Published:Updated:

`எங்கள் பின்னால் வந்தால் நல்லது நடக்கும்!’ - ராமதாஸ்

``நான் நினைத்திருந்தால் எத்தனையோ பதவிக்குப் போயிருக்கலாம். என்னால் நடக்க முடியாமல் போனாலும், ஓர் கோலூன்றியாவது மக்களுக்காகத் தொடர்ந்து போராடுவேன்’’ என்று டாக்டர் ராமதாஸ் உருக்கமாகப் பேசினார்.

Ramadoss
Ramadoss

வேலூர் மாவட்டம் பரப்பளவில் மிகப்பெரியது. வளர்ச்சியில் மிகவும் பின்தங்கியது. இந்த மாவட்டத்தின், ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்குச் செல்ல, சுமார் 220 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். மேற்கில் உள்ள திருப்பத்தூரிலிருந்தும் கிழக்கில் உள்ள அரக்கோணத்திலிருந்தும் மாவட்டத் தலைநகருக்கு வர, சுமார் 100 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்க வேண்டும். இப்படியிருக்க, `நிர்வாகச் சீர்திருத்தத்துக்காக, மாவட்டத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும்’ என்று பொதுமக்கள் வலியுறுத்தினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி பா.ம.க-வினர் பல ஆண்டுகளாகப் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். 

Ramadoss
Ramadoss

ராமதாஸ் அறிக்கைக்கு மேல் அறிக்கைவிட்டு, அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். இந்தநிலையில், ‘நிர்வாகச் சீர்திருத்தத்துக்காக வேலூர் மாவட்டத்தைப் பிரித்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என மூன்று புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும்’ என்று சுதந்திர தினவிழா உரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த அறிவிப்பு பா.ம.க-வுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கொண்டாடுகிறார்கள் அக்கட்சியினர். மாவட்டத்தைப் பிரிக்க வலியுறுத்திய ராமதாஸுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 28-ம் தேதி மாலை ராணிப்பேட்டையில் பாராட்டு விழா பொதுக்கூட்டத்தை அக்கட்சியினர் நடத்தினர். 

இதில் ராமதாஸ் கலந்துகொண்டு பேசுகையில், ``வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை 20 ஆண்டுகளுக்கு மேலாக நாம் சொல்லிவந்தோம். போராட்டம் நடத்தினோம். நம்முடைய கோரிக்கையை ஏற்று மாவட்டத்தைப் பிரித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத்தான் முதலில் பாராட்ட வேண்டும். மேலும் 5 மாவட்டங்களைப் பிரித்திருக்கிறார். அதில் நாம் கோரிக்கை வைத்தது நான்கு மாவட்டங்கள். அரக்கோணத்தை வருவாய் கோட்டமாகவும், சோளிங்கரை தாலுகாவாகவும் அறிவிக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் புதிதாகக் கோரிக்கை வைக்கிறோம். 

Vellore Fort
Vellore Fort

இதையும் முதல்வர் செய்வார் என்று நம்புகிறேன். ஓர் காலத்தில், ஆண்டு முழுவதும் பாலாற்றில் பால் போன்று தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. இன்றைக்கு, அது வறண்டுபோயிருக்கிறது. ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலத்தில் பல்வேறு தடுப்பணைகளைக் கட்டி நீரைச் சேமித்து வைத்திருக்கிறார்கள். பாலாற்றில் இறங்கி நான் போராட்டம் செய்தேன். வேலூர் மாவட்ட மக்களின் இதுபோன்ற பிரச்னைகளுக்கெல்லாம் அதிகமாகப் போராட்டம் நடத்தியதே பா.ம.க-தான். தி.மு.க-வோ, மற்ற கட்சிகளோ போராட்டம் செய்ததில்லை.

அவர்களின் கவலையெல்லாம், எப்படியாவது ஓட்டு வாங்குவதும், ஆட்சியைப் பிடிப்பதும்தான். பா.ம.க-வின் கவலை மக்களைப் பற்றிய கவலை. உலகத்திலிருக்கும், 101 நாடுகளைவிட மக்கள் தொகையிலும் பரப்பளவிலும் பெரிய மாவட்டமாக வேலூர் இருக்கிறது. இந்த மக்கள் எங்களின் போராட்டத்தை நினைத்துப் பார்க்கவில்லை. இந்தத் தேர்தலில்கூட எதிர்க்கட்சியினர் அதிகமாகப் பொய் சொன்னார்கள். புழுகு மூட்டையை நம்பி அவர்களுக்குத்தான் வாக்களித்தனர். நாம் அனைவரும் மக்களைப் பற்றி கனவு காண்கிறோம். அவர்கள் நம்மை மறந்துவிடுகிறார்கள்.

PMK Meeting
PMK Meeting

ஏமாற்றுக்காரர்களிடமும் பொய்யர்களிடமும் ஏன் ஏமாறுகிறீர்கள், உங்களுக்காக உழைக்கும் எங்களை ஏன் மறந்துவிடுகிறீர்கள்? நான் நினைத்திருந்தால் எத்தனையோ பதவிக்கு போயிருக்க முடியும். முதுமையில், என்னால் நடக்க முடியாமல் போனாலும், ஓர் கோலூன்றியாவது மக்களுக்காகப் போராடுவேன். எங்கள் பின்னால் வந்தால், நல்லது நடக்கும். நாடு செழிக்கும். நாங்கள் கோடம்பாக்கத்திலிருந்து வந்தவர்கள் இல்லை. அடுக்கு மொழியில் பேசத் தெரியாது. உண்மையைத்தான் பேசுவோம். ஏனென்றால், நாங்கள் விவசாயிகள். பசியென்று வந்தவர்களுக்கு உணவை வழங்கிவிட்டு பட்டினியோடு இருப்பவர்கள்’’ என்றார் உருக்கமாக.