Published:Updated:

`மக்கள் என்னைக் கேட்கிறார்கள்!’ - குடும்பத்தினர் மூலம் ட்வீட்டைப் பதிவு செய்த ப.சிதம்பரம்

சத்யா கோபாலன்

திகார் சிறையில் உள்ள சிதம்பரத்தின் கருத்துகளை அவரது குடும்பத்தினர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

P.Chidambaram
P.Chidambaram ( All India Radio )

ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தில் தன் தந்தை ப.சிதம்பரத்தின் உதவியுடன் மகன் கார்த்தி சிதம்பரம் ரூ.305 கோடி முறைகேடு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐயும், அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி அவரைக் கைது செய்துள்ளது சி.பி.ஐ.

P. Chidambaram
P. Chidambaram

முன்னதாக 14 நாள்கள் சி.பி.ஐ காவலில் வைக்கப்பட்ட சிதம்பரம் பிறகு நீதிமன்ற காவலுக்கு மாற்றப்படுவார் என்ற தகவல் வெளியானது. ஆனால், தன்னை திகார் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என சிதம்பரம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்க மறுத்த நீதிமன்றம், ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19-ம் தேதி வரை திகார் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

சப்பாத்தி... மரப்படுக்கை.. உறக்கமில்லா தவிப்பு! ப.சிதம்பரத்தின் திகார் இரவு

அதன்படி, அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருக்கும் சிதம்பரத்தின் கருத்துகளை அவர் சார்பாக குடும்பத்தினர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். அதில், “ என் சார்பாக கருத்து பதிவிட என் குடும்பத்தினரைக் கேட்டுக்கொண்டேன். ` இந்த வழக்கு தொடர்பான கோப்புகளைப் பரிந்துரை செய்த பல அதிகாரிகள் கைது செய்யப்படவில்லை. ஆனால் இறுதியாகக் கையொப்பமிட்ட நீங்கள் மட்டும் ஏன் கைது செய்யப்பட்டுள்ளீர்கள்?' என்று மக்கள் என்னைக் கேட்கின்றனர்.

அதிகாரிகள் யாரும் எந்தத் தவறும் செய்யவில்லை. எனவே யாரும் கைது செய்யப்படவேண்டும் என நான் கருதவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். சிதம்பரத்தின் இந்த ட்வீட், ஆறு உறுப்பினர்களைக் கொண்ட வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தில் உள்ள அதிகாரிகளின் பரிந்துரையின் பேரில் மட்டுமே அவர் கையொப்பமிட்டதாகவும் அதிகாரிகள் மேல் எந்தத் தவறும் இல்லை என்பதைக் காட்டுவதாகவும் சமூகவலைதளத்தில் கருத்து பகிரப்பட்டு வருகிறது.