Published:Updated:

``சத்ரபதி சிவாஜி கனவு கண்ட மகாராஷ்டிராவை உருவாக்குவோம்!’’ - உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவியேற்கும் விழா டிசம்பர் 1ஆம் தேதி நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா அரசியலில் கடந்த சில நாள்களாக நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜ.கவுக்குப் பெரும்பான்மை இருந்தும் ஆட்சியமைக்க முடியாத சூழல் இருந்தது. சுழற்சி முறையில் முதல்வர் பதவியைக் கேட்டது சிவசேனா. இதற்கு பா.ஜ.க தரப்போ மறுத்துவிட்டது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேசியது சிவசேனா. உத்தவ் தாக்கரேதான் முதல்வர் என்று பேசப்பட்டு வந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக இருந்த அஜித் பவார், பா.ஜ.க-வுக்கு ஆதரவு தெரிவித்தார். தேவேந்திர பட்னாவிஸ் முதல்வரானார். இதைச் சற்றும் எதிர்பாராத சிவசேனா நீதிமன்றம் சென்றது. இந்த வழக்கில் இன்று வெளியான தீர்ப்பில் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் நாளை (27.11.2019) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும். மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.

தேவேந்திர பட்னாவிஸ், பகத்சிங் கோஷ்யாரி, அஜித் பவார்
தேவேந்திர பட்னாவிஸ், பகத்சிங் கோஷ்யாரி, அஜித் பவார்

இதையடுத்துதான் முதல்வர் பட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார் இருவரும் ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா கடிதத்தை ஆளுநரைச் சந்தித்து பட்னாவிஸ் நேரில் அளித்தார். மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் இடைக்கால சபாநாயகராக பா.ஜ.கவின் காளிதாஸ் கொலம்ப்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் எம்.எல்.ஏக்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.

`நீதிமன்றம் 30 மணி நேரம் வழங்கியது; எங்களுக்கு 30 நிமிடமே போதும்!’- சஞ்சய் ராவத்

இந்நிலையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளின் எம்.எல்.ஏக்கள் கூட்டம் மும்பையில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சியின் தலைவராக உத்தவ் தாக்கரே ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே கூட்டணி எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உத்தவ் தாக்கரே ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார். உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவியேற்கும் விழா டிச.1ஆம் தேதி நடைபெறும் எனக் கூறப்படுகிறது.

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

மும்பையில் நடந்த கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, “தேவேந்திர ஃபட்னாவிஸ் எழுப்பிய அனைத்துக் கேள்விகளுக்கும் நான் பதிலளிக்க தயாராகவுள்ளேன். நான் எதற்கும் பயப்படவில்லை. உங்களுக்கு வேண்டும் என்றால் அணைத்துக்கொள்வீர்கள் வேண்டாம் என்றால் விட்டுச்செல்வீர்கள். நீங்கள் எங்களை ஒதுக்கப்பார்த்தீர்கள். உண்மையான ஜனநாயகம் இப்போது நடந்துள்ளது. அனைவரும் இணைந்து விவசாயிகளின் துயரை துடைப்போம். சத்ரபதி சிவாஜி கனவு கண்ட மகாராஷ்டிராவை மீண்டும் உருவாக்குவோம். நான் ஒருபோதும் மாநிலத்தை வழிநடத்துவேன் என்று கனவு கண்டதில்லை. சோனியா காந்தி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஒருவருக்கொருவர் நம்பிக்கை வைத்து நாட்டுக்கு ஒரு புதிய திசையை வழங்குவோம்” என்றார்.