Published:Updated:

`மன்னிப்பு கேட்க முடியாது!’ - பினராயி விஜயனுக்கு எதிராகக் கொதித்த ஜாமியா மாணவி ஆயிஷா

ஆயிஷா
ஆயிஷா

``நான் இஸ்லாமிய பெண்ணாக இருந்து என்னுடைய கருத்துகளைக் கூறியதற்காகவே என்மீது சி.பி.எம் கட்சியினர் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்று நினைக்கிறேன்” என்கிறார் ஆயிஷா.

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தீவிரமான போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டக்களத்தில் ஜாமியா மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தாக்குதலின்போது காவலர்களை விரல் நீட்டி எச்சரிக்கும் தொனியில் பேசிய ஜாமியா மாணவி ஆயிஷா ரென்னாவின் புகைப்படம் வைரலானது.

இந்நிலையில், கேரளாவில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நடைபெற்ற அனைத்துக்கட்சி பேரணியிலும் ஆயிஷா ரென்னா கலந்துகொண்டார்.

கேரளாவின் கொண்டோட்டியில் நடைபெற்ற இந்தப் பேரணியின்போது சி.பி.எம் மற்றும் அதன் மாணவர் சங்க உறுப்பினர்களால் ஆயிஷா ரென்னா அவமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பேரணியில் பேசிய ஆயிஷா ரென்னா, ``கடந்த டிசம்பர் 17-ம் தேதி குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகப் போராடி கைதான மாணவர்களை உடனடியாக பினராயி சர்கார் விடுவிக்க வேண்டும்” என முதல்வரை விமர்சித்துப் பேசியதாகக் கூறப்படுகிறது.

அவர் இவ்வாறு பேசி முடித்ததும் பினராயி விஜயனை விமர்சித்து பேசியதற்காக அந்த மாணவி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சி.பி.எம் மற்றும் அதன் மாணவர் சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதனால், பேரணியில் சலசலப்பு ஏற்பட்டது.

மாணவரைக் காக்க மனித கேடயமான மாணவிகள்! - ஜாமியா போராட்டத்தில் கவனம் ஈர்த்த கேரள மாணவி #video

இதுதொடர்பாக மலையாள ஊடகமான மாத்ருபூமிக்கு மாணவி ஆயிஷா அளித்துள்ள பேட்டியில், ``ஜாமியா பல்கலைக்கழக மாணவி என்ற முறையில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராகக் கொண்டோட்டியில் நடைபெற்ற பேரணியில் கலந்துகொள்ள என்னை அழைத்தனர். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் உரையாற்றவும் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் பேசும்போது, CAA-க்கு எதிராகப் போராடி கைதானவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறினேன். இதைத் தொடர்ந்து, சி.பி.எம் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தினர்” என்றார்.

ஆயிஷா
ஆயிஷா

தொடர்ந்து பேசிய ஆயிஷா, ``பினராயி விஜயனுக்கு எதிராகப் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர். நான் எனது நிலைப்பாட்டை மாற்ற மாட்டேன். மன்னிப்பு கேட்கவும் மறுத்துவிட்டேன். `உங்கள் கருத்துகளை உங்கள் வீட்டிலேயேயே வைத்துக் கொள்ளுங்கள்' என்றனர். தரக்குறைவான வார்த்தைகளாலும் விமர்சித்தனர். நான் இஸ்லாமியப் பெண்ணாக இருந்து என்னுடைய கருத்துகளை கூறியதற்காகவே என்மீது சி.பி.எம் கட்சியினர் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர் என்று நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

பேரணியில் ஆயிஷாவை நோக்கி சி.பி.எம் கட்சியினர் கொந்தளித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

`யார் அந்த ரெட் டி ஷர்ட், ப்ளூ ஜீன்ஸ்?' - ஜாமியா வன்முறையில் சிக்கிய 10 ரவுடிகள்! #CAA
அடுத்த கட்டுரைக்கு