Published:Updated:

`அரச குடும்பம், சாதிப் பின்னணி இன்றி கிடைத்த நாடாளும் வாய்ப்பு!’ - மோடி பெருமிதத்துக்குப் பின்னால்?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி ( pmindia.gov.in )

``நான் எந்தவித அரசியல் அல்லது அரச குடும்பத்துப் பின்னணியும் இல்லாத ஒரு சாதாரணப் பொது மனிதன். சாதி அடிப்படையிலான அரசியல் ஆதரவில்கூட நான் இருந்ததில்லை!” - மோடி

`நானொரு ஏழைத்தாயின் மகன்', `டீ விற்ற சாதாரண மனிதன்', `வறுமையை மிக அருகிலிருந்து பார்த்தவன்', `பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து வந்தவன்' எனத் தேர்தல் பிரசார மேடைகள் முதல் `மன் கி பாத்’ உரையாடல்கள் வரை பிரதமர் மோடி தன்னைப் பற்றிக் கூறியவை இவை. சமீபத்தில், குஜராத்தில் மாணவர் விடுதி கட்டும் அடிக்கல் நாட்டுவிழாவில் நரேந்திர மோடி பேசிய பேச்சு கவனம் ஈர்த்திருக்கிறது. அந்தப் பேச்சையும், அதன் பின்னணியையும் சற்று உற்றுநோக்குவோம்.

மோடி
மோடி

குஜராத் மாநிலம், சூரத் புறநகர் பகுதியில், மாணவர் விடுதி கட்டும் அடிக்கல் நாட்டுவிழாவில், பிரதமர் மோடி காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துகொண்டு திட்டத்தைத் தொடக்கிவைத்தார்.

நிகழ்ச்சியின்போது மோடி பேசியது என்ன?

``நான் எந்தவித அரசியல் அல்லது அரச குடும்பத்துப் பின்னணியும் இல்லாத ஒரு சாதாரணப் பொது மனிதன். சாதி அடிப்படையிலான அரசியல் ஆதரவில்கூட நான் இருந்ததில்லை. ஆனாலும், பொதுமக்கள் உங்களின் ஆசீர்வாதம் 2001-ம் ஆண்டு குஜராத்துக்குச் சேவை செய்வதற்கான வாய்ப்பை எனக்கு வழங்கியது. மேலும், உங்கள் ஆசீர்வாதத்தின் சக்தியால் 20 ஆண்டுகளுக்குப் பிறகும் நான் நாட்டுக்குச் சேவை செய்துவருகிறேன். முதலில் குஜராத் மக்களுக்குச் சேவை செய்த நான், இப்போது நாடு முழுவதுக்கும் சேவை செய்கிறேன்"
- எனப் பெருமிதமாகக்கூறினார் பிரதமர் மோடி.

மேலும், ``சாதி, மத நம்பிக்கைகள் நமக்கு இடையூறாக இருக்க அனுமதிக்கக் கூடாது என சர்தார் வல்லபாய் படேல் கூறியிருக்கிறார். நாம் அவரின் பாதையில் நடக்க வேண்டும். நாம் அனைவரும் இந்தியாவின் புதல்வர்கள். நாம் நாட்டைநேசிக்க வேண்டும். வல்லபாய் படேலின் கொள்கைகளை வலுப்படுத்துவதில் குஜராத் மக்கள் எப்போதும் உறுதியாக இருக்கின்றனர்" என்றார். மேலும், அவர் சங்கல்சந்த் படேல், கண்பத் படேல், மோகன் லால்ஜி படேல் உள்ளிட்ட குஜராத் தலைவர்களைப் பற்றியும் பெருமையாகப் பேசினார்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

``குஜராத்தில் நல்ல தரமான பள்ளிகள், ஆசிரியர்கள் இல்லாத ஒரு காலம் இருந்தது. குறிப்பாக, முன்பு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் இல்லாத காரணத்தால் மாணவிகள் பள்ளிப்படிப்பைவிட்டு வெளியேறும் நிலை இருந்தது. ஆனால், பா.ஜ.க ஆட்சி அமைந்த பின்னர், முன்னோர் பலரின் ஆசீர்வாதம், மூத்த கல்வியாளர்களின் ஆலோசனைகள் போன்றவற்றால் அந்த நிலையை மாற்றினோம். இப்போது சிறந்த பள்ளிக்கூடங்களும், சிறந்த ஆசிரியர்களும் நம்மிடையே உருவாகியிருக்கின்றனர். படிப்பைப் பாதியிலேயே கைவிட்டுச் செல்லும் மாணவிகளின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்திருக்கிறது" என்றும் மோடி அந்த விழாவில் பேசினார்.

குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்றபோது...
குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவியேற்றபோது...

மோடியின் பெருமிதத்துக்குப் பின்னால் என்ன இருக்கிறது?

பேரிடர் காலத்திலும், தேர்தல் களத்திலும் மோடியின் பேச்சுகளில் ஒரு தனித்துவம் தெரியும். மக்களின் மனதில் உணர்வுபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சியாக அது அமைந்திருக்கும். குறிப்பாக 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது பாஜக பிரதமர் வேட்பாளராகப் போட்டியிட்ட மோடி, ``நான் சாதாரண டீ விற்கும் சிறுவனாக இருந்து, குஜராத் முதல்வர் பதவி வரை உயர்ந்திருக்கிறேன்" என உருக்கமாகப் பேசினார். அதேபோல, ``நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவன் என்பதாலேயே, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் என்னை விமர்சிக்கின்றன" என்றார். தேர்தல் களத்தில் பிரதான பிரசாரமாக, ஆவிபறந்த அந்த பேச்சுகள் பாஜக-வுக்கான வாக்குகளை அள்ளித்தந்தன. மோடி பிரதமரானார்.

மோடி
மோடி

கிட்டத்தட்ட அதேபோல் உள்ள ஒரு சூழ்நிலையில்தான் மோடி தற்போது, ``அரசியல், அரச குடும்பம், சாதிரீதியிலான அரசியல் ஆதரவு என எந்தவிதப் பின்னணியும் இல்லாத, ஒரு சாதாரணப் பொதுமனிதனாக இருந்த எனக்கு நாடாளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது" எனப் பேசியிருக்கிறார். அதுவும், தனது சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில், சூரத் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

`குளோபல் ஹங்கர் இன்டெக்ஸ் 2021' - இந்தியாவின் பட்டினி நிலவரத்தை மோடி அரசு ஏற்க மறுப்பது சரியா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குஜராத் சட்டமன்றத் தேர்தல்:

வளர்ந்துவரும் எதிர்க்கட்சிகள்:

இதற்கான் பின்னணி மிக எளிமையானது. அது குஜராத் சட்டமன்றத் தேர்தல்! அடுத்த ஆண்டு 2022-ல் குஜராத் உள்ளிட்ட ஆறு மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதை முன்னிட்டுட்டு இப்போதே பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியிருக்கின்றன.

குஜராத்
குஜராத்
Mapsofindia.com

குறிப்பாக, பா.ஜ.க-வின் கோட்டையாகக் கருதப்படும் குஜராத் மாநிலத்தில் ஆம் ஆத்மி செல்வாக்கு பெற்றுவருகிறது. கடந்த பிப்ரவரி மாத, நடைபெற்ற குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கணிசமான இடங்களில் வென்றது. குறிப்பாக, குஜராத், சூரத் மாநகராட்சித் தேர்தலில் மட்டும் 27 இடங்களில் வெற்றிபெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது ஆம் ஆத்மி கட்சி.

அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்

அதேபோல், காங்கிரஸ் கட்சியும் இழந்த செல்வாக்கை மெல்ல மீட்டுவருகிறது. குஜராத் மாநில சுயேச்சை எம்.எல்.ஏ-வாகவும், பாஜக-வின் தீவிர எதிர்ப்பாளராகவும் இருந்துவரும் ஜிக்னேஷ் மேவானி தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்திருக்கிறார். மேலும், 2022 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார்.

2022 ஆறு மாநில தேர்தல்: வட இந்தியாவில் சத்தமின்றி வளர்ந்துவருகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?!

சரிந்துவருகிறதா பா.ஜ.க செல்வாக்கு?

குஜராத் மாநில மக்கள்தொகையில் 15% படேல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மாநிலத்தின் அரசியல், பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் பிரதான சக்தியாக இவர்கள் விளங்கிவருகின்றனர். பாஜக-வின் வாக்குவங்கியில் நான்கில் ஒரு பங்கு படேல் சமூகத்திடமிருந்தே பெறப்படுகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி கொண்டுவந்த ஜி.எஸ்.டி., பண மதிப்பிழப்பு நடவடிக்கை போன்ற பல்வேறு நடவடிக்கைகள் படேல் சமூகத்தினருக்கு பாஜக மீதிருந்த நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியது என்கின்றனர். மேலும், கேசுபாய் படேலுக்குப் பிறகு குஜராத் அரசியலில் தங்கள் சமுதாயத்துக்கு அங்கீகாரம் இல்லாததுபோல உணர்ந்தனர். விளைவு, தேர்தலில் எதிரொலித்தது. பாஜக அடுத்தடுத்த தேர்தல்களில் வெற்றிபெற்றாலும் முன்பிருந்ததைவிட வாக்குசதவிகிதமும், வெற்றிபெற்ற இடங்களும் கணிசமாகக் குறைந்தன. அதேபோல, பட்டியலின மக்கள், சிறுபான்மையின மக்களிடமும் பாஜக-வின் வாக்குவங்கி வெகுவாக சரியத்தொடங்கியது.

சர்தார் வல்லபாய் படேல் சிலை
சர்தார் வல்லபாய் படேல் சிலை

அதுமட்டுமல்லாமல், பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வால் ஒட்டுமொத்த குஜராத் மக்களும் பெருமளவு பாதிப்படைந்து வருகின்றனர். உதாரணமாக சமீபத்தில், குஜராத் மாநிலத்தின் சூரத் நகர பொதுமக்கள், நவராத்திரி விழாவில் காஸ் சிலிண்டர்களைத் தூக்கியபடி கர்பா நடனம் ஆடியது தேசிய அளவில் கவனம் பெற்றது. மோடியின் சொந்த மாநிலத்திலேயே பாஜக-வுக்கு ஆதரவு குறைந்துவருகிறது என்ற எதிர்க்கட்சியினரின் விமர்சனத்துக்கும் ஆளானது பாஜக.

மோடி
மோடி

மீட்டெடுக்கும் யுக்தி:

இந்த அடிப்படையில், எதிர்க்கட்சிகளின் தேர்தல் அணிவகுப்பு, அதிகரித்துவரும் மாநில மக்களின் அதிருப்தி போன்றவற்றை சமாளிப்பதற்காக பாஜக பல்வேறு அவசர நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. குஜராத் மாநிலத்தில் பாஜக-வின் பிரதான வாக்குவங்கியாக இருக்கும் படேல் சமூக மக்களின் வாக்குகளைத் தக்கவைப்பதற்காக, விஜய் ரூபானியை மாற்றி, பூபேந்திர படேலை குஜராத் முதல்வராக ஆக்கியிருக்கிறது. மாற்றியமைக்கப்பட்ட புதிய மத்திய அமைச்சரவையிலும் படேல் சமூகத்தினருக்கு வாய்ப்பளித்திருக்கிறது.

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல்
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல்

மேலும், படேல் சமூகத்தினரின் வணிக, சமூக, கல்வி நலனுக்காக `சர்தார்தம்' எனும் கட்டடம் ரூ.200 கோடி செலவில் கட்டப்பட்டு, கடந்த செப். 11-ம் தேதி, பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்டது.

`விஜய் ரூபானியின் விலகலும் பூபேந்திர படேல் நுழைவும்'- குஜராத்தில் பாஜக-வின் அரசியல் வியூகம் இதுதான்!

படேல் சமூகத்தின் வாக்குவங்கியை குறிவைத்தே மோடியின் பேச்சில், `வல்லபாய் படேல், சங்கல்சந்த் படேல், கண்பத் படேல், மோகன் லால்ஜி படேல் போன்ற குஜராத்தின் படேல் தலைவர்கள்' பிரதானமாக இடம்பெற்றிருக்கின்றனர்.

பாஜக
பாஜக

அதேபோல, பிரதமர் மோடி பேசிய மாணவர் விடுதி அடிக்கல் நாட்டுவிழா, குஜராத்தின் சூரத் நகரில் நடந்திருக்கிறது. இந்தப் பகுதியில்தான் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. மேலும், பாஜக அரசைக் கண்டித்து பொதுமக்கள் நிகழ்த்திய நவராத்திரி `கர்பா' நடனமும் சூரத்தில்தான் அரங்கேறியிருக்கிறது. எனவே, சூரத் மக்களிடமிருக்கும் அதிருப்தியைப் போக்கி, செல்வாக்கை மீட்டெடுப்பதற்கான முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.

மோடி
மோடி

மேலும், `சாதி, மத நம்பிக்கைகள் நமக்கு இடையூறாக இருக்க அனுமதிக்கக் கூடாது' என சர்தார் வல்லபாய் படேலின் பேச்சை மேற்கோள் காட்டியிருப்பதன் மூலம் சிறுபான்மையினர், பட்டியலின மக்களின் வாக்குவங்கியையும் கவனத்தில் கொண்டிருக்கிறார். இறுதியாக, `அரசியல் அல்லது அரச குடும்பத்துப் பின்னணி, சாதிப் பின்னணி என எந்தப் பின்னணியும் இல்லாத எனக்கு நாட்டை ஆளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது' என மோடி பேசியிருக்கிறாரே தவிர, தனக்கு `மதப் பின்னணி இல்லை' எனக் கூறவில்லை. எனவே, அவரது பேச்சு தேர்தலுக்காகவே எனச் சொல்கின்றனர் எதிர்க்கட்சியினரும், அரசியல் பிரமுகர்களும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு