Published:Updated:

`அபாண்டமாகப் பழி சுமத்திட்டேன், நீங்கள் நல்லவர்னு ஒருநாள் சொல்வார்!'- ராமதாஸ் குறித்து திருமாவளவன்

``ஓட்டுக்காக திருமாவளவன் மீது அபாண்டமாகப் பழிசுமத்திவிட்டேன் என்று கூடியவிரைவில் சொல்வார். அந்த நாள் வரும்" என்று பா.ம.க-வின் மீது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் திருமாவளவன்.

வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம்
வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம்

"திருமாவளவன் நல்லவர் என்று மருத்துவர் ராமதாஸ் என்றாவது ஒரு நாள் சொல்வார். ஓட்டுக்காக திருமாவளவன் மீது அபாண்டமாகப் பழி சுமத்திவிட்டேன் என்று கூடிய விரைவில் சொல்வார். அந்த நாள் வரும்" என்று பா.ம.க-வின்மீது ஆதங்கத்தை வெளிப்படுத்திய திருமாவளவன், பா.ம.க நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்கு வரும் என்று கூறினார்.

திருமாவளவன் பேச்சு
திருமாவளவன் பேச்சு

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் தொல்.திருமாவளவன் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் அரியலூரில் நடைபெற்றது. இதில் தொல்.திருமாவளவன் கலந்துகொண்டு பேசியபோது, "ஓட்டுக்காக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் என்மீது அபாண்டமாகப் பழி சுமத்தினார். ஆனால், அவர் மனதைக் கவர்ந்து இன்று வரையிலும் அவருடைய நெஞ்சத்தில் இருக்கிறேன். தனிப்பட்ட முறையில் என்னைப் பற்றி அவரிடம் கேட்டால், நான் ரொம்ப நல்லவர் என்று கூறுவார். அந்த நாள் வெகு விரைவில் வரும். அரசியலுக்காகத்தான் சாதியைக் கையில் எடுக்கவேண்டிய சூழல் இருக்கிறது. சாதிய உணர்வை மக்களிடம் தூண்டிவிட்டால் தான், மக்களிடமிருந்து வாக்குகளைப் பெறமுடியும் என பா.ம.க நினைக்கிறது. தான் செய்த தவறுகளை உணர்ந்து, நிச்சயம் ஒரு நாள் என்னிடம் ராமதாஸ் சொல்வார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

அதேபோல் என்றைக்காவது ஒருநாள் தி.மு.க கூட்டணிக்கு ராமதாஸ் வரப்போகிறார். அப்போது, அரியலூர் மாவட்டச் செயலாளர் சிவசங்கரிடம் கட்டாயம் ஒருநாள் திருமாவளவனைப் பற்றிச் சொல்வார். தேர்தல் நேரத்தில் என்மீது பரப்பப்பட்ட அவதூறுகள் அனைத்தும் ஓட்டுக்காகப் பரப்பப்பட்டது. இந்தியாவிலேயே ஒரு தொகுதி அரசியலைத் தாண்டி தனிப்பட்ட முறையில் சாதியின் பெயரால் விமர்சனம் வந்தது என்றால், அது சிதம்பரம் தொகுதி மட்டும்தான். நான் சாதியைத் தாண்டி அரசியல் செய்ய நினைக்கிறேன்.

திருமாவளவன்
திருமாவளவன்

மத்திய பட்ஜெட்டில் ஏழை எளிய மற்றும் மலைவாழ் மக்களுக்கான நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு பன்மடங்கு குறைக்கப்பட்டுள்ளது. பெண்களின் மேம்பாடு மற்றும் அவர்களுக்கான பாதுகாப்பு, புதிய வேலைவாய்ப்பு வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் இந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படவில்லை. எனவே, ஒட்டுமொத்தமாக இந்த பட்ஜெட் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் நிதிநிலையாக அமைந்துள்ளது. வளர்ச்சிக்கு வழிவகுக்காது, விலைவாசி உயர்வை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் பெட்ரோல், டீசலுக்கு வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அனைத்து பொருள்களின் விலையும் உயர்வதோடு, பண வீக்கத்தையும் ஏற்படுத்தும்.

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களையும் ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்து பல வருடங்கள் காத்திருந்த நிலையில், நாடாளுமன்றத்தில் இதுகுறித்து அமைச்சர் வெளிப்படையாகப் பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினேன். ஆனால், அமைச்சர் அதற்குப் பதில் கூறவில்லை. தற்போது, நீதிமன்றத்திலேயே தமிழகத்திற்கான நீட் தேர்வு விலக்கை ஜனாதிபதி நிராகரித்துவிட்டதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்துள்ளது. இனிமேலும் மத்திய அரசுடன் மாநில அரசு உறவாடப்போகிறதா, நட்பைத் தொடரப்போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொண்டர்களிடம் பேசும் திருமா.
தொண்டர்களிடம் பேசும் திருமா.

சட்டசபையில் ஆளும் கட்சி மட்டுமல்ல அனைத்துக்கட்சிகளும் ஒருங்கிணைந்து, ஏகமானதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசு புறந்தள்ளியுள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த நிலையில் அ.தி.மு.க அரசு, நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுடன் நட்பை தொடரப்போகிறதா என்ற கேள்வி எழுகிறது. அதேபோல் எடப்பாடி அரசால் தமிழகத்தின் உரிமைகள் பறிபோய்க்கொண்டிருக்கிறது. இவர்கள் அரசியல் செய்வதற்காக, தமிழகத்தைக் கபளீகரம் செய்துகொண்டிருக்கிறார்கள். ஏழு பேரின் விடுதலைகுறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு முயன்றுவருகிறோம். கூட்டத்தொடரிலேயே இப்பிரச்னை குறித்து கண்டிப்பாக விரிவாகப் பேச இருக்கிறோம்" என்று கூறினார்.