Published:Updated:

`நான் நடுரோட்டிலும் தூங்கத் தயார்!’ - சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி இடையே பனிப் போர்

சத்யா கோபாலன்

ஆந்திராவின் முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றதிலிருந்து அவருக்கும் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே கடுமையான பனிப்போர் நிலவி வருகிறது.

ஜெகன்மோகன் ரெட்டி - சந்திரபாபு நாயுடு
ஜெகன்மோகன் ரெட்டி - சந்திரபாபு நாயுடு

ஆந்திராவின் முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்தபோது அமராவதி, ஆந்திராவின் தலைநகராக உருவாக்கப்படும் என அறிவித்து அதற்கான வேலைகளைத் தொடங்கினார். இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணா நதிக்கரையில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு தன் குடும்பத்துடன் தங்கி வருகிறார்.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

அவர் ஆட்சியில் இருக்கும்போது தன் வீட்டுக்கு அருகில் பிரஜா வேதிகா என்ற புதிய கட்டடம் ஒன்றைக் கட்டி கட்சி சார்ந்த கூட்டங்கள், மக்களைச் சந்திப்பது போன்ற தேவைகளுக்குப் பயன்படுத்தி வந்தார். இந்நிலையில் தற்போது நடந்த தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டி புதிய முதல்வராகப் பதவியேற்றார் அதன் பிறகு, பிரஜா வேதிகா கட்டடம் சட்டத்தை மீறி கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அதை இடித்து தரைமட்டமாக்கினார்.

இதையடுத்து, சந்திரபாபு நாயுடு தற்போது வசித்து வரும் இல்லமும் சட்டவிரோதமாக ஆற்றுப்படுகையில் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அதை இடிக்கவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த பிரச்னை சில நாள்களாகத் தொடர்ந்து நடந்து வருகிறது. வீட்டை இடிப்பது தன்னை பழிவாங்கும் செயல் என சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி வருகிறார். ஆனால், அவரின் வீடு ஆற்றுப்படுகையில் உள்ளது. வெள்ளம் வந்தால் ஆபத்து என ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்து வருகிறார்.

நேற்று சட்டமன்றத்தில் நடந்த கூட்டத்தில் சந்திரபாபு நாயுடுவின் வீடு இடிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. முதலில் பேசிய சந்திரபாபு நாயுடு, ‘கட்டடங்களைக் கட்டுப்படுத்தும் விதிகளின் படி, நீர்நிலைக்கும் வீட்டுக்கும் இடையே 30 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். ஆனால், என் வீடு 150 மீட்டர் இடைவெளியில் கட்டப்பட்டுள்ளது’ என ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிப் பேசினார்.

Vikatan

இதையடுத்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடுவிடம் `நீங்கள் கையில் வைத்துள்ள ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியைக் கூறுங்கள்’ எனக் கேட்டார். ஆனால், சந்திரபாபு நாயுடு அதைக் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசிவந்தார்.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

இவரையடுத்து பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, ``சந்திரபாபு நாயுடுவின் இல்லம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது. வெள்ளத்தால் தன் வீட்டுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என நாயுடு நேரடியாகவே பேசுகிறார். மக்களுக்கு இதனால் என்ன பாதிப்பு வரும் என்பதில் அவருக்குச் சிறிதும் அக்கறை இல்லை. அவர் முதல்வராக இருந்ததால் தன் கட்டடத்தை முறைப்படுத்த விரும்பி தனக்கு ஏற்றவாறு சட்டத்தை மாற்றியுள்ளார். அதனால்தான் ஆவணத்தில் குறிப்பிட்டுள்ள தேதியை அவர் சொல்லவில்லை” எனத் தெரிவித்தார்.

”எனக்கு ஆந்திர அரசியலில் 40 வருடங்கள் அனுபவம் உள்ளது. என்னால் சாலையில் படுத்து உறங்கிக்கூட வேலை செய்ய முடியும். ஆனால், உங்களின் மிரட்டலுக்கு நான் பயப்பட மாட்டேன். இதை நான் எனக்காக மட்டும் பேசவில்லை. இந்தப் பழிவாங்கல் நடவடிக்கையால் பல மக்கள் கட்டடம் இடிக்கப்படுமோ என்ற பயத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காகவும்தான் பேசுகிறேன்” எனச் சந்திரபாபு நாயுடு கூறினார்.

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி

இதற்குப் பதில் அளித்த ஜெகன், ``சென்னை, மும்பை போன்ற நகரங்களில் பெரு வெள்ளம் வந்துள்ளது. ஒவ்வொரு முறை கனமழை பொழியும்போதும் நகரங்கள் நீரில் மூழ்கி மக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்துகின்றன. நகரங்களில் நீர் தேங்கும் இந்த மோசமான நிலைமை ஏன் ஏற்படுகிறது. வெள்ள நீர் செல்லும் பாதையைக் கட்டடங்கள் ஆக்கிரமித்துள்ளதால்தான் இது நடக்கிறது. ஆந்திராவிலும் இதே போன்று நடப்பது ஆபத்தான சூழ்நிலைக்கு வழிவகுக்கும்” எனக் குறிப்பிட்டார்.