காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவைத் தொகுதி எம்.பி-யுமான ராகுல் காந்தி, இஸ்ரேலிய ஸ்பைவேர் பெகாசஸ் மூலம் தன்னையும் பல அரசியல்வாதிகளையும் மத்திய அரசு உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டியிருக்கிறார். இது தொடர்பாக, லண்டனிலுள்ள கேம்ப்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேசிய அவர், ``என்னுடைய போனில் பெகாசஸ் இருந்தது. அதிக எண்ணிக்கையிலான அரசியல்வாதிகளின் போனில் பெகாசஸ் இருந்தது.
உளவுத்துறை அதிகாரிகள், 'உங்கள் போனில் நீங்கள் பேசுவது பதிவுசெய்யப்படுகிறது, கவனமாக இருங்கள்' என என்னை அழைத்து எச்சரித்தனர். இது நாங்கள் உணரும் நிலையான அழுத்தம்தான். என்மீது கிரிமினல் வழக்குகள் போட முடியாத சூழல் இருப்பதால், பல குற்றவியல் வழக்குகள் (Criminal Liable Cases) பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.
எதிர்க்கட்சி என்ற வகையில், ஊடகங்கள்மீதும், ஜனநாயகக் கட்டமைப்பின்மீதும் இது போன்ற தாக்குதல் நடத்தப்படும்போது மக்களுடன் தொடர்புகொள்வது மிகவும் கடினம். அரசியல்வாதிகள் கண்காணிப்பில் இருக்கின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள் பலரது செல்போன்கள் பெகாசஸ் கண்காணிப்பில் இருக்கின்றன" என்றார்.