Published:Updated:

விற்கப்படும் பொதுத்துறை நிறுவனப் பங்குகள் - எதிர்கால விளைவுகள் என்னென்ன?

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதனால், மத்திய அரசின் பொருளாதாரச் சிக்கல் தீருமா... அதனால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பது குறித்த வல்லுநர்களின் கருத்துகள்...

2020-21 நிதியாண்டில் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்று 2.1 லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் இலக்கைக்கொண்டிருந்தது. ஆனால், அதைப் பூர்த்தி செய்ய முடியவில்லை. 2019-20 நிதியாண்டில் 1.05 லட்சம் கோடி ரூபாய் மற்றும் 2018-19 நிதியாண்டில் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான அரசுப் பொதுத்துறை பங்குகளை விற்பனை செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஐ.டி.பி.ஐ வங்கி, பி.பி.சி.எல்., இந்தியன் ஷிப்பிங் கார்ப்பரேஷன், கன்டெய்னர் கார்ப்பரேஷன், நீலாஞ்சல் இஸ்பத் நிகாம் லிமிடெட் உள்ளிட்ட பல நிறுவனங்களில் பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் இந்த இலக்கை அடைய அரசு தீர்மானித்திருந்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், காப்பீட்டு நிறுவனங்களில் அந்நிய நேரடி முதலீட்டை 49%-ல் இருந்து 74%-ஆக உயர்த்த யோசனை கூறப்பட்டிருக்கிறது என்றும் கூறினார். இது தவிர, எல்.ஐ.சி பங்குகளையும் பங்குச் சந்தையில் இறக்கப்போவதாக நிதியமைச்சர் அறிவித்தார். நீண்டகாலமாக நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களை தனியார்மயமாக்குவது குறித்து மத்திய அரசு தொடர்ந்து பேசிவருகிறது. இதன் மூலம் அந்த நிறுவனங்களை மீட்பதோடு, அவற்றின் வருவாயையும் அதிகரிக்க முடியும் என்று மத்திய அரசு கூறிவருகிறது.

ஏர் இந்தியா SATS
ஏர் இந்தியா SATS

இதற்காக The National Monetisation Pipeline என்ற பெயரில் புதிய திட்டத்தை உருவாக்கி, அதை நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்திருக்கிறார். இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைத் தனியாருக்கு விற்பனை செய்வதால் என்ன பாதிப்புகள் ஏற்படும் எனப் பொருளாதார வல்லுநர்களிடம் பேசினோம்.

நிதிப் பற்றாக்குறை... பொதுத்துறை நிறுவனங்களை 
விற்றால் பிரச்னை தீருமா?

கோபாலகிருஷணன் - பொருளாதார வல்லுநர்

``பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பதில் தீமைகளைவிட நிறைய நன்மைகள்தான் இருக்கின்றன. பி.எஸ்.என்.எல்., ஏர் இந்தியா போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் சந்தை மதிப்பு சிறப்பாக இருந்தாலும் அதன் நிர்வாகச் சீர்கேட்டால் திசைமாறிச் சென்று அரசுக்கு மட்டுமல்லாமல், வரி செலுத்தும் குடிமக்கள் மீதும் ஏற்றப்பட்டுள்ள மிகப்பெரிய சுமையாக அவை இருக்கின்றன. அரசு நிறுவனங்கள் லாப நோக்கத்துக்காக இல்லை. சேவையை மையமிட்டுத்தான் நடத்தப்படுகின்றன என்றாலும் குறைந்தபட்சம் அந்தந்த நிறுவனங்களை நடத்துவதற்குரிய வருமான வழிகளோடாவது அவை செயல்பட வேண்டும். அப்படியில்லாமல் தொடர்ந்து மக்கள் வரிப் பணத்தைச் செலவுசெய்து அந்த நிறுவனங்களைக் காப்பாற்றும் பொருளாதாரச் சூழலில் தற்போது மத்திய, மாநில அரசுகள் இல்லை என்பதுதான் உண்மை. பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளைச் சந்தைகளில் லிஸ்ட் செய்யும்போது அதனால் அரசுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கும். அந்த வருமானத்தை நாட்டின் வளர்ச்சிக்கும் பொருளாதார மேம்பாட்டுக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும். நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, ரகசியங்களைப் பாதுகாக்கும் துறைகள் என மிகச் சிலவற்றில் மட்டும் அரசு செயல்பட்டால் போதுமானது.

கோபாலகிருஷ்ணன் - பொருளாதார வல்லுநர்
கோபாலகிருஷ்ணன் - பொருளாதார வல்லுநர்

விற்பனை சார்ந்த துறைகளைத் தனியாரிடம் ஒப்படைப்பதில் எந்தச் சிக்கலும் எழப்போவதில்லை. தனியாரிடம் ஒப்படைப்பதால், புதிய சிந்தனைகளைப் புகுத்தி மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்க முடியும். தொலைத் தொடர்பு, வங்கி போன்ற சேவைகளில் தனியார் பங்களிப்பு வந்தவுடன் ஏற்பட்டுள்ள மாற்றங்களை இதற்குச் சிறந்த உதாரணமாகப் பார்க்கலாம். எனவே, இதில் எந்தத் தீமையும் இல்லை; நன்மை மட்டும்தான் இருக்கிறது.”

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நரேன் ராஜகோபாலன் - பொருளாதார ஆலோசகர்

``சுதந்திரத்துக்குப் பிறகு பொருளாதாரத்தில் பெரிய அளவில் சீர்திருத்தங்கள் ஏதும் நடக்கவில்லை. அதற்கு மாறாக, தனியார் நிறுவனங்களுக்கு வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி காங்கிரஸ், பா.ஜ.க என இரண்டு அரசுகளும் பொருளாதார நிறுவனங்களை அதலபாதாளத்துக்குக் கொண்டு சென்றுவிட்டன. தற்போது கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதற்குப் பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதைத் தவிர வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், அதனால் லாபம் கிடைக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஏனெனில், ஆன்லைனில் ரயில் டிக்கெட் விற்பனை செய்யும் ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்தைச் சந்தைப்படுத்தினால் அதிக லாபம் வரும் என பா.ஜ.க அரசு அதைச் சந்தைப்படுத்தியது. ஆனால், தற்போது வரை அந்த நிறுவனத்தின் பங்கு எந்த லாபத்தையும் ஈட்டியதாகத் தெரியவில்லை. சொல்லப்போனால் அதன் பங்குகள் முன்பிருந்ததைவிட தற்போது கீழே இறங்கியிருக்கின்றன. மாற்றாக, இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் தொழிற்சாலை போன்று செயல்படாமல் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களை, நஷ்டத்தில் இயங்கும் போக்குவரத்துத்துறை போன்ற நிறுவனங்களை மேம்படுத்தி அவற்றின் மூலம் அரசுக்கு வருமானம் ஈட்டுவதற்கான வழிமுறைகளைச் செயல்படுத்தலாம்.

ஒரே நாளில் ஓஹோ லாபம்...
தனியாருக்கு வழங்கப்படும் 4 பொதுத்துறை வங்கிகள்..! ஓர் அலசல் பார்வை
நரேன் ராஜகோபாலன் - பங்குச்சந்தை ஆலோசகர்
நரேன் ராஜகோபாலன் - பங்குச்சந்தை ஆலோசகர்

செலவினங்களைக் குறைப்பதைவிடுத்து, செயல்படக்கூடிய அல்லது குறைந்த அளவு செயல்பாட்டை உடைய பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வதை விட்டுவிட்டு அதிக லாபம் தரும் நிறுவனங்களை ஏன் விற்க வேண்டும் என்பதுதான் மிகப்பெரிய கேள்வி. ஆனால், இதற்கு மத்திய அரசுத் தரப்பிலிருந்து எந்த பதிலும் இல்லை.”

அடுத்த கட்டுரைக்கு