சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்திற்கு பதில் உரை வழங்கிய அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன், தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல, வளர்ந்த மாநிலம் என்பதையே பல்வேறு ஆய்வுகள் காட்டுவதாக தெரிவித்தார். இதையடுத்து, அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜனின் பேச்சை சுட்டிக்காட்டி மக்கள் நீதி மய்யம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், ``நிதியமைச்சர் சொல்கின்ற தரவுகள் சரியா தவறா என்ற விவாதம் ஒருபுறம் இருக்க, தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? அரசு காப்பீட்டு திட்டங்களை வைத்துள்ள மக்கள் தொகையின் சதவீதம் என்ன? தமிழகத்தின் வேலைவாய்ப்பு சதவீதம் என்ன? அதிலும் படித்த படிப்பிற்கு ஏற்றார் போல் அதே பணியை செய்பவர்கள் சதவீதம் என்ன? இந்த மேற்சொன்ன விசயங்களுக்கு நம்மிடம் தரவுகள் உண்டா? இதையெல்லாம் தாண்டி நிதி அமைச்சர் குறிப்பிட்ட 4 விஷயங்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொள்வோம்.

ஒரு பக்கம் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளால் உயர் படிப்பை தொடர முடியாத காரணத்திற்காக ரூபாய் 1000 அவர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று சொல்லிவிட்டு, மறுபக்கம் 52 சதவீத மாணவ மாணவிகள் கல்லூரிக்கு செல்கிறார்கள் என்று பெருமையாக பேசுகிறோம்.
வீடு இருக்கும் பட்சத்தில் அவர் சொல்வது போல் கிராமத்தில் வசிக்கும் 90 சதவீதத்தினருக்கு சொந்த வீடு இருக்கிறது என்றாலும், அதில் எத்தனை குடிசை வீடுகள், அதில் எத்தனை வீடுகள் முறையான இடத்தில் இல்லாமல் புறம்போக்கு நிலத்தில் கட்டப்பட்டுள்ளது போன்ற தரவுகள் நம்மிடம் உண்டா? குறிப்பாக அதில் எத்தனை வீடுகளில் கழிவறைகள் உள்ளன என்று நமக்கு தெரியுமா? நகர்புறத்தில் மக்கள் வசிக்கும் சொந்த வீடுகளில் எத்தனை லட்ச கணக்கான வீடுகள் கடனில் வாங்கப்பட்டுள்ளன என்ற தரவுகள் தெரியுமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வளர்ந்த மாநிலம் என்றால் பொங்கல் பரிசு எதற்கு? மகளிர்க்கான இலவச பேருந்து எதற்கு? வறுமை ஒழிக்கும் 100 நாள் ஊரக வளர்ச்சித் திட்டம் எதற்கு? இவை பற்றி முழுமையாக பேசாமல், நவ நாகரிகமான நகர்புறத்தில் இருந்து எந்த ஒரு கருத்தையும் சொல்வது எளிது. உண்மையான தமிழகத்தை தெரிந்து கொள்ள பைபாஸ் சாலைகளை தவிர்த்து கிராமப்புறங்களுக்கு சென்றால்தான் 100 ரூபாய் கூலிக்கு எத்தனை பேர் காத்திருக்கிறார்கள் என்பது போன்ற உண்மைகள் நமக்கு புரியும். இதைப் புரிந்து கொள்ளாமல் தமிழ்நாட்டை வளர்ந்த மாநிலமாக காட்ட முயற்சிப்பது வருத்தத்தையே தருகிறது'' எனகுறிப்பிடப்பட்டுள்ளது.