Published:Updated:

``நாய் கடித்தால் தாங்கிக்கொள்வேன்... நரி மாதிரி குதறுகிறார்கள்" - பொன்.மாணிக்கவேல் ஆதங்கம்

பொன்.மாணிக்கவேல்

``என்னுடைய பெயர் குற்றவாளிப் பட்டியலில் இல்லை. நாய் கடித்தால் தாங்கிக்கொள்வேன். என்னை நரி மாதிரி குதறுகிறார்கள்." - பொன்.மாணிக்கவேல்

``நாய் கடித்தால் தாங்கிக்கொள்வேன்... நரி மாதிரி குதறுகிறார்கள்" - பொன்.மாணிக்கவேல் ஆதங்கம்

``என்னுடைய பெயர் குற்றவாளிப் பட்டியலில் இல்லை. நாய் கடித்தால் தாங்கிக்கொள்வேன். என்னை நரி மாதிரி குதறுகிறார்கள்." - பொன்.மாணிக்கவேல்

Published:Updated:
பொன்.மாணிக்கவேல்

விருதுநகர் மாவட்டம் ஆலப்பட்டியில் கடந்த 2008-ம் ஆண்டு கண்டெடுக்கப்பட்ட சிலைகளை மீட்ட காவல்துறை,  அவற்றை சர்வதேச கும்பலுடன் சேர்ந்து வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் விற்க முயன்றதாகப் புகார் எழுந்தது. இந்த வழக்கு தொடர்பாக சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யாக இருந்த பொன்.மாணிக்கவேல் விசாரணை மேற்கொண்டார். அப்போது, திருவள்ளூரில் துணை கண்காணிப்பாளராக இருந்த காதர் பாஷா, சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக இருந்த சுப்புராஜ் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த நிலையில், திருநெல்வேலி பழவூர் சிலைக் கடத்தல் வழக்கில் தொடர்புடைய தீனதயாளனைத் தப்பிக்கவைக்கவே, அவருடன் சேர்ந்து தன்னைப் பழிவாங்கும் நோக்கில், தனக்கு எதிராக பொன்.மாணிக்கவேல் பொய் வழக்கு பதிவுசெய்திருப்பதாகவும், அவர்மீது சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் காதர் பாஷா வழக்கு தொடர்ந்தார்.

சிபிஐ
சிபிஐ
ட்விட்டர்

இந்தச்சூழலில், பொன்.மாணிக்கவேல் மீதான புகாரின் மீது சி.பி.ஐ வழக்கு பதிவுசெய்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என, கடந்த ஜூலை மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், டெல்லி சிபிஐ இந்த வழக்கைத் தற்போது விசாரணைக்கு எடுத்திருக்கிறது. குறிப்பாக காதர் பாஷா, சுப்புராஜ் ஆகியோர் மீது சிலை கடத்தலுக்கு உதவியதாக சி.பி.ஐ வழக்கு பதிவுசெய்திருப்பதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், சென்னையில் பொன்.மாணிக்கவேல்  நிருபர்களைச் சந்தித்துக் கூறுகையில், "2017-ம் ஆண்டு நான் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி-யாக இருந்தேன். அப்போது, துப்பாக்கிமுனையில் சிலைகளைக் கொள்ளையடித்த வழக்கு ஒன்று போட்டோம். அந்த வழக்கில் 47 பக்கங்களுக்கு டி.எஸ்.பி அசோக் நடராஜன் அறிக்கையைக் கொடுத்தார். என்னைப்  பொறுத்தவரை அவர் நேர்மையான அதிகாரி.  இந்தச் சூழலில், அந்த 47 பக்க முதல் தகவல் அறிக்கையை சி.பி.ஐ மறுபதிப்பு செய்திருக்கிறார்கள். ஆனால், ஓரிரு நாள்களுக்கு முன்பு எங்கள் இருவரின் பெயரும் குற்றவாளிப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகச் செய்திகள் வெளியாகின. 

பொன்.மாணிக்கவேல்
பொன்.மாணிக்கவேல்

இது 100 சதவிகிதம் பொய். எங்கள் பெயர் குற்றவாளிப் பட்டியலில் இல்லை. சுபாஷ் சந்திர கபூர் என்ற அமெரிக்கரை நான் விட்டுவிட்டதாக காதர் பாஷா நீதிமன்றத்தில் மனு போட்டிருக்கிறார். இதேபோல், தீனதயாளன் என்பவரையும்  விட்டுவிட்டதாகக்  குற்றம்சாட்டியிருக்கிறார். ஆனால், கிட்டத்தட்ட  58  வருடங்களுக்குப் பிறகு நான்தான் அவரை முதலில் கைதுசெய்தேன். என்னைப்போய் அவரை விட்டுவிட்டீர்கள் என்று சொன்னால் அது நியாயமா... எத்தனை அதிகாரிகள் எனக்கு முன்னால் பதவியில் இருந்திருப்பார்கள். அவர்களெல்லாம் என்ன செய்தார்கள்?

பொன்.மாணிக்கவேல்
பொன்.மாணிக்கவேல்

831 தெய்வ விக்ரகங்களை அவரின் வீட்டிலிருந்து எடுத்தேன். அவருடைய வியாபாரத்தை முடக்கி, ஒரு சிலைகூட வெளிநாட்டுக்குச் செல்ல முடியாமல் செய்தோம். 2016-ல் அவரைக் கைதுசெய்து 90 நாள்கள் சிறையில் அடைத்தோம். 2006 முதல் 2016 வரை 17,800 கொலைகள் நடந்திருக்கின்றன. இந்தக் கொலை வழக்குகளில் அப்ரூவராக ஒருவரைக்கூட எடுக்கவில்லை. ஆனால், சிலைக் கடத்தல் பிரிவில் 37 கேஸ்களுக்கு 9 அப்ரூவரை எடுத்தோம். இது என்ன சாதாரண விஷயமா? 

என்.ஐ.ஏ
என்.ஐ.ஏ

இப்படி இருக்கும்போது, தீனதயாளன் வழக்கில் இன்னும்  சார்ஜ் ஷீட் போடாமலேயே இருக்கிறார்கள். சுபாஷ்  சந்திர கபூரை முதன்முதலில் பிடித்தது நாங்கள். காதர் பாஷா எனக்கு எதிரியெல்லாம் கிடையாது. 359 ரிவார்டு வாங்கியிருக்கிறேன் என்று சொல்கிறார். வீட்டில் தோசை சுட்டால்கூடத்தான்  ரிவார்டு தருகிறார்கள். நாய் கடித்தால் தாங்கிக்கொள்வேன். என்னை நரி மாதிரிக் குதறுகிறார்கள். இதேபோல், சிலைக் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் பெயர்களை  சீலிடப்பட்ட  கவரில்  உயர் நீதிமன்றத்தில் கொடுத்திருக்கிறேன். மேலும், பிரிட்டனில்  சார்ஜ்  ஷீட்  போட்டுவிட்டு அவர்கள் என்.ஐ.ஏ மூலமாக சஞ்சீவ் அசோகன், தீனதயாளன், சுபாஷ் சந்திர கபூர்,  வல்லவ  பிரகாஷ்,  சூர்யபிரகாஷ், ஆதித்ய பிரகாஷ், டெல்லியிலுள்ள குமார் ஆகியோரை அழைத்துக்கொண்டு சென்றுவிடுவார்கள். அங்கே எவ்வளவு வேகமாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று பாருங்கள். ஆனால், இங்கு வேலை செய்தவர்களையே குதறி வருகிறார்கள். இது நாடா இல்லை காடா? இங்கு வேலை நடக்கவில்லை" என்றார் காட்டமாக.