Published:Updated:

புதுச்சேரி: `அப்பாவை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன்!’ - ராகுல் காந்தி உருக்கம்

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

“இந்தியாவை 4 தொழில் நிறுவனங்கள் மட்டுமே வழி நடத்தும்போது பொதுமக்கள் எப்படி தொழில் செய்ய முடியும்? விவசாயிகள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாப்பது தேசிய கடமையாக கருதுகிறேன்” - ராகுல் காந்தி

தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிப்ரவரி 17-ம் தேதி(இன்று) புதுச்சேரிக்கு வருகை தந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி மீனவ கிராமத்து மக்களை சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அதையடுத்து பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரிக்குச் சென்று மாணவிகளுடன் கலந்துரையாடினார். மாணவிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய அவர், “பெண்களுக்கு வேலை வாய்ப்பு, கல்வி உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் 50% என்பதைவிட 60% இட ஒதுக்கீடு வழங்குவது அவசியம்.

கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடிய ராகுல் காந்தி
கல்லூரி மாணவிகளிடம் கலந்துரையாடிய ராகுல் காந்தி

நீதிமன்றங்கள், ஊடகம், மக்களவை, மாநிலங்களவை, பேரவைகள் உள்ளிட்டவற்றை இளம்பெண்கள் அதிகளவில் ஆக்கிரமித்து, அவை சுயமாக செயல்படும்படி செய்தால் ஜனநாயகம் வலுப்படும். நாட்டில் பல்வேறு கலாசாரங்கள், மொழிகள் உள்ளன. அவை அனைத்தும் முழுமையாக பாதுகாக்க வேண்டும். மொழி, கலாசாரம் ஆகியவற்றை மற்றவர்கள் மீது நான் திணிக்கமாட்டேன். தமிழ் கலாசாரத்தை மதிக்கிறேன். பல்வேறு சிந்தனைகளை கொண்டது தான் இந்தியா. ஒற்றை சிந்தனைக்கு இடமில்லை.

பெண்கள் வன்முறையால் பாதிக்கப்படும்போது தாங்களாகவே ஆண்களுக்கு எதிராக வெகுண்டு எழ வேண்டும். பெண்களுக்கு பெண்களால் தான் பாதுகாப்பு அளிக்க முடியும். பெண்கள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டும். பெண்களுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற சிந்தனையை சமுதாயத்தில் உருவாக்கும்போது தான் பெண்களுக்கு முழு பாதுகாப்பு கிடைக்கும். குடும்பத்தில் பெண்களுக்கு நிதி அதிகாரம் வழங்க வேண்டும். கொரோனா காலகட்டத்தில் 5% தொழிலதிபர்களுக்கு ரூ.1.57 லட்சம் கோடி வரிச்சலுகைகளை மத்திய அரசு வழங்கியது. ஆனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பிச் செல்வதற்கு பேருந்து வசதியைக்கூட செய்துதரவில்லை.

ராஜீவ்காந்தி
ராஜீவ்காந்தி

என் அப்பா ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனிப்பட்ட முறையில் யார் மீதும் எனக்கு கோபமோ, வன்மமோ இல்லை. அப்பாவை இழந்தது மிகப்பெரிய கடினமான தருணம். அதில் தொடர்புடையவர்களை நான் மன்னித்துவிட்டேன். வன்முறை மூலம் நம்மிடம் இருந்து எதையும் எடுத்துவிட முடியாது. இந்தியாவை 4 தொழில் நிறுவனங்கள் மட்டுமே வழி நடத்தும்போது பொதுமக்கள் எப்படி தொழில் செய்ய முடியும்? விவசாயிகள், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாப்பது தேசிய கடமையாக கருதுகிறேன்.

இவை மூலம் தான் இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பு கிடைக்கிறது. வேலைவாய்ப்புக்கு முதுகெலும்பாக இருக்கும் இவற்றை முறித்துவிட்டால் வேலைவாய்ப்புகள் பறிபோகும். ஆனால், இப்போது விவசாயம், சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனால் தான் வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்க்கிறோம்" என்றார். இக்கூட்டத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கும் மேலாக இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.

புதுச்சேரி: `நாம் பிரித்தாளப்படுகிறோம்; மக்கள் ஒன்றிணைவதே தீர்வு!’ - ராகுல் காந்தி

கலந்துரையாடலின் போது ஒவ்வொரு மாணவியாக ‘சார்’ என்று அழைத்து கேள்விகளை எழுப்பினர். அப்போது ‘என்னை சார் என்று அழைக்க வேண்டாம். ராகுல் என்றே அழையுங்கள்’ என்றார். அப்போது அங்கிருந்த மாணவி ஒருவர் ராகுல் காந்தியிடம் 'உங்களை அண்ணா என்று அழைக்கலாமா?' என்று கேட்டார். அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். தொடர்ந்து, கலந்துரையாடலில் கேள்வி கேட்ட மாணவிகள் சிலர் 'அண்ணா' என்று ராகுல் காந்தியை அழைத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு