பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று, பகவந்த் மான் தலைமையில் ஆட்சியமைத்தது. இந்த நிலையில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் `பஞ்சாப் ஸ்டேட் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்'-ன் உயரதிகாரிகளைச் சந்தித்ததாகவும், அந்த நிகழ்வில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் பங்குபெறவில்லை எனவும் செய்திகள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து, முதல்வர் பகவந்த் மான் இல்லாமல் பஞ்சாப் உயரதிகாரிகளை அரவிந்த் கெஜ்ரிவால் அழைத்து சந்தித்திருப்பதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்திருக்கின்றன. பஞ்சாப் மாநில காங்கிரஸின் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங், ``முதல்வர் பகவந்த் மான் இல்லாமல் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் சம்மன் அனுப்பியுள்ளார். இது பஞ்சாப்பில், டெல்லியின் ரிமோட் கன்ட்ரோல் ஆட்சி அமலில் இருக்கிறது என்பதை அம்பலப்படுத்துகிறது. பஞ்சாப்பின் பெருமைக்கே இது அவமானம்" என விமர்சித்திருந்தார்.

இது மட்டுமல்லாமல், பஞ்சாப்பின் முன்னாள் முதல்வரான அமரீந்தர் சிங்கும், ``இது நடக்குமென்று எதிர்பார்த்ததுதான். பகவந்த் மான் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் என்பது முன்னதாகவே முடிவான ஒன்றுதான். தற்போது டெல்லியில் பஞ்சாப் அதிகாரிகளின் கூட்டத்துக்குத் தலைமை தாங்கியதன் மூலம் கெஜ்ரிவால் இதை நிரூபித்துவிட்டார்" என ட்வீட் செய்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் இந்த விமர்சனங்கள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, "அதிகாரிகளைப் பயிற்சி நோக்கங்களுக்காக நான்தான் அனுப்பினேன். தேவைப்பட்டால், பயிற்சி நோக்கங்களுக்காக, எனது அதிகாரிகளை குஜராத், ஆந்திரா, தமிழ்நாடு, இஸ்ரேலுக்குக்கூட அனுப்புவேன். அது எனது முடிவு.

அதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்... டெல்லி அரசில் கல்வி, அதிகாரம், சுகாதாரம் ஆகிய துறைகளில் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். அதைப் பயின்று வர நான் ஏன் எனது அதிகாரிகளை அனுப்பக் கூடாது... எதிர்க்கட்சியாக இருந்துகொண்டு விமர்சிக்க வேண்டும் என்பதற்காக விமர்சிக்காதீர்கள்.
அதிகாரிகளை டெல்லிக்குப் பயிற்சிக்கு அனுப்பியது நான்தான். அவர்கள் எங்கு சென்று நல்ல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியுமென்றாலும், அதை அனுமதிப்பேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.