஆட்சியமைக்கத் தேவையானது 46 தொகுதிகள்.

துஷ்யந்த் சவுதலா
துஷ்யந்த் சவுதலா
ANI

பெரும்பான்மையை அடைய பா.ஜ.கவுக்கு இன்னும் ஆறு முதல் ஏழு தொகுதிகள் தேவைப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கையின் முடிவில்தான் பா.ஜ.க எத்தனை தொகுதிகளில் முழுமையாக வெற்றி பெற்றது என அறிவிக்கப்படும். அதன் பின் இதர சிறிய கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்களைச் சேர்த்தாலே பா.ஜ.க ஆட்சியமைக்கப் போதுமான தொகுதிகள் கிடைத்துவிடும் எனக் கூறப்படும் நிலையில் துஷ்யந்த் சவுதாலாவின் பேச்சு, ஹரியானா மட்டுமல்லாது தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது.