Published:Updated:

`என்னுடைய மூத்த மகனை இழந்துவிட்டேன்' - ராமதாஸிடம் கண்கலங்கிய அமைச்சர் சி.வி.சண்முகம்

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் தங்கை மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்

தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரி வள்ளி, 22 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துவிட்டார். அவரது கணவர் இளங்கோவன், இன்னொரு திருமணம் செய்துகொண்டு புதுச்சேரியில் செட்டிலாகிவிட்டார். இந்தத் தம்பதியின் 4 வயதான மகன் லோகேஷ், திண்டிவனத்திலுள்ள அமைச்சர் சி.வி.சண்முகத்தின் வீட்டிலேயே வளர்ந்தார். அப்பா, அம்மா இல்லாத குறை தெரியக்கூடாது என்பதற்காக, அமைச்சர் சி.வி.சண்முகமும் அவரது அண்ணன் ராதாகிருஷ்ணனும் லோகேஷை தங்கள் சொந்த மகனைப் போலவே வளர்த்தனர். ஆனாலும், பெரிய மாமா ராதாகிருஷ்ணனுடன் கூடுதல் பாசத்துடன் இருந்துள்ளார் லோகேஷ்.

லோகேஷ்
லோகேஷ்

சில மாதங்களுக்கு முன் லோகேஷ் ஆசைப்பட்டுக் கேட்டதால், 34 லட்சம் ரூபாய்க்கு டுகாட்டி இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள் அமைச்சர் சி.வி.சண்முகமும் அவரது அண்ணன் ராதாகிருஷ்ணனும். சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் E.E.E படிப்பை முடித்த இவர், மேல்படிப்புக்காக சில ஆண்டுகள் ஆஸ்திரேலியா சென்றார். அங்கு படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு 6 மாதங்களுக்கு முன்பு நாடு திரும்பிய லோகேஷ், தனது மாமா சி.வி.சண்முகத்தின் வீட்டிலேயே இருந்திருக்கிறார். சிறிதுகாலம் பெரிய மாமா ராதாகிருஷ்ணன் பங்குதாரராக இருக்கும் ’நியூஸ் ஜே’ தொலைக்காட்சியில் நிர்வாகப் பிரிவில் பணியாற்றியிருக்கிறார். சில நாள்களில் அங்கு செல்வதையும் நிறுத்திவிட்டார். அதேபோல கடந்த 10 நாள்களாகத் தனது நண்பர்களுடன் பேசுவதையும் தவிர்த்துவந்திருக்கிறார்.

லோகேஷ்
லோகேஷ்

இந்நிலையில்தான், இரண்டாவது மாடியில் உள்ள தனது அறைக்குச் சென்ற லோகேஷ் 3.30 மணி வரை மதிய உணவுக்கு கீழே வரவில்லை என்று கூறப்படுகிறது. அறைக்கதவை தட்டிப் பார்த்தும் எந்தப் பதிலும் வராததால், வீட்டிலிருந்தவர்கள் இந்தத் தகவலை அமைச்சருக்கு தெரிவித்திருக்கின்றனர். உடனே, அங்கிருந்த உறவினர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது லோகேஷ் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

அஞ்சலி செலுத்திய மருத்துவர் ராமதாஸ்
அஞ்சலி செலுத்திய மருத்துவர் ராமதாஸ்

தங்கை மகன் இறந்த தகவலறிந்து துடித்துப்போனார் அமைச்சர் சி.வி.சண்முகம். திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை முடிந்து, அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டது லோகேஷின் உடல். அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வருவதாகச் சொல்லப்பட்டது. ஆனால், ` இப்போது வந்தால் முதல்வரின் தேர்தல் பணிகள் பாதிக்கப்படும். பிரசாரத்துக்கு விக்கிரவாண்டி வரும்போது பார்த்துக்கொள்ளலாம்' என்று கூறியதால், கடைசி நேரத்தில் முதல்வரின் வருகை மாற்றப்பட்டுவிட்டது என்கின்றனர், கட்சியின் நிர்வாகிகள். தொடர்ந்து இரவோடு இரவாக அ.தி.மு.க அமைச்சர்கள் நிலோபர் கபில், மா.ஃபா பாண்டியராஜன், உடுமலை ராதாகிருஷ்ணன், தங்கமணி, துரைக்கண்ணு, கருப்பண்ணன், எம்.சி.சம்பத், அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

அமைச்சரின் இல்லம்
அமைச்சரின் இல்லம்

இப்படியொரு துயரத்திலும் அமைச்சர்கள் சிலரிடம் பேசிய சி.வி.சண்முகம், ” இங்கு அதிக நேரம் இருக்காதீர்கள். தொகுதிக்குச் சென்று தேர்தல் பணிகளைப் பாருங்கள்” என்றுகூறி அனுப்பிவைத்திருக்கிறார். தொடர்ந்து தி.மு.க முன்னாள் அமைச்சர் பொன்முடி, எம்.எல்.ஏ மஸ்தான் போன்றவர்களும் நேற்று இரவே அஞ்சலி செலுத்தினார்கள். அதேபோல இன்று காலை, தி.மு.க-வின் எம்.பி ஜெகத்ரட்சகன், மயிலம் எம்.எல்.ஏ மாசிலாமணி போன்றவர்கள் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். அவர்களைத் தொடர்ந்து, காலை சரியாக 11.40 மணிக்கு வந்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், அங்கு அமர்ந்திருந்த அமைச்சர் சி.வி.சண்முகத்தின் கரங்களைப் பற்றியபோது, ``என் மூத்த மகனை இழந்துவிட்டேன்” என்றுகூறி கண் கலங்கினார். அவருக்கு ஆறுதல் கூறிய ராமதாஸ், ``நீங்கள் தைரியமாக இருங்கள். உடைந்துவிடாதீர்கள்” எனத் தேற்றிவிட்டுச் சென்றார்.