Published:Updated:

`வெயிட் அண்டு வாட்ச்' - குமாரசாமியின் `திடீர்' சவாலால் தகிக்கும் கர்நாடக பி.ஜே.பி!

`நம்பிக்கை வாக்கெடுப்பில் மிகப்பெரிய வித்தியாசத்தில் குமாரசாமி வெல்வார். வெயிட் அண்டு வாட்ச்' என்கிறார்கள் ம.ஜ.த-வினர்

குமாரசாமி
குமாரசாமி

கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியை கவிழ்க்க, பி.ஜே.பி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருவதாகச் சொல்லப்பட்ட நிலையில், காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த கட்சிகளைச் சேர்ந்த 12 எம்.எல்.ஏ-க்கள், கடந்த 6-ம் தேதி, திடீரென அம்மாநில சட்டமன்றச் செயலரிடம் ராஜினாமா கடிதங்களை அளித்தனர். இதனால் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

குமாரசாமி
குமாரசாமி

ராஜினாமா கடிதம் கொடுத்து, ஐந்து நாள்களுக்கு மேல் ஆன நிலையில், சபாநாயகர் தங்கள் ராஜினாமா கடிதத்தை ஏற்க மறுப்பதாக கூறி, எம்.எல்.ஏ-க்கள் உச்சநீதிமன்றத்தை நாடினர். பதிலுக்கு `சபாநாயருக்கு நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா தொடர்பாக முடிவெடுக்க இன்னும் கால அவகாசம் வேண்டும்’ என சபாநாயகர் ரமேஷ்குமார் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இப்படி பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று மதியம் தொடங்கியது. கூட்டத்தில் பேசிய முதல்வர் குமாரசாமி, ``சட்டசபையில் அரசுக்கான பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராக இருக்கிறோம். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதிக்க வேண்டும். பலரும் பலவாறு பேசுவதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது நல்லது" என சபாநாயகரிடம் அதிரடியாக கோரிக்கை விடுத்தார். இந்தக் கோரிக்கையை கேட்டவுடன் சபையில் இருந்து வெளியேறிய எடியூரப்பா தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள்
பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள்
ANI

பின்னர் அவை ஒத்திவைக்கப்பட்ட பின், பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் ரமாடா ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பெங்களூரில் உள்ள கிளார்க்ஸ் எக்சோடிகா கன்வென்ஷன் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வழக்கமாக கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்தான் ரிசார்ட்டில் தங்கவைக்கப்படுவர். ஆனால், இந்த முறை பா.ஜ.க தனது எம்.எல்.ஏ-க்களை ரிசார்ட்டில் தங்கவைத்துள்ளது. அரசுக்கு உள்ள நெருக்கடியால் குமாரசாமி என்ன செய்யப்போகிறார் எனக் குழப்பம் நிலவிவந்த நிலையில், ``நம்பிக்கை வாக்கெடுப்பு'' வேண்டும் என அவர் பேசியிருப்பதை அதிர்ச்சியுடன் கவனித்து வருகிறது பா.ஜ.க.

இதற்கு பின்பு `எதும் பிளான் இருக்கிறதா?' என பா.ஜ.க-வினர் ஆலோசித்து வருகின்றனர். இதனால்தான் குமாரசாமி அப்படி பேசியவுடன் சட்டசபை வளாகத்திலேயே எடியூரப்பா தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார் என்றும், எம்.எல்.ஏ-க்களை ரிசார்ட்டில் தங்கவைத்துள்ளார் என்றும் கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. இதற்கிடையே, பா.ஜ.க குறித்து பேசியுள்ள மதச்சார்பற்ற ஜனதாதளம்,``பா.ஜ.க இப்போது தனது எம்.எல்.ஏ-க்களை ஏன் ஒரு ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்கிறது? நாங்கள் உங்கள் அளவுக்குச் சென்று எம்.எல்.ஏ-க்களை வேட்டையாட மாட்டோம்.

எடியூரப்பா
எடியூரப்பா

பெரும்பான்மை இருப்பதாகக் கூறும் நீங்கள் ஏன் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பயப்படுகிறீர்கள்? பா.ஜ.க-வின் கோழைத்தனம் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது! நம்பிக்கை வாக்கெடுப்பில் மிகப்பெரிய வித்தியாசத்தில் குமாரசாமி வெல்வார். வெயிட் அண்டு வாட்ச்'' என சவால் விடுத்துள்ளது. இதனால் கர்நாடக அரசியல் கிளைமாக்ஸை நெருங்கியுள்ளது. திங்கள்கிழமை அவை மீண்டும் கூடியது நம்பிக்கை வாக்கெடுப்பு இருக்கும் எனத் தெரிகிறது.