Published:Updated:

சந்தோஷ் பாபு விருப்ப ஓய்வு... “இது அச்சமூட்டும் முன்னுதாரணம்!” - பதறும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்

JV BREAKING

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரீமியம் ஸ்டோரி

தமிழக ஆட்சியாளர்களின் சந்தோஷத்துக்கு வேட்டுவைத்திருக்கிறது ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபுவின் விருப்ப ஓய்வு. தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளராக இருக்கும் இவர் கொடுத்துள்ள வி.ஆர்.எஸ் விண்ணப்பம்தான், தமிழக அரசுக்கு பெரும்தலைவலியாக மாறியிருக்கிறது.

கேரளாவைச் சேர்ந்த சந்தோஷ் பாபு, 1995-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் முக்கியமான பொறுப்புகளில் பணியாற்றியவர். தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலராக இவர் இருந்த நிலையில், முக்கியமான ஒரு டெண்டர் விவகாரத்தில் ஆளுங்கட்சி முக்கியப்புள்ளிகளுடன் இவருக்கு மோதல் ஏற்பட்டதாக ஒரு தகவல் பரவியது.

இதுபற்றி 25.12.2019 தேதியிட்ட ஜூ.வி இதழில், ‘2000 கோடி டெண்டர்... ஆட்டுவிக்கும் பெரும்புள்ளி... ஐ.ஏ.எஸ் போர்க்கொடி’ என்ற தலைப்பில் எக்ஸ்க்ளுசிவ் கவர் ஸ்டோரி வெளியிட்டிருந்தோம்.

JV BREAKING
JV BREAKING

‘மிஸ்டர் கழுகு’ பகுதியில் வெளியாகி இருந்த அந்தக் கட்டுரையில், ‘தமிழகத்தில் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் பதிக்கும் ஒப்பந்தத்துக்கு, சுமார் 2,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த டெண்டரைப் பெற இரண்டு பெரிய நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆனால், தமிழகத்தில் பெரும்கொந்தளிப்புக்குக் காரணம் என்று கை காட்டப்படும் நிறுவனத்துக்கு ஒட்டுமொத்த டெண்டரையும் வழங்க வேண்டும் என்று ஆளும் தரப்பில் முடிவுசெய்துள்ளனர். அதற்கு சம்பந்தப்பட்ட துறையின் செயலாளர் மறுப்பு தெரிவிக்கவே, அவருக்கு பல ரூபங்களிலும் அழுத்தம் வந்துகொண்டிருக்கிறது. டெண்டரை தங்களுக்கே வழங்க வேண்டும் என்பதற்காக, ஆளுங்கட்சி பெரும்புள்ளி ஒருவருக்கு 14 சதவிகிதம் வரை கமிஷன் பேசி சரிகட்டிவிட்டார்களாம்’ என்று விரிவாகப் பதிவிட்டிருந்தோம். அந்த இதழில் நாம் குறிப்பிட்டிருந்த அதிகாரிதான், தற்போது வி.ஆர்.எஸ் விண்ணப்பம் கொடுத்துள்ள சந்தோஷ் பாபு.

இதுகுறித்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வட்டாரத்தில் பேசியபோது, ‘‘தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளுக்கு தமிழ் நெட் மற்றும் பாரத் நெட் என்ற திட்டத்தின்மூலம் இணையதள வசதியைக் கொண்டுசெல்லும் திட்டம் 2015-ம் ஆண்டில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. அப்போது இதற்கு 1,231 கோடி ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டது. அதன் பிறகு நகர்ப்பகுதிகளுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த அரசு முடிவுசெய்தது. இதனால் மதிப்பீட்டுத்தொகை படிப்படியாக அதிகரித்து இப்போது 2,441 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த டெண்டரை ஐந்து பகுதிகளாகப் பிரித்து வெளியிடும் வகையில்தான் சந்தோஷ் பாபு தயார்செய்திருந்தார்.

டெண்டரின் இறுதி நிலையில், கட்டுமானத் துறையில் பிரபலமான இங்கிலீஷ் எழுத்து நிறுவனம் மற்றும் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்புக்குக் காரணம் என்று கை காட்டப்படும் நிறுவனம் இரண்டுக்கும் இடையில்தான் கடும்போட்டி நிலவியது. ஆனால், கொந்தளிப்புக்குக் காரணமான நிறுவனத்துக்கு டெண்டரை உறுதிசெய்யும் வகையில் ஆளுங்கட்சி தரப்பில் சந்தோஷ் பாபுவுக்கு அழுத்தம் தரப்பட்டிருக்கிறது. அதற்காக டெண்டர் விதிகளில், ‘வொயர் தயார்செய்யும் நிறுவனமாக இருக்க வேண்டும். இந்தப் பிரிவில் ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் வர்த்தகம் செய்திருக்க வேண்டும்’ என்பது போன்ற சில விதிகளைச் சேர்க்குமாறு அவரை வற்புறுத்தியுள்ளனர். அதற்கு சந்தோஷ் பாபு மறுத்துவிட்டார்.

அத்துடன், ‘இவ்வளவு பெரிய டெண்டரை ஒரே நிறுவனத்துக்கு வழங்குவது முறையானதல்ல. எதிர்காலத்தில் எந்தச் சிக்கல் வந்தாலும், அதற்கு நான் பதில் சொல்ல வேண்டும். ஐந்து பங்காக இந்த டெண்டர் பிரிக்கப்படும். அதில் இரண்டு பங்கை நீங்கள் சொன்ன நிறுவனத் துக்குக் கொடுத்துவிடலாம். மூன்று பங்கை வேறு நிறுவனங்களுக்கு வழங்குவதுதான் முறை’ என்று சொல்லியிருக்கிறார். ஆளுங்கட்சியின் முக்கியப்புள்ளி தரப்பில் அதை ஒப்புக் கொள்ளாமல், தாங்கள் சொன்ன நிறுவனத் துக்குத்தான் முழு டெண்டரும் செல்ல வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சந்தோஷ் பாபு இதற்கு ஒப்புக்கொள்ளாத நிலையில், அவரை மாற்றிவிட்டு அந்த இடத்தில் வேறு அதிகாரியை வைத்து டெண்டரை நடத்துவதிலும் சில நிர்வாகச் சிக்கல்கள் இருந்தன. அதனால், உயர் அதிகாரிகள் சிலர் மூலம் சந்தோஷ் பாபுவிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கின்றனர். அவர்களிடமும் தன் நிலைப்பாட்டை உறுதியாகச் சொல்லிவிட்டார் சந்தோஷ் பாபு.

இதற்கிடையில், பத்திரிகைகளில் செய்தி கசிந்ததால், இந்த விவகாரத்தை கொஞ்சம் ஆறப்போட முடிவுசெய்தனர். ஆனால், அந்த நிறுவனத் தரப்பிலிருந்து தொடர்ந்து அழுத்தம் வரவே, வேறு வழியின்றி சந்தோஷ் பாபுவுக்கு மீண்டும் அழுத்தம் கொடுத்தனர். அதையடுத்துதான், இனியும் பொறுக்க முடியாது என்று வி.ஆர்.எஸ் கொடுத்துவிட்டார்’’ என்றனர்.

சந்தோஷ் பாபு
சந்தோஷ் பாபு

சந்தோஷ் பாபு வி.ஆர்.எஸ் கேட்டதே பெரும்சர்ச்சையான நிலையில், அது உடனே ஏற்கப்பட்டிருப்பது ஐ.ஏ.எஸ் வட்டாரத்தில் விவாதமாகியுள்ளது. ‘‘அவர், மத்திய அரசுப் பணிக்கோ அல்லது விடுமுறையிலோ சென்றிருக்க வேண்டும்’’ என்று சொல்லும் அதிகாரிகள் பலரும், ‘‘இது அச்சமூட்டும் முன்னுதாரணம்’’ என்று பதறுகிறார்கள்.

சந்தோஷ் பாபு ராஜினாமா விவகாரத்தை, பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க கையில் எடுத்திருக்கிறது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் சந்தோஷ் பாபுவின் விருப்ப ஓய்வைக் குறிப்பிட்டு, ‘பாரத் நெட், தமிழ் நெட் செயலாக்கம் குறித்த பணிகள் விவகாரத்தில் நடக்கும் திரைமறைவு ரகசியங்களும் மர்மங்களும் என்ன?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். ‘சந்தோஷ் பாபு விருப்ப ஓய்வில் செல்லும் அளவுக்கு அழுத்தம் கொடுத்தது யார் என்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் தரவேண்டும்’ என்று அவர் வெளியிட்ட அறிக்கை, ஆளும் தரப்பை அப்செட்டாக்கி யிருக்கிறது. இந்த விவகாரத்தில் நடந்துள்ள அனைத்து விஷயங்களையும் சேகரித்துள்ள தி.மு.க தலைமை, நீதிமன்றத்துக்குச் செல்லவும் தயாராகிவருகிறதாம்.

அ.தி.மு.க அரசுக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தோஷ் பாபுவுக்குமான மோதல் முதல் முறையல்ல என்பதை விளக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர், பழைய விஷயம் ஒன்றையும் சுட்டிக்காட்டினர்.

‘‘ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்துக்கான டெண்டர் விடப்பட்டது. அப்போது தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலாளராக இருந்த சந்தோஷ் பாபுவிடம் மூத்த அமைச்சர் ஒருவர் ஒரு நிறுவனத்தின் பெயரைச் சொல்லி, அதற்கு டெண்டர் வழங்க வேண்டும் என்றார். ஆனால், அந்த நிறுவனத்தின் லேப்டாப் தரமாக இல்லை. கூடுதல் விலைக்கு அவர்கள் விலைப்பட்டியல் அளித்திருக்கிறார்கள் என்று அதை மறுத்து விட்டார். குறைவான தொகையில் அதிக தரத்துடன்கூடிய ஒரு நிறுவனத்தை இறுதி செய்திருக்கிறார்.

அதேபோல் இப்போதும் ஃபைபர் கேபிள் விஷயத்தில் ஆரம்பம் முதலே அவருக்கு அரசுடன் உரசல் இருந்துள்ளது. மத்திய அரசின் நிதியும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால், தேவையில்லாமல் சிக்கிக்கொள்ள வேண்டாம் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அளவுக்கு அதிகமான நெருக்கடியால்தான், நேரடியாக தலைமைச் செயலாளருக்கு வி.ஆர்.எஸ் விண்ணப்பத்தை அனுப்பி யிருக்கிறார். இதுகுறித்து அவர் பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் அவரிடம் தொடர்புகொண்டு கேட்டதற்கும் பதில் தரவில்லை’’ என்கிறார்கள்.

இதற்கிடையே கலிஃபோர்னியாவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் சி.இ.ஓ பதவியில் சேர்வதற்கு அவர் ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும் ஒரு தகவல் பரவியிருக்கிறது.

சந்தோஷ் பாபுவைத் தொடர்பு கொள்வதற்கான முயற்சியில் இறங்கினோம். ‘‘இதுகுறித்து இப்போது எதையும் பேச விரும்பவில்லை’’ என்று மட்டும் அவரிடமிருந்து பதில் வந்தது.

பேசாமலேயே பலரையும் பேசவைத்திருக்கிறார் சந்தோஷ் பாபு. அவர் வாய் திறந்து பேச ஆரம்பித்தால், அவருடைய ஒவ்வொரு சொல்லும் தமிழக அரசையே ஆட்டிவைப்பதாக அமையக்கூடும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு