Published:Updated:

`போராட்டக்காரர்களை சுட்டுவிடுவேன்!’- போலீஸ் உடையில் மிரட்டிய முன்னாள் காவலர் கைது

``போராட்டக்காரர்கள் என்னை நோக்கி கல்லை எறிந்தால், அவர்களைச் சுட்டுவிடுவேன்” என சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட முன்னாள் போலீஸ் அதிகாரி டெல்லி போலீஸால் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் போலீஸ்
முன்னாள் போலீஸ்

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல்களும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், ``காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தினால், அவர்களைச் சுட்டுவிடுவேன்’’ என்று போராட்டக்காரர்களை காவலர் ஒருவர் அச்சுறுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

Baap ka Raaj Central Home Ministry ka order #Uttar_pradesh mein CAA Aur NRC Masle mein Protest Karne walon ko #Shoot karne ke Orders Diye hai....

Posted by Reporter Subhan on Friday, December 27, 2019

டிசம்பர் 22-ம் தேதி இந்த வீடியோ முகநூலில் வெளியிடப்பட்டது. டெல்லி காவல் சீருடை அணிந்து காரில் அமர்ந்திருந்த அவர் தன்னை துணை ஆய்வாளராகவும் அடையாளப்படுத்திக்கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், ``நாங்கள் உள்துறை அமைச்சரின் உத்தரவுகளைப் பின்பற்றுகிறோம். அரசியலமைப்பைக் காப்பாற்றுகிறோம். போராட்டக்காரர்கள் என்னை நோக்கி கல்லை எறிந்தால், அவர்களைச் சுட்டுவிடுவேன். செங்கல்லை எறிந்தால், ராமர் கோயில் கட்ட பயன்படுத்துவேன்” என்று கூறியிருந்தார்.

இதுதொடர்பாக டி.சி.பி ராய் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``ஒரு நபர் சட்டவிரோதமாக காவல் சீருடையணிந்து பேசிய வீடியோவை நெட்டிசன்கள் எங்கள் பார்வைக்கு கொண்டுவந்தனர். ஐ.பி.சி மற்றும் ஐ.டி சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு அந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய பெயர் ராகேஷ் தியாகி. காவல்துறையில் முன்னாள் காவலர். 2014-ல் தன்னுடையப் பணியிலிருந்து விலகினார். மேலும், அவர் தன்னுடைய பழைய சீருடையைப் பயன்படுத்தவில்லை. போலியான சீருடையையே பயன்படுத்தியுள்ளார். இணைய சுதந்திரத்தைத் தவறான வழியில் பயன்படுத்துவது சட்ட விரோதமானது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

காவல்துறையின் அறிக்கை
காவல்துறையின் அறிக்கை

இந்த நிலையில், ஜாமீனில் வெளிவந்த ராகேஷ் தியாகி புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``நான் எதையும் தவறாகக் கூறவில்லை. குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்தவர்கள் என்மீது புகார் கொடுத்துள்ளனர். காவல்துறையினர் இரவு 10 மணிக்கு என்னைக் கைது செய்தனர். டெல்லி காவல்துறையை நான் எப்போதும் மதிக்கிறேன்” என்று பேசியுள்ளார். இரண்டாவது வீடியோவுக்கு காவல்துறையினர், ``சட்டத்துக்கு விரோதமாக அவர் எதுவும் பேசவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.