2011 முதல் 2016-ம் ஆண்டு வரையிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராகவும், அதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல்துறை அமைச்சராகவும் இருந்தவர் தோப்பு வெங்கடாசலம். 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலிலும் பெருந்துறை தொகுதியில் போட்டியிட தோப்பு வெங்கடாசலத்துக்கு, ஜெயலலிதா வாய்ப்பளித்தார். மேலும், அந்தத் தேர்தல் பிரசாரத்துக்காக பெருந்துறைக்கு வந்த ஜெயலலிதா, இங்குதான் அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அந்தத் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வராக ஆனாலும், அப்போதைய அமைச்சரவையில் தோப்பு வெங்கடாசலத்துக்கு அமைச்சர் பதவி கிட்டவில்லை.
தனக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்குவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், ஜெயலலிதா காலமானார். அதன் பிறகு ஓ.பன்னீர்செல்வமும், அவரைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் முதல்வராகப் பொறுப்பேற்றனர். இவர்களது அமைச்சரவையிலும் தோப்பு வெங்கடாசலத்துக்கு அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட தோப்பு வெங்கடாசலத்துக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் கொதிப்படைந்த தோப்பு வெங்கடாசலம், பெருந்துறைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் 9,500 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவினார். அவரை எதிர்த்து அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட ஜெயக்குமார் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆனார்.

இந்த நிலையில், தி.மு.க அரசு பொறுப்பேற்ற சில வாரங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க-வில் தனது ஆதரவாளர்களுடன் தோப்பு வெங்கடாசலம் இணைந்தார். தி.மு.க-வில் இணைந்தபோதிலும், கட்சியின் கரைவேட்டியை அவர் கட்டவில்லை என்றும், கட்சிக்கொடியை காரில் கட்டுவதில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் இவர் தி.மு.க-வைவிட்டு விலகப்போகிறார் என உள்ளூரைச் சேர்ந்த சிலரால் தகவல் பரப்பிவிடப்பட்டதாகத் தெரிகிறது.
இந்த நிலையில் தோப்பு வெங்கடாசலம், தி.மு.க-விலிருந்து விலகி பாஜக-வில் இணையப்போவதாக நேற்று திடீரென பல செய்தி சேனல்களில் ஃப்ளாஷ் நியூஸ் ஓடியது. இந்தத் தகவல் தி.மு.க-வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சியினர் பலரும் தோப்பு வெங்கடாசலத்தின் தொலைபேசியைத் தொடர்பு கொண்டபோது அவரின் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்தது.
இதனால் இந்தச் செய்தியை ஊர்ஜிதப்படுத்த முடியாமல் கட்சியினர் தவித்தனர். இந்தத் தகவலை உறுதிபடுத்துவதற்காக நாமும் தொடர்ந்து அவரது செல்போனைத் தொடர்புகொண்டோம். அப்போதும் சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்ததால், அவருக்கு மெசேஜ் அனுப்பினோம்.
இதையடுத்து இரவு 7:45 மணி வாக்கில் தொடர்புகொண்ட தோப்பு வெங்கடாசலம் நம்மிடம், ``நான் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துவி்ட்டதாகச் சில செய்தி சேனல்களில் ஃபிளாஷ் நியூஸ் ஓடியது. அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தி. கடந்த ஒரு வாரமாகவே இது போன்ற செய்தியைச் சிலர் பரப்பிவருகிறார்கள். நான் இப்போதும் தி.மு.க-வில்தான் இருக்கிறேன். தவறான செய்தியை ஒளிபரப்பிய சேனல்களை அழைத்து நானே விளக்கம் கூறிவிட்டேன். இந்தத் தகவலை யாரும் நம்ப வேண்டாம்” என்றார்.

வதந்தி பரவ என்ன காரணம் என்று தோப்பு வெங்கடாசலத்திடம் கேட்டோம். அதற்கு விளக்கம் அளித்த அவர், ``நான் தி.மு.க கரைவேட்டி கட்டுவதில்லை, கட்சிக்கொடியை காரில் கட்டுவதில்லை என்ற காரணம் கூறி இவ்வாறு அவதூறான தகவலைப் பரப்புகின்றனர். நான் இப்போதும் தி.மு.க-வில்தான் இருக்கிறேன். இது போன்று ஒரு சிலரால் பரப்பப்படும் வதந்தி குறித்துக் கட்சியின் மேலிடத்துக்கு விளக்கம் அளிப்பேன்.
பகலில் கட்சிக்காரரின் இல்லத்தில் நடைபெற்ற துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டதால் என்னுடைய செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்திருந்தேன். வேறு காரணம் எதுவும் இல்லை” என்கிறார்.