Published:Updated:

`என் தந்தைக்கு மரியாதைகூட செலுத்தவிடவில்லை!’ - டி.கே.சிவக்குமார் வேதனை

சத்யா கோபாலன்

அமலாக்கத்துறையினரின் நடவடிக்கையால் தந்தைக்கு மரியாதைகூட செலுத்த முடியவில்லை என டி.கே.சிவக்குமார் வேதனை. தெரிவித்துள்ளார்.

DK Shivakumar
DK Shivakumar ( Twitter/@DKShivakumar )

கர்நாடகாவின் காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் வீடு, அலுவலகம், உறவினர்கள் வீடு எனச் சுமார் 84 இடங்களில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது சிவக்குமாருக்குச் சொந்தமான வீட்டிலிருந்து ரூ.8.59 கோடியை வருமான வரித்துறை கைப்பற்றியது. `இது காங்கிரஸ் மேலிடத்துக்குக் கொடுப்பதற்காக சிவக்குமார் அனுப்பிய ஹவாலா பணம்' என்று அப்போது டி.கே.சிவக்குமாரின் உதவியாளர்கள் கூறியதாகத் தகவல் வெளியானது.

DK Shivakumar
DK Shivakumar
Twitter/@DKShivakumar

இது குறித்து வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை, விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த பிப்ரவரியில் சிவக்குமாருக்கு சம்மன் அனுப்பியிருந்தது. அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் டி.கே.சிவக்குமார் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதால் கடந்த சில நாள்களாக டி.கே.சிவக்குமாரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், நேற்று மூன்றாவது முறையாக அமலாக்கத்துறையினர் முன் ஆஜராக வேண்டும் என சிவக்குமாருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி அவரும் நேரில் ஆஜரானார். விநாயகர் சதுர்த்தி நாளான நேற்றுகூட என்னை நிம்மதியாக இருக்க விடவில்லை என வேதனை தெரிவித்துள்ளார் சிவக்குமார்.

DK Shivakumar
DK Shivakumar
Twitter/@DKShivakumar

இது தொடர்பாகக் கர்நாடக ஊடகங்களுக்குப் பேட்டியளித்துள்ள அவர், ``விநாயகர் சதுர்த்தியான இன்று (2.9.2019) மறைந்த என் தந்தைக்கு மரியாதை செய்து சில சடங்குகள் செய்வேன். இந்த வருடம் அதைக்கூட இவர்கள் செய்யவிடவில்லை. ஆனாலும், கட்சி மற்றும் மக்களுக்காக நான் இங்கு வந்துள்ளேன்.

`காஃபி டே பங்குகளை மடைமாற்ற முயற்சி!' - சித்தார்த்தா மரண சர்ச்சையில் டி.கே.சிவக்குமார்

நான் ஒரு ரூபாய்கூட ஏமாற்றவில்லை; நான் எந்தத் தவறும் செய்யவில்லை, இருந்தும் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்கிறேன். தொடர்ந்து ஒத்துழைப்புச் செய்வேன். என் தந்தைதான் எனக்கு உயிர் கொடுத்தார், அதற்கான மரியாதையை அவருக்குச் செலுத்த விரும்புகிறேன். ஆனால் பா.ஜ.கவும் அமலாக்கத்துறையும் அந்த மரியாதையைக்கூட செலுத்தவிடவில்லை. என் தந்தையின் ஆத்மா அமைதியாக இருக்கும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

DK Shivakumar
DK Shivakumar
Twitter/@DKShivakumar

``பழிவாங்கும் அரசியல்தான் இன்றைய ஒழுங்காக மாறிவிட்டது, ஆளும் கட்சியின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் எளிதாகப் பலியாகிறார்கள். பொது வாழ்வில் ஆதாரமற்ற குற்றசாட்டுகளையும் சதித் திட்டங்களையும் எதிர்கொள்ள நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். டி.கே.சிவக்குமாருக்கு எதிராக இந்தப் பழிவாங்கும் நடவடிக்கையை எதிர்கொள்ளும் அளவுக்கு வலிமையானவர் என்று நான் நம்புகிறேன்” என்று கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்