Published:Updated:

`நெடுந்தூரம் என்னுடன் பயணித்தவர் இனி இல்லை என நினைக்கும்போது..!’ - பஹ்ரைனில் உருகிய மோடி

ஜெட்லியின் இறுதிச் சடங்கில் மோடி பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதைப் பற்றி இன்னும் எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளிவரவில்லை.

jaitly - modi
jaitly - modi

முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடந்த 9-ம் தேதி மூச்சுத் திணறல் பிரச்னை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு முன்னதாகவே சிறுநீரக கோளாறு பிரச்னையும் இருந்துவந்தது. இவை இரண்டுக்கும் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி நேற்று பிற்பகல் உயிரிழந்தார்.

Arun Jaitley
Arun Jaitley

அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்த பிறகு அவரது உடல் டெல்லி, கைலாஷ் காலனியில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் கட்சி பாகுபாடின்றி ஜெட்லியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திவருகின்றனர். இதையடுத்து, இன்று காலை பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் அவரின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது, பின்னர் நிகம்போத் காட் பகுதியில் ஜெட்லி உடல் தகனம் செய்யப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் பல தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே, இந்தியப் பிரதமரும், ஜெட்லியின் நெருங்கிய நண்பருமான நரேந்திர மோடி ஃபிரான்ஸ், ஐக்கிய அரபு, அமீரகம், பஹ்ரைன் ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெட்லி இறந்த செய்தி அறிந்ததும் உடனடியாக ஜெட்லியின் மனைவி மற்றும் மகனிடம் போனில் பேசியுள்ளார் பிரதமர்.

Arun Jaitley
Arun Jaitley

அப்போது, அருண் ஜெட்லியின் மனைவியும், மகனும், பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்தை ரத்து செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளனர். அதனால் இன்று நடக்கும் ஜெட்லியின் இறுதிச் சடங்கில் மோடி பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதைப் பற்றி இன்னும் எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளிவரவில்லை.

30 ஆண்டு மோடி நட்பு முதல்  எமர்ஜென்சி கைது வரை! - `அசைக்க முடியாத' அருண் ஜெட்லி

நேற்று பஹ்ரைனில் 15,000 இந்தியர்கள் கலந்துகொண்ட விழாவில் தன் நண்பர் அருண் ஜெட்லி பற்றி உருக்கமாகப் பேசியுள்ளார் பிரதமர் மோடி. ``நான் கடமைகளுக்குக் கட்டுப்பட்ட சாதாரண மனிதன். இன்று (நேற்று) பஹ்ரைனில் பண்டிகைகள் சூழ்ந்திருக்கும் இதே வேளையில் நான் மிகவும் துக்கத்தில் உள்ளேன்.

பொது வாழ்க்கையில் என்னுடன் ஒன்றாக நடந்த நண்பர், அரசியல் பயணத்தில் உடன் இருந்தவர், அவருடன் சேர்ந்து போராடினேன், சேர்ந்து கனவு கண்டேன், அந்தக் கனவைச் சேர்ந்து நிறைவேற்றினோம். அந்த நண்பர் நாட்டின் முன்னாள் பாதுகாப்பு மற்றும் நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி. அவர் இன்று உயிரிழந்துள்ளார். அங்கே என் நண்பர் இறந்துவிட்டார், ஆனால், நான் அவரைவிட்டு தொலைதூரத்தில் இருக்கிறேன் என்பதை என்னால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியவில்லை.

modi
modi
ANI

சில நாள்களுக்கு முன்பு முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் நம்மை விட்டுப் பிரிந்தார், இப்போது நண்பர் அருணையும் நான் இழந்துவிட்டேன். என் நண்பனுக்கு பஹ்ரைன் மண்ணிலிருந்து அஞ்சலி செலுத்துகிறேன். என் நண்பன் அருண் ஜெட்லி தேசத்தைக் காதலித்தார், கட்சியை நேசித்தார், மக்களுக்குச் சேவை செய்வதை நேசித்தார். இளமை காலத்திலிருந்து நெடுந்தூரம் என்னுடன் சேர்ந்தே வந்தவர் இனி இருக்கமாட்டார் என நினைக்கும்போது வேதனையாகவும், நம்பமுடியாமலும் உள்ளது” என மிகவும் உருக்கமாகப் பேசியுள்ளார்.