தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கியது. இதையொட்டி, நெல்லை மாநகராட்சிப் பகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. தேர்தல் களத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளின் பிரபலங்கள் காலை முதலே ஆர்வத்துடன் வரிசையில் காத்திருந்து தங்களின் வாக்குகளைப் பதிவு செய்துவருகிறார்கள். இளம் வாக்காளர்கள் தங்களின் வாக்குகளைச் செலுத்த ஆர்வம்காட்டுவதால் சில வாக்குப்பதிவு மையங்களில் நீண்ட வரிசை காணப்படுகிறது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள ஸ்ரீஜெயேந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தி.மு.க-வினர் நூறு சதவிகிதம் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்துள்ளார்கள். அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை அவர்கள் பணம் கொடுத்தது பற்றிய சரியான தகவல் எதுவும் வெளிவரவில்லை. நாங்கள் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. வாக்காளர்களை நம்பியே எங்களுடைய வேட்பாளர்கள் களத்தில் நிற்கிறார்கள். மக்கள் எங்களுக்கு வாக்களிக்க முடிவு செய்துவிட்டார்கள்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தமிழகம் முழுவதும் இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களில் வெற்றியைக் கைப்பற்றும். நெல்லை மாநகராட்சி வார்டுகளில் பாரதிய ஜனதா வேட்பாளர்கள் அதிகமான இடங்களில் வெற்றிபெறுவார்கள். நான் எனது வாக்கை நெல்லை மாநகராட்சி 39-வது வார்டில் பாரதிய ஜனதா சார்பாகப் போட்டியிடும் வேட்பாளருக்குச் செலுத்தினேன்" என்றார்.
பொதுவாக வாக்களிப்பவர்கள் தாங்கள் யாருக்கு அல்லது எந்தச் சின்னத்துக்கு வாக்களித்தேன் என்பதைத் தெரிவிக்கக் கூடாது. அதுவும், சட்டமன்ற உறுப்பினராகவும், தேசியக் கட்சியின் மாநில துணைத் தலைவராகவும் இருக்கும் நயினார் நாகேந்திரன், தனது வாக்கை யாருக்குச் செலுத்தினேன் என்று வெளிப்படையாகத் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.