Published:Updated:

``விஜய் அரசியல் முயற்சியில் இறங்கினால், அது மிஸ் அட்வெஞ்சராகத்தான் முடியும்” - கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்

``சூரியன் கிழக்கில்தான் உதிக்கிறது என்று ஆர்.எஸ்.எஸ் சொன்னால், காங்கிரஸ் இல்லை என்றா சொல்ல முடியும்?” - கார்த்தி சிதம்பரம்

``விஜய் அரசியல் முயற்சியில் இறங்கினால், அது மிஸ் அட்வெஞ்சராகத்தான் முடியும்” - கார்த்தி சிதம்பரம்

``சூரியன் கிழக்கில்தான் உதிக்கிறது என்று ஆர்.எஸ்.எஸ் சொன்னால், காங்கிரஸ் இல்லை என்றா சொல்ல முடியும்?” - கார்த்தி சிதம்பரம்

Published:Updated:
கார்த்தி சிதம்பரம்

தமிழக காங்கிரஸ் கட்சியின் உட்கட்சி மோதல் ஒருபக்கம்... மாநிலத் தலைவர் பதவிக்கான ரேஸ் மறுபக்கம் என்று சத்தியமூர்த்தி பவன் சுறுசுறுப்பாகியிருக்கும் நிலையில், ‘மலையைத் தூக்கிக் கையில் கொடுங்கள், தூக்குகிறேன்’ என்பதுபோல, ‘தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை என்னிடம் கொடுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று தொடர்ந்து பேசிவருகிறார் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம். சென்னை அலுவலகத்தில் அவரைச் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்...

கர்நாடக மாநிலத்தில் ராகுல் மற்றும் சோனியா காந்தி
கர்நாடக மாநிலத்தில் ராகுல் மற்றும் சோனியா காந்தி

``ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரைக்கான வரவேற்பு நாடு முழுவதும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. வரும் தேர்தலில் இதற்கான பலன் இருக்கும் என்று நம்புகிறீர்களா..?”

“வெறும் ராகுல் காந்தியின் பாத யாத்திரை மட்டும் பயன் தராது. அதை அறுவடை செய்ய வேண்டும் என்றால், அமைப்பு வேண்டும். கேரளா, கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரையால் பயன் இருக்கும். ஏனென்றால் அங்கு அமைப்பு இருக்கிறது. அமைப்பு வலுவாக இல்லாத பகுதிகளில் நடைப்பயணம் போவதில் எந்தவிதப் பயனும் இல்லை. கர்நாடகத் தேர்தலில் மகத்தான வெற்றி கிடைக்கப்போகிறது. இந்தப் பயணத்தால் மட்டும் வெற்றி கிடைக்கும் என்று சொல்லிவிட முடியாது. இதுவும் ஒரு காரணம்.”

“குஜராத் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்றீர்களா...?”

``காங்கிரஸைப் பொறுத்தவரை யாரும் தன்னிச்சையாகச் சென்று பிரசாரத்தில் கலந்துகொள்ள முடியாது. கட்சி ஒரு பட்டியல் தயாரித்துக் கொடுக்கும்போதுதான் போக முடியும். வெளி மாநிலங்களில் போய் அந்த மொழியே தெரியாமல் பிரசாரம் செய்வதால் பெரிய மாற்றம் இருக்குமா என்று சொல்லிவிட முடியாது. அப்படிப் போனாலும் போக்குவரத்து, தங்க இடம் என அசௌர்யம்தான். குஜராத்தாக இருந்தாலும் சரி, மற்ற நம்மோடு தொடர்பில்லாத மாநிலங்களில் போய் தொந்தரவு கொடுக்கக் கூடாது என்று நினைக்கிறேன்.”

மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே

“புதிய தலைவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?”

“இப்போதுதான் வந்திருக்கிறார். புதிதாக எந்த ஒரு முடிவும் எடுக்கவில்லை. மூத்த அரசியல் தலைவர். அவருக்கு அரசியல் நன்றாகவே தெரியும். போகப் போகத்தான் அவரின் செயல்பாடுகள் எப்படி என்று சொல்ல முடியும்.”

 திமுக கூட்டணி
திமுக கூட்டணி

``தி.மு.க-வுடன் பல விஷயங்களில் காங்கிரஸ் முரண்படுவதால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைப்பதாகப் பேச்சுகள் அடிப்படுகின்றனவே?”

“அப்படியெல்லாம் ஏதும் இல்லை. தி.மு.க-வுடன் கொள்கைரீதியாக நல்ல கூட்டணியில்தான் இருக்கிறோம். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இன்னும் இரண்டு மூன்று கட்சிகள்கூட எங்கள் கூட்டணியில் சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதேவேளையில் கூட்டணிக் கட்சி என்பதற்காக எல்லா விஷயங்களிலும் உடன்பட வேண்டும் என்கிற நிலையும் இல்லை. அப்படியிருந்தால் எதற்கு இரண்டு கட்சிகள்... ஆறு பேர் விடுதலையில் தி.மு.க-வுடன் மாறுபடுகிறோம். ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு விஷயத்தில் எங்கள் கட்சி நிலைப்பாட்டிலிருந்து மாறி தி.மு.க-வின் நிலைப்பாட்டோட்டு உடன்படுகிறேன். ஏழைகளையும் சாதிரீதியாகப் பிரிக்கக் கூடாது. எந்த ஏழையாக இருந்தாலும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பது என் கருத்து.”

மோடி - ராகுல் காந்தி
மோடி - ராகுல் காந்தி

“காங்கிரஸிலும் சில கருத்துகள் ஆர்.எஸ்.எஸ்-ஸுடன் ஒத்துப்போவதாகச் சொல்லப்படுகிறதே?”

“யாராக இருந்தாலும் ஒரு பத்து கருத்து இருந்தால் அதில் இரண்டு மூன்று கருத்துகள் உடன்படும். அதனால் இருவரும் ஒன்று என்று அர்த்தம் கிடையாது. சூரியன் கிழக்கில்தான் உதிக்கிறது என்று ஆர்.எஸ்.எஸ் சொன்னால் நான் இல்லை என்றா சொல்ல முடியும்... காங்கிரஸ் சமுதாயப் பார்வை வேறு, பா.ஜ.க சமுதாயப் பார்வை வேறு என்பதை விமர்சனம் வைப்பவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.”

பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன்

``ப.சிதம்பரத்துக்குப் பிறகு தேசிய ஊடகங்களில் பி.டி.ஆர் அதிக அளவில் பங்கெடுப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“பி.டி.ஆரின் வெள்ளை அறிக்கையை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். உண்மையான நிதி நிலை, எவ்வளவு பணம் இருக்கிறது என்பது நமக்குத் தெரியாமல் இருந்தது. இதன் மூலம் வெளிப்படையாக எல்லோருக்கும் தெரிந்தது. அதேவேளையில் அவர் அரசாங்கத்தின் ஒரு சின்ன அங்கம்தான். அவரின் மொழி, தேசிய ஊடகங்களோடு ஒத்துப்போவதால் தனியாகத் தெரிகிறார். அதனால் அவரைத் தொடர்ந்து பயன்படுத்துகிறார்கள். எனக்குத் தெரிந்து தி.மு.க-வில் ஆழமாகச் சிந்தித்து கருத்து சொல்லக்கூடியவர் ஆ.ராசாதான்.”

அமித் ஷா
அமித் ஷா

“அமித் ஷா தமிழகத்துக்கு வந்திருந்த போது, ‘மருத்துவம், பொறியியல் தமிழில் கொண்டுவர வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறாரே?”

“டெக்னிக்கல் சப்ஜெக்ட்ஸ் அந்த மொழியில் கற்றுக் கொடுப்பது தவறு கிடையாது. ஆனால் அதற்குத் தேவையான புத்தகங்கள், ரிசர்ச் முதலில் உருவாக்க வேண்டும். அதுவும் அவ்வளவு எளிதில் கொண்டு வந்துவிட முடியாது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய ரிசர்ச் வந்து கொண்டேயிருக்கும். இதற்கு ஓர் உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், உலகம் முழுவதும் இருக்கும் ஏர் ட்ராக் கன்ட்ரோலர் ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள். ஏன் அவரவர் தாய் மொழியில் பேச வேண்டியதுதானே... அப்படிப் பேசினால் என்ன விளைவாகும் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்களைப் போய் சம்ஸ்கிருதத்தில், இந்தியில் பேசச் சொல்வாரா அமித் ஷா... எனவே மொழியை, கலசாரத்தை வளர்க்க நூறு வழிகள் இருக்கின்றன. இதெல்லாம் தேவையில்லாத பேச்சுகள்.”

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

``நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு ஆயத்தமாக இருக்கிறார் என்கிறார்களே?”

“யார் வேண்டுமானால் அரசியலுக்கு வரலாம். ஆனால், திரையுலகத்திலிருந்து அந்தத் தவற்றைச் செய்துவிடக் கூடாது. அரசியல் கட்சி நடத்துவது என்பது சாதாரண விஷயம் இல்லை. திரை உலகத்தில் அவர்களுக்கான வரவேற்பு இருக்கலாம். பொது வாழ்வில் வந்தால் என்கிற எண்ணம் மாற்றிக்கொள்ள வேண்டும். அந்த வகையில் ரஜினிகாந்தைப் பாராட்ட வேண்டும். பல பிரஷர் பல காலகட்டங்களில் கொடுத்தார்கள். கடைசியாக அதை உணர்ந்து முற்றுப்புள்ளி வைத்தார். கலைஞரின் சிறப்பு என்னவென்றால் ஐந்து முறை முதலமைச்சராக இருந்தது கிடையாது. 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாதபோது கட்சியைக் கட்டிக்காத்ததுதான். அந்த டிசிபிலின், ஸ்ட்ரக்ச்சர் எல்லாம் என்னைப் பொறுத்தவரை திரை உலகிலிருந்து வருபவர்களுக்கு இருக்குமா என்பது சந்தேகம். எனவே விஜய் அரசியல் முயற்சியில் ஈடுப்பட்டால் அது மிஸ் அட்வெஞ்சராகத்தான் முடியும்.”

இந்தக் கேள்வி பதில்களோடு, 30.11.2022 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில்

“சத்தியமூர்த்தி பவனில் கோஷ்டி மோதல்கள் மீண்டும் தூள் பறக்கின்றனவே?”

“நீங்களும் ரொம்ப காலமாகத் தலைவர் பதவி கேட்டுப் பார்க்கிறீர்கள்... கட்சி மேலிடம் உங்களைக் கண்டுகொள்வதுபோலவே தெரியவில்லையே..?”

“பா.ஜ.க-வின், ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்ச்சியில் பங்கேற்க உங்களுக்கு அழைப்பு வந்ததா?”

“தேசிய அளவில் காங்கிரஸார் பா.ஜ.க-வுடன் மல்லுக்கட்டுகின்றனர். ஆனால், தமிழக பா.ஜ.க தலைவரைக் குறித்து உங்களிடமிருந்து எந்த விமர்சனமும் இல்லையே?”

“அமைப்புரீதியாக பா.ஜ.க-வின் பலம், காங்கிரஸின் பலவீனம் என்ன?"

போன்ற கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார் கார்த்தி சிதம்பரம்.