குடியரசுத் தலைவர் தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகளின் சார்பாக பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளுடன் நேற்றைய தினம் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசியவாத காங்கிர தலைவர் சரத் பவாரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக முன்னிறுத்த முடிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அனால், சரத் பவார் குடியரசுத் தலைவர் தேர்தலில் தனக்கு ஈடுபாடில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், பா.ஜ.க-வின் அகில இந்தியத் துணைத் தலைவரும், மேற்கு வங்க எம்.பி-யுமான திலீப் கோஷ் டெல்லியில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருந்தது. அப்படிப்பட்ட குடியரசுத் தலைவர் இருந்தால் நாட்டில் பயங்கரவாதம் அதிகரிக்கும். அதனால், யாரும் முட்டாளாக இருக்க விரும்பவில்லை. மேலும், சரத் பவாரின் வயதும் அவருக்கு ஒத்துழைக்கவில்லை. மம்தா பானர்ஜி எல்லோரும் ஒரு முறை சொன்னால் சரத் பவார் ஒப்புக் கொள்வார் என நினைக்கிறார். ஆனால், அவர் பெயரை யாரும் கூறவில்லை. அகில இந்தியத் தலைவராக வர வேண்டும் என்பது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் நீண்ட நாள் கனவு.
மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு பெரிய பேரணியெல்லாம் நடந்தது. நிறையத் தலைவர்கள் அப்போது வந்தார்கள். அவர்களெல்லாம் இப்போது என்ன ஆனார்கள்? காணாமல் போய்விட்டார்களே... ஏனென்றால், அவர்களுக்கு இன்னும் நம்பிக்கையான தலைவர் கிடைக்கவில்லை.
இன்னும் சொல்வதானால், மேற்கு வங்கத்தில் தினமும் ஒன்றன்பின் ஒன்றாகப் பிரச்னைகள், அதற்கான போராட்டம், தர்ணா எனத் தொடர்ந்து நடக்கிறது. அதிலிருந்து தப்பிக்கவே அவர் டெல்லி சென்றார். அங்கே நடுவில் அமர்ந்து தேநீர் அருந்துகிறார். மாநிலத்தில் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். 2024 மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை பா.ஜ.க தொடங்கியிருக்கிறது. நமக்கு நல்ல பலன் கிடைக்க வேண்டும். அதனால்தான் அனுபவம் வாய்ந்த தலைவர்கள், அமைச்சர்கள் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர்" எனக் கூறினார்.
