Published:Updated:

``கொரோனாதான் காரணம் என்றால், குடியரசு தின விழாவையே ரத்துசெய்திருக்க வேண்டும்!'' - கொதிக்கும் திருமா

திருமாவளவன்

''பா.ஜ.க ஆட்சி செய்யாத பிற மாநிலங்களான மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைப் புறக்கணித்திருக்கிறார்கள் என்பதை அரசியல் பழிவாங்கும் முயற்சியாகத்தான் பார்க்கவேண்டியிருக்கிறது'' என்கிறார் தொல்.திருமாவளவன்.

``கொரோனாதான் காரணம் என்றால், குடியரசு தின விழாவையே ரத்துசெய்திருக்க வேண்டும்!'' - கொதிக்கும் திருமா

''பா.ஜ.க ஆட்சி செய்யாத பிற மாநிலங்களான மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைப் புறக்கணித்திருக்கிறார்கள் என்பதை அரசியல் பழிவாங்கும் முயற்சியாகத்தான் பார்க்கவேண்டியிருக்கிறது'' என்கிறார் தொல்.திருமாவளவன்.

Published:Updated:
திருமாவளவன்

நாட்டின் 75-வது குடியரசு தின விழாவில், தமிழக அலங்கார ஊர்திகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது அரசியல்ரீதியாக மட்டுமன்றி, பொதுமக்கள் தரப்பிலும் பல்வேறு அதிருப்திகளை ஏற்படுத்திவருகிறது. 'தமிழக அலங்கார ஊர்திகள் தேர்வு செய்யப்படாததற்கு தமிழக அரசே காரணம்' என பா.ஜ.க-வும் 'அலங்கார ஊர்திகளைத் தேர்வு செய்வதற்கான குழு விதித்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஊர்தியின் வடிவமைப்பை மாற்றிய பின்னரும் காரணமே கூறாமல் அனுமதி மறுத்துவிட்டனர்' என்று தமிழக அரசும் மாறி மாறிக் குற்றம்சாட்டிவருகின்றன.

தமிழகம் சார்பில் தயார்செய்யப்பட்ட அலங்கார ஊர்தியில், வ.உ.சிதம்பரனார், வேலுநாச்சியார், பாரதியார் உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களின் படங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், இந்தத் தலைவர்கள் தேசிய அளவில் புகழ்பெற்ற தலைவர்கள் அல்ல எனக் கூறி தேர்வுக்குழுவினர் நிராகரித்துவிட்டதாக அதிகாரபூர்வமற்ற செய்திகள் வெளியானதையடுத்து, மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டது.

குடியரசு தின அணிவகுப்பு
குடியரசு தின அணிவகுப்பு

'தேச விடுதலைக்காக தம் இன்னுயிரையும் தந்து போராடி, தியாகம் செய்த தமிழகத் தலைவர்களுக்கு பெருமை சேர்க்கவேண்டிய நேரத்தில், அவமரியாதை செய்வதுபோல் மத்திய பா.ஜ.க அரசு புறக்கணித்திருப்பது கண்டிக்கத்தக்க செயல்' எனக் கொதித்தனர் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள்.

தமிழகம் மட்டுமன்றி, கேரளா, மேற்கு வங்கம், ஆந்திரா என பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால் மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராக நாடு முழுக்கவே விமர்சனங்கள் எழுந்தன. மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இது குறித்து நேரடியாகப் பிரதமருக்கே கடிதம் எழுதி, 'மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும்' எனக் கோரிக்கைவைத்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த விவகாரம் குறித்து அரசியல்ரீதியான விமர்சனங்களை முன்வைப்போர், 'பா.ஜ.க ஆளுங்கட்சியாக இல்லாத மாநிலங்கள் குடியரசு தின விழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டிருப்பது ஜனநாயகத்துக்கு விரோதமானது. குறிப்பாக, மத்திய பா.ஜ.க அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்துவரும் மாநிலங்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளன' என்று குமுறுகின்றனர்.

பதிலுக்கு பா.ஜ.க தரப்பிலோ, `நோய்த்தொற்று காலகட்டத்தில், குறைவான எண்ணிக்கையிலான ஊர்திகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற விவரத்தை ஆரம்பத்திலேயே மத்திய அரசு தெளிவுபடுத்திவிட்டது. ஆனால், எதிர்க்கட்சிகள்தான் வேண்டுமென்றே இந்த விவகாரத்தை மோடி எதிர்ப்பு அரசியலாக உருமாற்றிவருகின்றனர்' என்கின்றனர்.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

இதற்கிடையே, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக குடியரசு தின நிகழ்வில், மொத்தம் 12 அலங்கார ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நெருக்கடியான இந்தச் சூழலை தமிழக முதல்வர் புரிந்துகொள்வார் என்று நம்புகிறோம்' என்று விளக்கம் அளித்துள்ளார்.

இதையடுத்து, 'இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெரும் பங்காற்றிய வ.உ.சிதம்பரனார், பாரதியார், வேலு நாச்சியார் உள்ளிட்ட தமிழகத் தலைவர்களது உருவப்படங்களைத் தாங்கிய அலங்கார ஊர்திகள், தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கண்காட்சிக்காக வலம்வரும்' எனத் தமிழக அரசு அறிவித்திருப்பது ஆறுதல் தரும் செய்தியாக அமைந்திருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குடியரசு தின விழா சர்ச்சைகள் ஓய்வதற்குள், தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளை உள்ளடக்கிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு அறிவிப்பு வெளியானதையடுத்து தமிழக அரசியல் களம் மீண்டும் தேர்தல் பரபரப்புக்குள் வந்துள்ளது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், வேட்பாளர் அறிவிப்பு எனக் கட்சிகள் சுறுசுறுப்பாகிவரும் இந்த நேரத்தில், தி.மு.க கூட்டணியில் அங்கம் வகித்துவரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனிடம், உள்ளாட்சித் தேர்தல் நிலவரம் மற்றும் குடியரசு தின விழா சர்ச்சைகள் குறித்தக் கேள்விகளைக் கேட்டோம்....

திருமாவளவன்
திருமாவளவன்

''கடந்த நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் வி.சி.க உள்ளிட்ட தி.மு.க-வின் தோழமைக் கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீட்டில் திருப்தி இல்லாத சூழல் நிலவியதே?''

``நாடாளுமன்றம், சட்டமன்றம் என எந்தவொரு தேர்தலிலுமே நாம் விரும்புகிற எண்ணிக்கையில், விரும்புகிற தொகுதிகளைப் பெற்றுவிட முடியாது. ஏனெனில், ஒரு கூட்டணியிலேயே ஏழெட்டு கட்சிகள் இருக்கின்றன. இந்தச் சூழலில், கூட்டணிக்குத் தலைமை தாங்கிவரும் கட்சி, தொகுதிப் பங்கீட்டின்போது அனைவரையுமே திருப்திபடுத்திவிட முடியாது. எனவே, தேர்தல் அரசியலில் எல்லாக் கட்சிகளுமே எப்போதும் எதிர்கொள்ளக்கூடிய சாதாரண பிரச்னைதான் இது. நாங்கள் எங்கள் விருப்பத்தைச் சொல்வோம். கூட்டணிக்குத் தலைமை தாங்கக்கூடிய கட்சி அவர்களது சிக்கல்களை - நெருக்கடிகளை எடுத்துச்சொல்லும். பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஒருவருக்கொருவர் சுமுகமாகப் பேசி நிலையானதொரு முடிவுக்கு வருவோம்.''

``உள்ளாட்சித் தேர்தலின் வெற்றியைக் கருத்திற்கொண்டே, குடியரசு தின அலங்கார ஊர்தி சர்ச்சையில், பிரதமர் மோடியை தமிழக அரசு பழிசுமத்துகிறது என்கிறார்களே பா.ஜ.க-வினர்?''

``பா.ஜ.க-வினர் தங்களைத் தற்காத்துக்கொள்வதற்காக இப்படிப் பேசிவருகிறார்கள். இந்தச் சூழலில், அவர்களால் இப்படித்தான் பேச முடியும்.

இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில், மொழி, இனம், மதம் என்ற வேறுபாடின்றி நாடு முழுக்க இருக்கக்கூடிய ஒவ்வொரு தேசிய இனத்தவரும் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். ஆனால், பா.ஜ.க ஆளுகிற மாநிலங்களுக்கும், வட மாநிலங்களுக்கும் மட்டுமே முன்னுரிமை கொடுப்போம் என்று அவர்கள் செயல்பட்டிருப்பது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.

ஸ்டாலின், மோடி
ஸ்டாலின், மோடி

இந்தியாவை ஆட்சி செய்யக்கூடிய இடத்துக்கு பா.ஜ.க-வினர் இன்றைக்கு வந்துவிட்டாலும்கூட, கடந்தகால சுதந்திரப் போராட்ட வரலாற்றில் சங்பரிவார்கள் யாரும் பெரிய அளவில் பங்களிப்பு செய்யவில்லை. எனவே, விடுதலைப் போராட்டத்துக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்ற மாநிலங்களை இன்றைக்கு அவர்கள் புறக்கணிப்பதென்பது சம்பந்தப்பட்ட மாநில மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துகிற செயல். இது வன்மையான கண்டனத்துக்குரியது.

ஒரு மாநிலத்துக்கு ஓர் அலங்கார ஊர்தியை அனுமதிப்பதற்குக்கூட மத்திய பா.ஜ.க அரசு தயாராக இல்லையென்றால், எந்த அளவுக்கு அவர்களது யதேச்சதிகாரப்போக்கு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

ஏனெனில், பா.ஜ.க ஆட்சி செய்யாத பிற மாநிலங்களான மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைப் புறக்கணித்திருக்கிறார்கள் என்பதை அரசியல் பழிவாங்கும் முயற்சியாகத்தான் பார்க்கவேண்டியதிருக்கிறது. எனவே, இதைக் கண்டிக்கவேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டுக்கும், தமிழக அரசுக்கும் இருக்கிறது. இந்தப் பிரச்னையைத் தேர்தலுக்கானது என்று யாரும் சுருக்கிப் பார்க்கக் கூடாது.''

குடியரசு தின விழா ஒத்திகை
குடியரசு தின விழா ஒத்திகை

``கொரோனா காலகட்டத்தில், 12 ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி, அதில் பா.ஜ.க ஆட்சி செய்யாத சத்தீஸ்கர் மாநில ஊர்திக்கும் அனுமதி என்ற உண்மையையெல்லாம் தி.மு.க அரசு மறைத்துவிடுவதாக புகார் இருக்கிறதே?''

''75-வது குடியரசு தினத்தில், அனைத்து மாநிலங்களுக்கும் அங்கீகாரம் கொடுக்காமல் 12 ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி என்பதே ஏற்றுக்கொள்ள முடியாதது. ஏன் இந்த அளவுகோல் வைக்கிறார்கள்? 12 ஊர்திகள் சென்றால், கொரோனா வராது, கூடுதலாக ஓர் ஊர்திக்கு அனுமதித்துவிட்டால் கொரோனா வந்துவிடுமா? கொரோனாவைக் காரணம் சொல்லி, கட்டுப்பாடு வைப்பதாக இருந்தால், குடியரசு தின விழாவையே ரத்துசெய்திருக்க வேண்டும். ஆனால், விழாவில் 40 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்ள அனுமதித்திருக்கிறார்களே!

இந்தியா, குடியரசு நாடாக மாறுவதற்குப் பாடுபட்ட ஒவ்வொரு சமூகத்தினரின் பங்களிப்பும் அடையாளமும் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலம், யூனியன் பிரதேசங்களின் சார்பிலும் ஒவ்வொரு ஊர்தியை அனுமதிப்பதால் கூடுதலாக அரை மணி நேரம் அல்லது முக்கால் மணி நேரம் ஆகிவிடுவதால், எந்தக் குடியும் மூழ்கிவிடப் போவதில்லை! எனவே, இந்த விஷயத்தில் மத்திய பா.ஜ.க அரசு தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்!''

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் முழுப் பேட்டி நாளை (26-01-2022) வெளியாகும் ஜூனியர் விகடனில் இடம்பெறுகிறது!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism