நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் 4 மாநிலங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றது. பஞ்சாபில் மட்டும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து டெல்லியின் பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் நேற்று வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. அதில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி உரையாற்றினார்.
மேலும், இந்த தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் 'மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்' எனக் கூறியிருந்தது. உத்தரப்பிரதேசத்தில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் பா.ஜ.க, முழு மூச்சாக எதிர்த்த காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளை விடப் பெருமளவில் வாக்குகளைப் பெற்றிருந்தது.

மேலும், பஞ்சாபில் தேர்தலுக்கு முன்பு வரை ஆட்சியிலிருந்த பாரம்பரியமான காங்கிரஸ் கட்சி சமீபத்தில் தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி-யிடம் தோல்வியைச் சந்தித்தது. இவை அனைத்தும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு குறைந்து விட்டதை அறிவிக்கிறது என பேசப்படுகிறது.
இந்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், ``காங்கிரஸ் விரும்பினால் நாம் அனைவரும் இணைந்து 2024 பொதுத் தேர்தலில் போட்டியிடலாம். இப்போதைக்கு நேர்மறையாகவும், அமைதியாகவும் அடுத்து வரும் தேர்தல் பற்றிச் சிந்திப்போம்.

பா.ஜ.க-வின் 4 மாநிலச் சட்டசபைத் தேர்தல் வெற்றி அடுத்து 2024 -ல் வரும் தேர்தலில், பா.ஜ.க.வுக்கு பெரும் இழப்பாக அமையும். 2022 தேர்தல் முடிவுகள் தான் 2024 தேர்தலின் தலைவிதியைத் தீர்மானிக்கும் என்பது நடைமுறைக்கு மாறானது" எனத் தெரிவித்துள்ளார்.