Published:Updated:

``தகுதியின்றி பதவிகளில் வாரிசுகளைத் திணித்தால் கேள்வி கேட்கலாம்!" - தமிழச்சி தங்கப்பாண்டியன்

தமிழச்சி தங்கப்பாண்டியன்
தமிழச்சி தங்கப்பாண்டியன்

ஒரு மருத்துவரின் பிள்ளை மருத்துவராகும்போதோ, அல்லது, ஒரு வழக்கறிஞரின் மகன் வழக்கறிஞராகும் போதோ இதுபோன்ற கேள்விகள் வருவதில்லை

சமீபத்திய பரபர அரசியல் நிகழ்வுகள் குறித்த கேள்விகளோடு தென்சென்னைத் தொகுதியின் தி.மு.க எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியனைச் சந்தித்தேன்... https://bit.ly/2MxcnEk

"முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவு, எதிர்ப்பு என்று அ.தி.மு.க இரட்டை வேடம் போடுகிறது என்றால், என்.ஐ.ஏ சட்டத்திருத்தத்தை எதிர்த்து அறிக்கை வெளியிட்ட தி.மு.க., நாடாளுமன்றத்தில் அதே என்.ஐ.ஏ மசோதாவை ஆதரித்து வாக்களித்ததும் இரட்டை வேடம்தானே?"

"தீவிரவாதிகளை ஒடுக்குவதற்காக என்.ஐ.ஏ எனப்படும் தேசியப் புலனாய்வு முகமை சட்டத்தை முதலில் கொண்டுவந்ததே காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான். அந்தச் சட்டத்தில் சில குறிப்பிட்ட அம்சங்களைத்தான் இப்போது புதிதாகச் சேர்த்திருக்கிறார்கள். அந்தவகையில், எந்த ஒரு தனிநபரையும் தீவிரவாதியாகச் சித்திரிப்பது மற்றும் தனிநபர் சுதந்திரத்தை பாதிக்கின்ற வகையில் சட்டம் கையாளப்படுவது ஆகியவற்றை தி.மு.க உறுதியாகவே எதிர்த்துதான் வாக்களித்தி ருக்கிறது. எனவே, இதில் இரட்டை வேடம் என்ற பேச்சுக்கே இடமில்லை!"

"சாதி ஒழிப்பை அடிப்படைக்கொள்கையாகக் கொண்ட தி.மு.க-வும்கூட, தேர்தலின்போது சாதி பார்த்துதானே வேட்பாளர்களை நிறுத்துகிறது?"

"ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தனித்தொகுதியில் மட்டுமே வேட்பாளரின் சாதி என்னவென்று பார்க்கப் படுகிறது. ஏனைய தொகுதிகளில், மக்கள் செல்வாக்கு யாருக்கு இருக்கிறது, எந்தளவு திறம்படப் பணிபுரிவார் என்ற தனிப்பட்ட திறன்களை மட்டுமே கருத்தில்கொண்டு வேட்பாளர்களைத் தேர்வு செய்துவருகிறது தி.மு.க!"

Thamizhachi Thangapandian
Thamizhachi Thangapandian

"ஆணவப் படுகொலை போன்ற கொடூரச் சம்பவங்களின்போது, உடனடிக் கண்டனம் தெரிவிப்பதில்கூட தி.மு.க-வில் ஒரு தயக்கம் தெரிகிறதே..?"

"இதுவும் ஒரு பொய்யான குற்றச்சாட்டுதான். இளவரசன் விவகாரத்தில்கூட தி.மு.க உடனடியாகத் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறது. கொள்கைரீதியாக, பெரியார், கலைஞர் வழிவந்த தி.மு.க., சாதியப் படுகொலைகளை வன்மையாகக் கண்டிப்பதில் எப்போதும் முதலிடத்தில் நிற்கிறது."

"வாரிசு அரசியல் பற்றிய கேள்விகளின் போது, 'வாரிசு என்பதாலேயே புறக்கணிக்கப் பட வேண்டுமா, அவர்களும் கட்சிப் பணி ஆற்றியிருக்கிறார்கள்தானே' என்பதுதான் தி.மு.க தரப்பின் பதிலாக இருக்கிறது. கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் எப்போதுதான் பதவிக்கு வரமுடியும்?"

"ஒரு மருத்துவரின் பிள்ளை மருத்துவராகும்போதோ, அல்லது, ஒரு வழக்கறிஞரின் மகன் வழக்கறிஞராகும் போதோ இதுபோன்ற கேள்விகள் வருவதில்லை. ஆனால், அரசியல்வாதிகளை மட்டும் நோக்கி இப்படியான கேள்விகள் கேட்கப்படுகின்றன. தகுதியில்லாமலோ, வலுக்கட்டாயமாகவோ கட்சிப்பதவிகளில் வாரிசுகள் திணிக்கப்படுவார்களேயானால் தாராளமாக நீங்கள் கேள்வி கேட்கலாம்."

"முழுநேரக் கட்சிப்பணியாற்றிவந்த மு.க.ஸ்டாலின் 'இளைஞர் அணிச் செயலாளர்' ஆனார். ஆனால், சினிமா நடிகரான உதயநிதி ஸ்டாலின்?"

Thamizhachi Thangapandian
Thamizhachi Thangapandian

"அவர் முழுநேரக் கட்சிப்பணி ஆற்றவில்லை என்று உங்களுக்குத் தெரியுமா? பகலில் நட்சத்திரங்கள் கண்ணுக்குத் தெரிவதில்லை என்பதாலேயே நட்சத்திரங்கள் இல்லை என்றாகிவிடுமா?

சினிமா நடிகர் என்பது அவருடைய வாழ்வின் ஒரு பகுதி மட்டுமே. ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்துக்கொண்டு கேள்வி கேட்காதீர்கள். அவரும் கட்சிக் கூட்டங்கள், தேர்தல் பிரசாரங்கள் என்று தீவிர கட்சிப் பணியாற்றிக்கொண்டிருந்தவர்தான்."

"பகுத்தறிவு பேசுகிற நீங்கள், உங்கள் மணிவிழாவின்போது யாகம் வளர்த்து சடங்கு சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்திருக்கிறீர்களே?"

" 'சம்ஸ்கிருத மந்திரங்கள் ஓத நடைபெறும் திருமணச் சடங்குகள் நம் தமிழ்ப்பண்பாட்டுக்கு எதிரானது' என்று நானே பல மேடைகளில் பேசியிருக்கிறேன். ஆனால், நான் சிறுதெய்வ வழிபாட்டில் நம்பிக்கையுடைய பெண் என்பது எல்லோருக்கும் தெரியும். வீட்டிலேயேகூட என் அம்மா, துளசி மாடம் அமைத்திருக்கிறார். குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து முடிவெடுத்து நடத்துகிற ஓர் நிகழ்ச்சியில், அவர்களது விருப்பப்படி சில சடங்குகளைச் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. யாருடைய நம்பிக்கைகளிலும் நாங்கள் குறுக்கீடு செய்வது கிடையாது. அந்தவகையில் குடும்பத்துப் பெரியவர்களது ஆசையை நிறைவேற்றும் பொருட்டு நிகழ்த்தப்பட்ட இந்த ஒரு விஷயத்துக்காக நான் என் கொள்கைகளிலிருந்து நீர்த்துப்போய்விட்டதாக யாரும் சொல்லிவிடவும் முடியாது."

- என்.ஐ.ஏ சட்டம் முதல் பெண்ணுரிமை முற்போக்கு வரை பல விஷயங்களைப் பேசியிருக்கிறார் தமிழச்சி தங்கப்பாண்டியன். அவரது பேட்டியை ஆனந்த விகடன் இதழில் முழுமையாக வாசிக்க > "12 வருடங்களுக்குப் பிறகுதான் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது!" https://www.vikatan.com/news/politics/interview-with-thamizhachi-thangapandian

> ஆன்லைனில் சந்தா செலுத்த https://store.vikatan.com/

அடுத்த கட்டுரைக்கு