Published:Updated:

`தமிழக மக்களை எனக்குப் பிடிக்கும்; புலியைப் போன்றவர்கள்’ - கருணாநிதி சிலை திறப்பு விழாவில் மம்தா!

கலிலுல்லா.ச

தமிழக மக்களை எனக்குப் பிடிக்கும். காரணம் அவர்கள் மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை. தமிழக மக்கள் புலியைப்போன்றவர்கள்.

கருணாநிதி சிலை திறப்பு
கருணாநிதி சிலை திறப்பு

தி.மு.க முன்னாள் தலைவரும், தமிழக அரசியலின் முதுபெரும் தலைவருமான கருணாநிதி கடந்தாண்டு உடல்நலக்குறைவால் காலமானார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று காலை தி.மு.க சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் பங்கேற்றனர். இதையடுத்து, மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

கருணாநிதி நினைவிடத்தில் மம்தா
கருணாநிதி நினைவிடத்தில் மம்தா

இதையடுத்து முரசொலி அலுவலக வளாகத்தில் கருணாநிதியின் வெண்கலச்சிலை திறக்கப்பட்டது. இந்தச் சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து, தி.மு.க முன்னணித் தலைவர்கள், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள், கருணாநிதியின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.

காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா காஷ்மீர் பிரச்னையில் வீட்டுக் காவலில் இருப்பதால் அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. தொடர்ந்து, ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கருணாநிதி நினைவுதின கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மம்தா பானர்ஜி, ``அனைவருக்கும் வணக்கம். நான் நிறையவே தமிழ் கற்க வேண்டும்.

சிலை திறப்பு நிகழ்வு
சிலை திறப்பு நிகழ்வு

இனி நான் தமிழகம் வரும்போது கட்டாயம் தமிழ் படித்துவிட்டு வருவேன். கலைஞர் மறைந்திருந்தாலும், அவர் நம் இதயங்களில் வாழ்ந்துவருகிறார். கருணாநிதியின் போராட்டக்குணத்துக்கும் ஜனநாயக வேட்கைக்கும் நான் தலைவணங்குகிறேன். எப்போதும் கூட்டாட்சி தத்துவத்துக்குக் குரல் கொடுத்தவர் அவர். நாம் அனைவருமே இந்தியர்கள். ஆனால், நமக்கென்று தாய்மொழி உள்ளது.

நானும், ஸ்டாலினும் இந்தியர்கள்தான். அதற்காக எங்களுடைய தனிப்பட்ட உரிமைகளை விட்டுத்தர முடியாது. தமிழக மக்களை எனக்குப் பிடிக்கும். காரணம் அவர்கள் மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை. தமிழக மக்கள் புலியைப்போன்றவர்கள். தைரியானவர்கள்கூட. சிறந்த நோக்கத்துக்காக போராடுகிறீர்கள். உயிரை துச்சமென மதித்து போராடுகிறீர்கள். அடுத்தமுறை தமிழகம் வரும்போது நான் தமிழை கற்றுக்கொள்கிறேன். எப்போதும் ஜெய் பெங்கால் என்று கூறுவேன், தற்போது ஜெய் தமிழ்நாடு என்று கூறுகிறேன்.

ஸ்டாலின் - மம்தா பானர்ஜி
ஸ்டாலின் - மம்தா பானர்ஜி

காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா நம்முடன் கலந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால், அவர் தற்போது எப்படியிருக்கிறார், என்பது தெரியவில்லை. கருணாநிதியின் வழியில் நின்று நாட்டில் நிலவும் சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம். தமிழில் எனக்கு `வணக்கம்’ என்ற வார்த்தை மிகவும் பிடிக்கும்” என்று கூறியவர், `அனைவருக்கும் வணக்கம்’ என்று தமிழில் பேசி உரையை முடித்துக்கொண்டார்.