Published:Updated:

`சுஜித்தை மீட்க முடியாத குற்ற உணர்ச்சியில் தவிக்கிறேன்!' - நாடாளுமன்றத்தில் கலங்கிய ஜோதிமணி

ஜோதிமணி
ஜோதிமணி

`ஆழ்துளைக் கிணற்றில் சிறுவர்கள் விழுந்து உயிரிழப்பது தமிழகத்தில் தொடர்கதையாகி வருகிறது' எனக் கரூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ஜோதிமணி மக்களவையில் பேசினார்.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி டிசம்பர் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை ஐ.ஐ.டி-யில் கேரள மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக தி.மு.க எம்.பி கனிமொழி நேற்று கேள்வி எழுப்பினார். ஐ.ஐ.டி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் நிகழ்ந்த 52 தற்கொலைகள் பற்றியும் அக்கல்வி நிறுவனங்களில் சாதி, மத பாகுபாடுகளுக்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளை அனுமதிக்கக் கூடாது என்பது குறித்தும் கேள்விகளை முன்வைத்தார்.

சுஜித்
சுஜித்

இந்நிலையில் இன்று பேசிய காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுஜித் இறந்த விவகாரம் தொடர்பாக மக்களவையில் பேசினார். ஜோதிமணி பேசுகையில், ``என் தொகுதியில் நடந்த வலி மிகுந்த சம்பவத்தை இந்த சபையின் முன் கூறுகிறேன். மணப்பாறைக்கு அருகில் உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 2 வயதுக் குழந்தை சுஜித் வில்சன் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தான். வெளிப்படையாகக் கூறுகிறேன் அந்தச் சிறுவன் எத்தனை நாள் இருந்தான் எனத் தெரியாது.

`ஐ.ஐ.டி பேராசிரியர்கள் மீது ஏன் எஃப்.ஐ.ஆர் பதிவாகவில்லை?!' -நாடாளுமன்றத்தில் கொந்தளித்த கனிமொழி

நான்கு நாள்களாக மீட்புப்பணிகள் நடந்தன. அந்தக் குழந்தை தண்ணீர், காற்று, உணவு என எதுவும் கிடைக்காமல் தவித்துக்கொண்டிருந்தது. அந்த அழ்துளைக் கிணற்றின் அருகே குழந்தையின் அம்மா கண்ணீரோடு காத்திருந்தார். அப்பா, அம்மா என வார்த்தைகளைக் கேட்க முடிந்தது. அதன்பின் இதயத்துடிப்புகளை மட்டுமே கேட்டோம். அதுதான் அந்தக் குழந்தையின் கடைசி நிமிடமாக இருக்கும் என நினைக்கிறேன். அந்தக் குழந்தையின் தாய், என் மீது சாய்ந்துகொண்டார். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, நான் பல நாள்கள் தூக்கத்தைத் தொலைத்தேன். அந்தக் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. ஆயிரக்கணக்கான மக்கள் அந்த இடத்தில் திரண்டனர். அவர்களின் வேண்டுதல் எல்லாம் அந்தக் குழந்தை உயிருடன் மீட்க வேண்டும் என்பதுதான். அத்தனை மக்களும் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித் மீட்புப் பணி
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுஜித் மீட்புப் பணி
தே.தீட்ஷித்

தீயணைப்புத்துறையினர், பேரிடர் மீட்புப் படை, காவல்துறை, அண்ணா பல்கலைக்கழக வல்லுநர்கள், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தவர்களை மீட்கும் தனியார் குழுக்கள், ஓ.என்.ஜி.சி, எல்&டி போன்ற நிறுவனங்கள் குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போதுதான் ஒன்று புரிந்தது. நாம் மற்றவர்களைச் சார்ந்திருக்கிறோம். ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதற்கான கருவிகள் நம்மிடம் இல்லை என்பது புரிந்தது. ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் அந்தக் குழந்தைக்காக பிராத்தனை செய்தனர். இதன் காரணமாக சுஜித் தேசிய அளவில் கவனம் பெற்றான். அந்தக் குழந்தையை உயிருடன் மீட்க முடியவில்லை என்ற குற்ற உணர்ச்சி எனக்கு இருக்கிறது. அந்தச் சூழ்நிலையில் என்னால் அந்தக் குழந்தையின் பெற்றோரை எதிர்கொள்ள முடியவில்லை. மீட்புப் பணிகளின் கடைசி நிமிடத்தில் அந்தச் சிறுவன் அழுகிய சடலத்தின் வாடையை மட்டுமே உணர முடிந்தது.

``என் மகனே கடைசியாக இருக்கட்டும்!’’ - கலங்கும் சுஜித் வில்சனின் தாய் கலாமேரி

தமிழக அரசு, சரியான நேரத்தில் மீட்புப்பணிகளில் கவனம் செலுத்தியிருந்தால் குழந்தையை உயிரோடு மீட்டிருக்க முடியும். அந்தக் குழந்தை 13 அடி மற்றும் 27 அடிகளில் இருந்தபோது பேரிடர் மீட்புப் படையின் உதவியை நாடி இருக்கலாம். ஆனால், அந்தக் குழந்தை 80 அடி ஆழத்துக்குச் சென்ற பின்னர்தான் மீட்புப்பணிகள் தொடங்கியது. இந்த ஒரு மரணம் மட்டுமல்ல; இது போன்ற 12 குழந்தைகள் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து மரணமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நடந்து ஒரு வாரத்தில் ஹரியானாவில் 5 வயது சிறுமி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து மரணமடைந்தார். ஆழ்துளைக் கிணற்றில் இதுபோன்று சிறுவர்கள் விழுந்து உயிரிழப்பது தமிழகத்தில் தொடர்கதையாகி வருகிறது” என தனது ஆதங்கத்தைப் பதிவுசெய்தார்.

அடுத்த கட்டுரைக்கு