Published:Updated:

`கட்சி என்றிருந்தால், குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும்!' - ஒப்புக்கொள்கிறார் அதிமுக அன்வர் ராஜா

அன்வர் ராஜா
News
அன்வர் ராஜா

''அவசர நிலை பிறப்பிக்கப்பட்டபோது இருந்த இந்தியா போல்தான், இன்றைய அதிமுக நிலையும் உள்ளது. 'வேறு வழியே இல்லை' என்கிற தேவை ஏற்படும்போது மட்டும்தான் கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டமே நடைபெறுகிறது'' என்கிறார் அன்வர் ராஜா.

50-வது ஆண்டு பொன்விழாவைக் கொண்டாடிவரும் அ.தி.மு.க-வுக்கு இது சோதனையான காலகட்டம்! அடுத்தடுத்த தேர்தல்களில் கட்சி அடைந்துவரும் தோல்விகள், பிரிந்து நின்று போராடிக் கொண்டிருக்கும் கட்சித் தலைமைகள், முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகள் என நாலாபக்கமும் நெருக்கடி!

இந்த நிலையில், முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க-வின் மூத்த தலைவருமான அன்வர் ராஜாவிடம் பேசினேன்....

''உள்ளாட்சித் தேர்தல் எப்போதும் ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே இருக்கும் என்று கூறியிருக்கிறீர்களே... அப்படியென்றால், 'உள்ளாட்சித் தேர்தல் வெற்றி, தி.மு.க ஆட்சிக்கு மக்கள் கொடுத்த நற்சான்று' என்ற முதல்வரின் கருத்து உண்மை என்கிறீர்களா?''

கருணாநிதி
கருணாநிதி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''இல்லையில்லை.... அப்படியென்றால், தி.மு.க ஆட்சிக்காலமான 1996-ல் நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றபோதும், அவர்களது கூட்டணிக் கட்சியினரே அந்த வெற்றிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நீதிமன்றமும் அதுகுறித்து விசாரணை நடத்தி, 'ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் தேர்தல் நடத்தப்பட்டிருக்கிறது' என்று தேர்தல் முறைகேடுகளை எல்லாம் சுட்டிக்காட்டிக் கண்டித்தது. வேறு வழியில்லாமல், அன்றைய முதல்வரான கருணாநிதியும் அந்தத் தேர்தல் முடிவையே ரத்து செய்தார். தி.மு.க ஆட்சியின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு இது ஓர் உதாரணம்.

''நற்சான்று கொடுக்கும் அளவுக்கு தி.மு.க அரசு, அப்படி என்ன செய்துவிட்டது? இந்த 5 மாதமும் கருணாநிதிக்கான ஆட்சியாகத்தான் நடந்துகொண்டிருக்கிறது. முதலில் கருணாநிதிக்கு படத் திறப்பு, அடுத்து அவரது சமாதிக்கு நிதி ஒதுக்கீடு, 3-வதாக அவரது பெயரில் நூலகம் அமைப்பதாக அறிவிப்பு, ஏற்கெனவே உடைக்கப்பட்ட கருணாநிதி சிலையை மீண்டும் நிறுவ முடிவு, ஓமாந்தூரார் அரசு மருத்துவமனையை மறுபடியும் தலைமைச் செயலகமாக மாற்றுவதற்காக அடிக்கல் நாட்டுவது... இப்படி எல்லாமே கருணாநிதிக்கான ஆட்சியாகத்தானே நடந்துகொண்டிருக்கிறது. இதில், மக்கள் நற்சான்று தருகிற அளவுக்கு, மக்களுக்கான ஆட்சி எங்கே நடந்திருக்கிறது... ?''

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

''தேர்தல் வாக்குறுதிகளில், 200-க்கும் மேற்பட்டவற்றை நிறைவேற்றியிருப்பதாக தி.மு.க அரசு சொல்வதை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் பேசுகிறீர்களே?''

''அப்படியெல்லாம் எந்தத் திட்டத்தையும் தி.மு.க அரசு நிறைவேற்றவில்லை. எல்லாம் கணக்கு காட்டுவதற்கான வெற்று அறிவிப்புகள் மட்டுமே. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், மகளிருக்கான இலவச பயணம், பால் விலை - பெட்ரோல் விலை குறைப்பு, கொரோனா நிதி உதவி என 4 திட்டங்களை மட்டும்தான் சொல்லமுடியும்.

'நீட் தேர்வை ரத்து செய்வோம்' என்றார்கள். பெட்ரோல் டீசல் விலையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவருவோம் என்று சொன்னார்கள். எதுவுமே நடக்கவில்லையே!

நீட் தேர்வை ஒழிப்போம் என்று கூறிய தி.மு.க-வினர், இப்போது, நீட் தேர்வு எழுத பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா முழுக்க நடைமுறைப்படுத்தப்படும் ஒரு திட்டத்தை இவர்கள் எப்படி தடுத்து நிறுத்த முடியும்? அதனால்தான், 'நீட் தேர்வை ரத்து செய்தால் நான் தூக்கு மாட்டிக்கொள்கிறேன்' என்று தேர்தலின்போதே சவால் விட்டேன்.''

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

''நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி என அடுத்தடுத்த தேர்தல்களில் அ.தி.மு.க சந்தித்துவரும் படுதோல்வி தொண்டர்களை சோர்வை ஏற்படுத்திவிடாதா?''

''அ.தி.மு.க மிகப்பெரிய மக்கள் இயக்கம்; எனவே மீண்டும் துளிர்த்து எழும். தி.மு.க என்பது லிமிடெட் கம்பெனிதான். எனவே, அவர்களுக்கு பெரிதாக மக்கள் செல்வாக்கு எல்லாம் கிடையாது. அவர்களுக்கென்று குறிப்பிட்ட வாக்கு விகிதம் இருக்கிறது. கூடவே, இஸ்லாமியர், கிறிஸ்தவர் வாக்குகள் 100% கிடைக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் சிறுபான்மையின மக்களின் வாக்கு 16% ஆக இருக்கிறது. எனவே, தி.மு.க வெற்றி பெறுகிறது. ஆனால், நாங்கள் பா.ஜ.க கூட்டணியில் இருப்பதால், சிறுபான்மையின வாக்குகள் முழுமையாகக் கிடைக்காமல் தோல்வியடைந்து வருகிறோம்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

''10.5% இட ஒதுக்கீட்டு விவகாரத்தில், அ.தி.மு.க-வின் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் என இரட்டைத் தலைமைகளுக்குள்ளேயே கருத்து வேறுபாடு நிலவியதே....?''

''ஆமாம்... 10.5 % இட ஒதுக்கீடு குறித்து அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியே தனித்து முடிவெடுத்து சட்டசபையில் அறிவிப்பும் செய்துவிட்டார். அதனால்தான் 'அ.தி.மு.க-வின் தேர்தல் வியூகம் தோற்றுவிட்டது' என ஓ.பி.எஸ்-ஸே குறைபட்டுக்கொண்டார். இதுபோன்ற கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக, கட்சியின் உயர் மட்டக் குழு அமர்ந்துபேசி முடிவெடுத்திருந்தால், அ.தி.மு.க-வுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

இப்போதும்கூட, 'கட்சிக்குப் பின்னடைவு ஏன், அடுத்தகட்டமாக கட்சியை எப்படி முன்னேற்றப் பாதையில் பயணிக்க வைப்பது' என்பது குறித்தெல்லாம் எல்லோரும் உட்கார்ந்து பேசி முடிவெடுக்க வேண்டும்!''

ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி
ஓ.பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

''அ.தி.மு.க தலைவர்களுக்குள்ளேயே நிறைய குழப்பங்கள் நிலவுகின்றன. அதனால்தான் கட்சிக்கு இந்தப் பின்னடைவு என்றெல்லாம் செய்திகள் வெளிவருகின்றனவே...?''

''கட்சி என்றிருந்தால், அதில் குழப்பங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால், இவையெல்லாம் தற்காலிகமானதுதான். விரைவில் உட்கட்சித் தேர்தல் நடைபெறப் போகிறது, பொன்விழா கொண்டாட்டமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எனவே, எல்லாப் பிரச்னைகளிலிருந்தும் மீண்டெழுந்து, எழுச்சி பெறுவோம்!''

''வெற்றியின்போது, 'இது இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் தலைமைக்குக் கிடைத்த வெற்றி' என்று சொல்கிறவர்கள் தோல்விக்கும் பொறுப்பேற்க வேண்டும்தானே?''

''கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது எங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவு என்பது, அ.தி.மு.க என்ற கட்சிக்கு ஏற்பட்ட தோல்வி. அதனால்தான், 'தேர்தலில் நாங்கள் வகுத்த வியூகம் சரியில்லாததால் தோல்வியடைந்தோம்' என ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்-ஸே சொல்லியிருக்கிறார்.''

ராமதாஸ்
ராமதாஸ்

''உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.க படுதோல்வி அடையும் என பெங்களூரு புகழேந்தி ஏற்கெனவே சொல்லியிருந்ததுதானே நடந்திருக்கிறது?''

''புகழேந்தி சொன்னது உண்மையாகியிருக்கிறது என்று சொல்லக்கூடாது. கட்சியைவிட்டு அவரை நீக்கிவிட்டதால், 'அ.தி.மு.க இப்படி ஒரு படுதோல்வியை அடையவேண்டும்' என்பது புகழேந்தியின் விருப்பமாக இருந்திருக்கிறது. அதைத்தான் அவரும் சொல்லியிருந்திருக்கிறார். அவரது ஆற்றாமையை புலம்பலாக வெளிப்படுத்தியிருந்தார்... அவ்வளவுதான்!''

''ஆனால், 'ஆளும் கட்சியும் ஆண்ட கட்சியும் வாக்குக்கு பணத்தை வாரியிறைத்தது' என உங்கள் கூட்டணியிலுள்ள பா.ம.க மருத்துவர் ராமதாஸே சொல்கிறாரே?''

''அது அவருடைய சொந்தக் கருத்து.''

''இரட்டைத் தலைமையிலிருந்து ஒற்றைத் தலைமைக்கு மாறினால்தான் அ.தி.மு.க மீண்டும் புத்துயிர் பெறும் என்ற விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''அதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். கட்சி இப்போது சந்தித்து வருகிற பின்னடைவுக்கு இரட்டைத் தலைமைதான் காரணம் என்று சிலர் சொல்கிறார்கள். எனவே, ஒற்றைத் தலைமையின் கீழ் கட்சி வந்தால், அ.தி.மு.க புத்துயிர் பெறும் என்ற வாதத்தை நானும் ஏற்கிறேன்.

அதேசமயம், இரட்டைத் தலைமை - ஒற்றைத் தலைமை என எதுவாக இருந்தாலும் ஒரு ஜனநாயக கட்சியில், எந்தவொரு முடிவையும் எல்லோரும் அமர்ந்து பேசி ஒருமித்தக் கருத்தாக முடிவெடுத்தால் மட்டுமே வெற்றி சாத்தியப்படும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களே கட்சியின் மூத்த உறுப்பினர்கள், அமைச்சர்கள் என அனைவரிடமும் கருத்து கேட்டு ஆலோசித்தப் பிறகே தீர்க்கமாக முடிவெடுப்பார்கள்.''

ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்
ஓ.பி.எஸ் - இ.பி.எஸ்

''தற்போதைய அ.தி.மு.க தலைவர்கள், பிரச்னைகள் குறித்து கட்சியின் மூத்த உறுப்பினர்களிடம் விவாதிப்பதில்லையா?''

''இப்போது அதுபோன்ற கலந்துரையாடல்களே கட்சியில் இல்லை. அவசர நிலை பிறப்பிக்கப்பட்டபோது இருந்த இந்தியா போல்தான், இன்றைய அ.தி.மு.க நிலையும் உள்ளது. 'வேறு வழியே இல்லை' என்கிற தேவை ஏற்படும்போது மட்டும்தான் கட்சியின் உயர்மட்டக் குழுக் கூட்டமே நடைபெறுகிறது.

இதோ... அ.தி.மு.க உருவாகி 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே, கொண்டாட வேண்டும் என்ற நிலை உருவானதால் மட்டுமே இதுகுறித்து விவாதிப்பதற்காக கட்சியின் உயர்மட்டக் குழு கூடியிருக்கிறது. இதேபோல், எல்லாப் பிரச்னைகள் குறித்தும் கூடி விவாதித்து முடிவெடுத்தால்தானே நல்லது!''

''ஆளுங்கட்சியை எதிர்த்து விமர்சித்தால், 'வழக்கு பாயும், கைதாவோம்' என்று அ.தி.மு.க தலைவர்கள் பயப்படுகிறார்களா?''

''அரசியல் என்று வந்துவிட்டால், வழக்கு பாயத்தான் செய்யும். 'என் பின்னால் வந்தால், சோறு கிடைக்காது. சிறைத் தண்டனைதான் கிடைக்கும்' என்று அன்றைக்கே அண்ணா சொன்னார். அதேபோல், எம்.ஜி.ஆர் மீது பாயாத வழக்குகளா? 'எம்.ஜி.ஆர் மீது தொடர்ச்சியாக வழக்கு போட்டுவிட்டால், கட்சியை கலைத்துக்கொண்டு ஓடிவிடுவார்' என்றெண்ணித்தானே 15, 20 வழக்குகளை கருணாநிதி போட்டார். ஆனால், எந்த வழக்கிலும் வாய்தா வாங்காமல், நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜரானார்தானே எம்.ஜி.ஆர்.''

''கட்சியைக் காப்பாற்றுவதைவிடவும், தாங்கள் சேர்த்த சொத்துகளைக் காப்பாற்றுவதற்காகவே அ.தி.மு.க தலைவர்கள் பம்மி பதுங்குகிறார்கள் என வருத்தப்பட்டிருக்கிறீர்களே ஏன்?''

''சமூக நீதி, மொழிக்கொள்கை என அ.தி.மு.க-வின் திராவிடக் கொள்கைகளைப் பின்பற்றுவதில் யாருக்கும் பயப்படாமல் உறுதியோடு இருக்கவேண்டும். ஜெயலலிதா யாருக்காவது பயந்தாரா? ஆனால், இன்றைக்கு அப்படியெல்லாம் அ.தி.மு.க செயல்படாததால்தான் மக்களின் நம்பிக்கையை இழந்து நிற்கிறது கட்சி.

நரேந்திர மோடி - ராகுல் காந்தி
நரேந்திர மோடி - ராகுல் காந்தி

தி.மு.க ஆட்சி இப்படியே நீடிக்கப்போவதில்லை. அவர்களும் எந்தெந்த வழிகளில் எல்லாம் தவறு செய்துகொண்டிருக்கிறார்கள் என்பது எங்களுக்கும் தெரியும். எனவே, இன்னும் 6 மாதத்தில் மக்கள் அனைவருமே இந்த ஆட்சியை வெறுப்பார்கள். அப்போது, தி.மு.க-வுக்கு மாற்றாக அ.தி.மு.க-வை மக்கள் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பை இப்போதே அ.தி.மு.க தலைவர்கள் உருவாக்கவேண்டும்.

இன்றைக்கு தேசிய அரசியலில், பா.ஜ.க-வின் செயல்பாடு சரியில்லை என்பது மக்களுக்குத் தெரிந்திருந்தாலும்கூட அதற்கு மாற்றாக காங்கிரஸ் கட்சியைக் கொண்டுவர வேண்டும் என்றால், அதற்கு காங்கிரஸ் கட்சி தயாராக இருக்க வேண்டும் அல்லவா... ஆனால், நிலைமை அப்படி இல்லையே. அதேபோன்ற நிலை தமிழ்நாட்டிலும் வந்துவிடக் கூடாது என்றுதான் அ.தி.மு.க தொண்டனாக நான் விரும்புகிறேன்.

1977 காலகட்டத்தில், எம்.ஜி.ஆருக்கு எதிராக, அவர் ஒரு மலையாளி என்று தொடர் பிரசாரம், 'தமிழர் படை' என எண்ணற்ற அரசியல்களை எல்லாம் கருணாநிதி செய்துபார்த்தும்கூட, எம்.ஜி.ஆர் வெற்றி பெற்று முதல்வர் ஆகிவிட்டார். தி.மு.க-வுக்கு வெறும் 45 எம்.எல்.ஏ-க்கள்தான். இந்த நிலையிலும்கூட, சோர்ந்துபோகாமல் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து அரசியல் செய்துவந்தார் கருணாநிதி. அதனால்தான் எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னராவது அவரால் முதல்வராக முடிந்தது. மாறாக, தேர்தல் தோல்வியில் சோர்ந்துபோய் வேறு யாராவது ஒருவரை எதிர்க்கட்சித் தலைவராக கருணாநிதி நியமித்திருந்தால், இன்றைக்கு தி.மு.க என்ற கட்சியே இருந்திருக்குமா? ஆக, அரசியலில் வியூகம் ரொம்பவும் முக்கியம்.''