Published:Updated:

`2024-ல் பாஜக-வை வெற்றி கொள்ளவேண்டுமெனில்..?!’ - பிரசாந்த் கிஷோர் சொல்லும் கணக்கு

பிரசாந்த் கிஷோர்

2024-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜக-வை வீழ்த்த என்ன செய்யவேண்டும் என்பது குறித்து பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

`2024-ல் பாஜக-வை வெற்றி கொள்ளவேண்டுமெனில்..?!’ - பிரசாந்த் கிஷோர் சொல்லும் கணக்கு

2024-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜக-வை வீழ்த்த என்ன செய்யவேண்டும் என்பது குறித்து பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
பிரசாந்த் கிஷோர்

2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக-வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில், என்.டி.டி.வி தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்திருந்தார். அந்தப் பேட்டியில் அவர் பாஜக-வைத் தோற்கடிக்கக்கூடிய எதிர்க்கட்சியை உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்திருந்தார்.

NDTV பேட்டி
NDTV பேட்டி
NDTV

அந்த நேர்காணலில் பேசிய அவர், ``வரும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் பாஜக-வைத் தோற்கடிப்பது சாத்தியம்தான். ஆனால், இப்போதுள்ள இந்த அமைப்பில், அது சாத்தியம் கிடையாது. மேலும், தற்போது நடைபெறவுள்ள மாநிலத் தேர்தல்களின் முடிவுகளுக்கும், 2024-ம் ஆண்டு தேர்தலுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. ஒருவேளை, இந்தத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றாலும், அடுத்து நடைபெறவுள்ள தேர்தலில் பாஜக தோல்வியைத் தழுவச் சாத்தியம் உள்ளது.

உதாரணமாக, கடந்த 2012-ம் தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி வெற்றிபெற்றது. உத்தரகாண்ட், மணிப்பூர் போன்ற மாநிலங்களவையில் காங்கிரஸ் வெற்றிபெற்றது. ஆனால், 2014-ம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகள் முற்றிலும் வித்தியாசமானவை. உத்தரப்பிரதேசத்தில் பாஜக-வை எதிர்க்க வேண்டுமென்றால், அங்கு ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியின் சமூக அடித்தளத்தைப் பெரிதுபடுத்துவது மிகவும் முக்கியம்" என்று பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

தொடர்ந்து பேசியவர், ``பீகார், மேற்கு வங்காளம், ஒடிசா, தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் தோராயமாக 200 இடங்கள் உள்ளன. இதில் பாஜக உச்ச புகழிலிருந்த நேரத்தில் 50 இடங்களைக் கைப்பற்ற முடிந்தது. மீதமுள்ள 350 இடங்களிலும் அவர்கள் வெற்றிபெற்றுவிட்டார்கள். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் அல்லது மற்ற எந்தக் கட்சி கூட்டணிகளோ, ஒரு வளமான வியூகம் அமைத்து அந்த 200 இடங்களில் 100 இடங்களைக் கைப்பற்றினால் மொத்தமாக 250-260 இடங்களை எளிதாகக் கைப்பற்றும்" என்றார்.

மேலும், ``வடக்கு மற்றும் மேற்கில் மேலும் 100 இடங்களை வெல்வதன் மூலம் பாஜக-வைத் தோற்கடிப்பது சாத்தியமாகும். 2024-ம் ஆண்டு ஒரு வலுவான எதிர்க்கட்சியை உருவாக்க நான் விரும்புகிறேன். இந்துத்துவா, தேசியவாதம் மற்றும் பொதுநலன் போன்ற கருத்துகளைப் பேசி பாஜக மிகவும் வலிமையான கதையை முன்வைத்துள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்றுபடுவதைவிடப் பலவற்றைச் செய்தாக வேண்டும். அது மகா கூட்டணி என்று அழைக்கப்படும்" என்று கூறினார்.

ஒரு நபரையோ அல்லது கட்சியையோ தோற்கடிக்கும் எண்ணம் எனக்குக் கிடையாது. நமது நாட்டில் வலுவான எதிர்ப்பு தேவை என்று நான் நினைக்கிறேன். நான் எதிர்க்கட்சி சித்தாந்தத்துடன் அதிகம் இணைந்திருப்பதாக உணர்கிறேன் - பிரசாந்த் கிஷோர்

தொடர்ந்து பேசியவர், ``2015 பீகார் தேர்தலுக்குப் பிறகு ஒரு மகா கூட்டணிகூட வெற்றிபெறவில்லை. கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சி ஒன்றிணைவது மட்டும் போதாது. அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும். இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 200 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் பாஜக இருமுனைப் போட்டியை எதிர்கொள்கிறது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் ஆளுங்கட்சிகள்தான் 95 சதவிகிதம் வெற்றிபெற்றன. அதாவது 190 இடங்கள். பாஜக-வைத் தோற்கடிக்க விரும்பும் எந்த ஒரு கட்சிக்கும் ஐந்து முதல் பத்து வருடக் கண்ணோட்டம் அவசியம். ஐந்து மாதங்களில் அதைச் செய்ய முடியாது. ஆனால், அது நடக்கும். அதுதான் ஜனநாயகத்தின் சக்தி" என்று பேசியிருந்தார்.