Published:Updated:

`காஷ்மீரில் கறுப்புப் பனி; பா.ஜ.க-வில் நான்!’ - வதந்திகளுக்கு குலாம் நபி ஆசாத் பதில்

`மாநிலங்களவையிலிருந்து ஓய்வு பெறவிருக்கும் காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத்தைப் பற்றி நாடாளுமன்றத்தில் பிரதமர் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டதைத் தொடர்ந்து, தனது பதவிக்காலம் முடிந்த பின்னர் ஆசாத் பா.ஜ.க-வில் சேர வாய்ப்பிருக்கிறது என்ற தகவல் பரவியது.

கடந்த நாற்பது ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராகவும், காங்கிரஸ் மூத்த தலைவராகவும், தற்போதைய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராகவும் இருப்பவர் குலாம் நபி ஆசாத். இவரது பதவிக்காலம் வரும் 15-ம் தேதியோடு முடிவடைகிறது. சமீபத்தில், குலாம்நபி ஆசாத் உட்பட பதவிக்காலம் முடியும் எம்.பி-க்கள் அனைவருக்கும் பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடி, குலாம் நபி ஆசாத் குறித்து உணர்ச்சிவசப்படப் பேசினார். ``உங்களை நான் ஓய்வுபெற விட மாட்டேன். தொடர்ந்து ஆலோசனைகள் கேட்பேன். உங்களுக்காக என்னுடைய வீட்டின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்” எனக் கண்ணீர்மல்கப் பேசினார்.

பிரதமர் மோடி, குலாம் நபி ஆசாத்
பிரதமர் மோடி, குலாம் நபி ஆசாத்

சில மாதங்களுக்கு முன்பு, காங்கிரஸ் தலைமையின் செயல்பாடுகள் குறித்து அக்கட்சியைச் சேர்ந்த 23 முக்கிய தலைவர்கள் கடிதம் ஒன்றை எழுதினர். அந்த 23 நபர்களில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர். பிரியாவிடை நிகழ்ச்சியில் பிரதமர் மோடியைத் தொடர்ந்து பேசிய குலாம் நபி ஆசாத்,``நான் ஓர் இந்திய முஸ்லிம் என்பதில் பெருமைகொள்கிறேன். `பா.ஜ.க-வுடன் பேசக் கூடாது, வாஜ்பாயிடம் வேண்டுமானால் பேசலாம்’ என இந்திரா கூறினார். எதிர்க்கட்சித் தலைவராக எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை வாஜ்பாயிடமிருந்து கற்றுக்கொண்டேன்” என்று பேசினார்.

பிரதமர் மோடி, குலாம் நபி ஆசாத் இருவரின் உருக்கமான பேச்சுகளும், ஆசாத் பா.ஜ.க-வில் இணைவார் என்ற கருத்தைக் கிளப்பியது. இந்தக் கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதமாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பா.ஜ.க-வில் இணைவது குறித்த கேள்விக்கு பதிலளித்திருக்கிறார் குலாம் நபி ஆசாத்.

தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த குலாம் நபி ஆசாத், ``மோடிக்கும் எனக்கும் 1990-களில் இருந்து பழக்கம். இருவரும் பொதுச்செயலாளர்களாக இருந்தபோது, தொலைக்காட்சி விவாதத்தில் ஒன்றாகப் பங்கேற்போம். சண்டையிட்டுக்கொள்வோம். முதல்வர்களாக இருந்தபோதும், பிரதமருடனான கூட்டங்களிலும் இருவரும் அடிக்கடி சந்தித்திருக்கிறோம். பின்னர் நான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தேன். அவர் முதல்வராகத் தொடர்ந்தார். அப்போது 10 அல்லது 15 நாள்களுக்கு ஒரு முறை பல்வேறு விஷயங்கள் பற்றிப் பேசுவோம்.

`காஷ்மீரில் கறுப்புப் பனி; பா.ஜ.க-வில் நான்!’ - வதந்திகளுக்கு குலாம் நபி ஆசாத் பதில்

பிரியாவிடையின்போது ஒருவரை ஒருவர் அறிந்திருந்ததால் அழவில்லை. 2006-ம் ஆண்டு காஷ்மீரில், குஜராத் சுற்றுலா பேருந்து தாக்கப்பட்டது. அது பற்றி அப்போது மோடியிடம் பேசும்போது நிலைகுலைந்து போனேன். அந்தக் கதையைக் குறிப்பிடும்போதுதான் மோடி உடைந்து அழுதார். அந்தச் சம்பவம் நினைவுக்கு வந்ததால் என்னாலும் அந்தக் கதையை முழுமையாக முடிக்க முடியவில்லை. பா.ஜ.க-வில் நான் சேரப்போவதாக வதந்தி பரப்புபவர்களுக்கு என்னைப் பற்றித் தெரியாது. காஷ்மீரில் கறுப்புப் பனி பெய்யும் நாள்தான், பா.ஜ.க-விலோ அல்லது வேறு கட்சியிலோ நான் சேரும் நாள்" என குலாம் நபி ஆசாத் கூறியிருக்கிறார்.

மேலும், பா.ஜ.க-வைச் சேர்ந்த, மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் உடனான நல்லுறவு குறித்துப் பேசிய ஆசாத், ``ராஜ்மாதா சிந்தியா எதிர்க்கட்சியின் துணைத் தலைவராக இருந்தபோது, ​​அவர் எழுந்து நின்று என்னைப் பற்றிச் சில குற்றச்சாட்டுகளைக் கூறினார். நான் எழுந்து, `குற்றச்சாட்டை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன். ஆனால், அரசாங்கத்தின் சார்பாக, அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் ஒரு குழுவை பரிந்துரைக்க விரும்புகிறேன். அதில் ராஜ்மாதாவும் எல்.கே.அத்வானியும் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். அவர்கள் 15 நாள்களில் அறிக்கையை முடிக்க வேண்டும். பிறகு அவர்கள் எந்தத் தண்டனையை பரிந்துரைத்தாலும் அதை ஏற்றுக்கொள்வேன்’ என்று கூறினேன். அப்போது வாஜ்பாய், எழுந்து நின்று, `நான் எனது மன்னிப்பை மன்றத்துக்கும், குலாம் நபி ஆசாத்துக்கும் தெரிவித்துக்கொள்கிறேன். ராஜ்மாதா சிந்தியாவுக்கு அவரைத் தெரியாது, ஆனால் எனக்கு அவரைப் பற்றித் தெரியும்” என்று வாஜ்பாய் கூறியதை நினைவுகூர்ந்தார் குலாம் நபி ஆசாத்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நான் கட்சியின் பொதுச்செயலாளராகவும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியதைப் பாராட்டி எனக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதியிருக்கிறார். மேலும், அமைப்பை வலுப்படுத்த நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், தேர்தலுக்குத் தயாராக வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அதன் பிறகு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை இரண்டு முறை சந்தித்தேன் என்றும் குலாம் நபி ஆசாத் கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு