Published:Updated:

`நான் அதுவரை அரசியல் பேச மாட்டேன்!' - 7 மாதங்களுக்குப் பின் விடுதலையான ஃபரூக் அப்துல்லா

ஃபரூக் அப்துல்லா
ஃபரூக் அப்துல்லா

``எனது விடுதலைக்காகக் குரல் கொடுத்த அனைத்து நாட்டு மக்களுக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். அதற்காக பிரார்த்தனை செய்த ஒவ்வொரு நபருக்கும் நன்றி கூற விரும்புகிறேன்" - ஃபரூக் அப்துல்லா

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. அம்மாநிலத்தை ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் போராட்டங்களைத் தடை செய்தல், பேரணிகளைத் தடை செய்தல், இணையதளச் சேவை மற்றும் மொபைல் சேவைகளைத் தடை செய்தல் போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு விதித்திருந்தது. மேலும், முக்கிய அரசியல் தலைவர் பலரையும் தடுப்புக் காவலிலும் வைத்திருந்தது.

ஃபரூக் அப்துல்லா
ஃபரூக் அப்துல்லா

தடுப்புக்காவலில் இருந்த காஷ்மீரின் முக்கிய அரசியல் வாதிகள் தொடர்ந்து விடுவிக்கப்பட்டு வந்தாலும், முன்னாள் முதலமைச்சர்களான ஃபரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா மற்றும் மெஹ்பூபா முப்தி உட்பட முக்கிய தலைவர்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியானது. இவர்களை விடுவிக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் உட்பட பலரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு ஃபரூக் அப்துல்லாவை ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு தற்போது தடுப்பு காவலில் இருந்து விடுதலை செய்து அறிவித்துள்ளது.

2 ஆண்டுகள் வீட்டுச் சிறை... காஷ்மீர் தலைவர்கள்மீது பாய்ந்த பொது பாதுகாப்புச் சட்டம் என்ன சொல்கிறது?

விடுதலையான பின்னர், தனது வீட்டுக்கு வெளியில் கூடியிருந்த செய்தியாளர்களை நோக்கி, ``நான் உணர்வதைச் சொல்ல என்னிடம் இன்று வார்த்தைகள் இல்லை. நான் சுதந்திரமாக இருக்கிறேன்!" எனக் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ``எனது விடுதலைக்காகக் குரல் கொடுத்த அனைத்து நாட்டு மக்களுக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். அதற்காக பிரார்த்தனை செய்த ஒவ்வொரு நபருக்கும் நன்றி கூற விரும்புகிறேன். பல்வேறு கட்டடங்களில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள உமர் அப்துல்லா, மெஹ்பூபா முப்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அனைவரையும் விடுவித்தால் மட்டுமே இந்த சுதந்திரம் முழுமை அடையும். அவர்களை விடுதலை செய்யவும் அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என நம்புகிறேம்" என்று கூறியுள்ளார்.

ஃபரூக் அப்துல்லா!
ஃபரூக் அப்துல்லா!

மேலும், ``அனைத்து தலைவர்களும் விடுதலை செய்யப்படும் வரை எந்தவிதமான அரசியல் கருத்துகளையும் தெரிவிக்க மாட்டேன். என்னுடைய மக்கள் சுதந்திரம் பெறுவார்கள் என நம்புகிறேன். நீண்ட காலமாக நாம் போராடி வரும், நமக்கு தேவையான சுதந்திரம் கிடைக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்வோம்" என்றும் குறிப்பிட்டுள்ளார். காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா விடுதலை செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். மேலும், மற்ற தலைவர்களையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.

`உண்மையில் இது உமர் அப்துல்லா தானா?!' - வைரல் போட்டோவால் கலங்கிய மம்தா
அடுத்த கட்டுரைக்கு