உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. நாட்டிலேயே அதிக சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட மாநிலமாக உத்தரப்பிரதேசம் இருப்பதால் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதில் பா.ஜ.க-வும், ஆட்சியைப் பிடித்துவிட வேண்டுமென்பதில் காங்கிரஸ், சமாஜ்வாடி போன்ற கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரப்பிரதேசம் குறித்து, ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டிருக்கிறார்.

அதில், ``யோகி ஆதித்யநாத் பயப்படுவதைப் போல உத்தரப்பிரதேசம் கேரளாவாக மாறினால், உத்தரப்பிரதேசம் சிறந்த கல்வி, வாழ்க்கைத் தரம், சுகாதார சேவைகள் மற்றும் சமூக நலன்களை அனுபவிப்பதோடு, சாதி, மத பெயர்களால் மக்கள் கொல்லப்படாத இணக்கமான நல் சமுதாயமாக உத்தரப்பிரதேசம் இருக்கும்" என்று பினராயி விஜயன் பதிவிட்டுள்ளார்.
உ.பி-யில் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்றுடன் முடிவடைந்து, மார்ச் 7-ம் தேதி வரை மீதமுள்ள 6 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
