Published:Updated:

``மாநிலத் தலைவரை நம்பவில்லையென்றால், டெல்லியில் பேசலாமே..." - சொல்கிறார் ஹெச்.ராஜா

ஹெச்.ராஜா ( நரேஷ் குமார்.வெ )

தமிழக பா.ஜ.க-வில் அடிக்கடி கலகத்தை ஏற்படுத்தும் ஆடியோ, வீடியோ சர்ச்சை உள்ளிட்டவை குறித்து பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா-வை சென்னை வடபழனியிலுள்ள அவரின் இல்லத்தில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

``மாநிலத் தலைவரை நம்பவில்லையென்றால், டெல்லியில் பேசலாமே..." - சொல்கிறார் ஹெச்.ராஜா

தமிழக பா.ஜ.க-வில் அடிக்கடி கலகத்தை ஏற்படுத்தும் ஆடியோ, வீடியோ சர்ச்சை உள்ளிட்டவை குறித்து பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா-வை சென்னை வடபழனியிலுள்ள அவரின் இல்லத்தில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

Published:Updated:
ஹெச்.ராஜா ( நரேஷ் குமார்.வெ )

``சட்டமன்றத்தில் ஆளுநர் பேசியதை அவைக்குறிப்பில் ஏற்றாமல் விட்டதால், அரசு பல சட்ட சிக்கலை எதிர்கொள்ளும் என்று கூறியிருக்கிறீர்களே... எப்படி?"

``மாநில அரசு எழுதிக் கொடுத்ததைதான் ஆளுநர் படிக்க வேண்டும் என்பது சட்டமில்லை. மரபாக இருக்கலாம். அதற்காக அவையில் வாசித்ததை குறிப்பில் ஏற்றாமல் இருப்பார்களா... ஆளுநர் உரையை அவையில் பாஸ் செய்யாததற்கு முதல்வர் ராஜினாமா செய்த முன்னுதாரணம் இருக்கிறது. அதற்காக ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நான் சொல்லவில்லை."

``இதுவரை யாரும் செய்யாத காரியம் என்பதால்தான் 'Stalin is more dangerous than Karunanidhi' என்று சொல்லி வருகிறீர்களா?"

``அது ஒன்றும் பெருமைப்படுத்துவதற்கான சொல் அல்ல. ரோட்டில் செல்லும் பெரியவர்மீது சின்னப் பையன்களை விட்டு கல் எறிய வைப்பதுபோல ஸ்டாலின் கூட்டணிக் கட்சியினரை வைத்து ஆளுநருக்கு எதிராகச் செயல்படவைக்கிறார். அந்த மோசமான குணத்தைக் குறிப்பிடத்தான் நான் அப்படிச் சொன்னேன்."

ஆர்.என்.ரவி, ஸ்டாலின்
ஆர்.என்.ரவி, ஸ்டாலின்

`` `தமிழகம்’ - `தமிழ்நாடு’ சர்ச்சையை ஆளுநர் கிளப்பிவிட்டதால்தானே சட்டமன்றத்தில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது?"

``அதற்கு ஆளுநர் விளக்கம் கொடுத்துவிட்டார். `தமிழ்நாடு’ என்ற பெயர் 1966 காமராஜர் ஆட்சிக்காலத்தில் வைக்கப்பட்ட கல்வெட்டில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அடுத்தவர்களின் குழந்தைக்கு தன் இனிஷியல் போடுவதே தி.மு.க-வினருக்கு வேலை."

``கல்வெட்டில் இருக்கலாம். ஆனால், சட்டமன்றத்தில் அதற்கான சட்டம் இயற்றியது தி.மு.க அரசுதானே?"

`` `ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதை யார் சொன்னார்கள் என்று கேட்டால், உடனே அண்ணாதுரை என்கிறார்கள். உண்மையில் அதைச் சொன்னது திருமூலர். அதனால்தான், தி.மு.க-வினரை கருத்து திருடர்கள், புழுகர்கள் என்று கூறுகிறேன். `தமிழ்நாடு’ என்ற பெயரும் அப்படி திருடப்பட்டதுதான். தமிழகம் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தியது தி.மு.கதான். ஒரு மாநிலத்தின் ஆளுநரை அவன் இவன் என ஒருமையில் பேசாலாமா. கொள்ளிக்கட்டையால் தலையைச் சொறிகிறார் ஸ்டாலின். அவராலேயே அவரின் ஆட்சி கவிழும்."

`` `தமிழகம்’ - `தமிழ்நாடு’ என்பதில் வேறுபாடு இல்லையென்றாலும், தமிழகம் என்று குறிப்பிடுவதில் அரசியல் இருக்கிறது என்கிறார்களே?"

``அதற்கு மிகத் தெளிவாக ஆளுநர் விளக்கம் கொடுத்துவிட்டார். தமிழ்நாட்டை தமிழகம் என்று மாற்ற வேண்டும் என்று ஆளுநர் சொல்லவே இல்லையே. ஈ.வெ.ரா தான் 'என்ன செந்தமிழ்நாடு வெங்காய தமிழ்நாடு' என்று விமர்சனம் செய்தார். பெரியார் சொன்னதையெல்லாம் தி.மு.க ஏற்றுக்கொள்ளுமா? `தமிழ்நாடு’ என்ற பெயருக்கு தி.மு.க ஒருபோதும் உரிமை கொண்டாட முடியாது. கூடாது."

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா
நரேஷ் குமார்.வெ

"மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவது மட்டும் சரியா?"

``தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின் 84 மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அதில் 69-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது. ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்ய மத்திய அரசு முயன்றுவருகிறது. அதனால், அதைக் கணக்கில் கொள்ள வேண்டாம். நான் கேட்கிறேன், ரம்மிக்கான அவசரத் தடை சட்டத்துக்கு உடனே ஆளுநர் ஒப்புதல் அளித்தார் தானே. அரசு ஏன் அரசாணை வெளியிடவில்லை. உண்மையில் ரம்மியைத் தடை செய்ய வேண்டும் என்ற நோக்கம் ஸ்டாலினுக்கு இல்லை. ஆளுநரை வைத்து விளையாடப் பார்க்கிறார்."

``திருவள்ளுவருக்கு காவி பூசி, நீங்கள் உரிமை கொண்டாடுவது மட்டும் எந்த வகையில் நியாயம்?"

``விபூதி, பூணூல், காவி உடை அணிந்திருந்த திருவள்ளுவரின் உண்மையான நிறத்தை அவர்கள்தான் மாற்றிவிட்டார்கள். அதை நாங்கள் சரி செய்திருக்கிறோம்."

``ஆனால், திருவள்ளுவர் படத்தை வரைந்தது, வேணுகோபால் சர்மா என்ற ஆத்திகர் தானே?

``எஜமான் எப்படி வரைந்து கொடுக்க வேண்டும் என்று சொல்கிறாரோ, அதைத்தானே அவர் வரைய முடியும். வேணுகோபால் சர்மா அப்படித்தான் வரைந்திருக்கிறார். புத்த மதத்துக்கு மாறிய அம்பேத்கரின் அடையாளமே காவிதான். அதை தீயசக்தி திருமாவளவன் போன்றவர்கள் நீல நிறம் கொடுத்து திரித்துவிட்டார்கள். நாங்கள் எதையும் திரிக்கவில்லை. இந்துக்களின் விரோதிதான் தி.மு.க."

``அப்படியென்றால், அம்பேத்கர் ஏன் புத்த மதத்துக்கு மாறினார் என்பது குறித்து விவாதிக்கத் தயாரா?"

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா
நரேஷ் குமார்.வெ

``அம்பேத்கர் ஏன் புத்த மதத்துக்கு மாறினார் என்ற கருத்துக்குள் நான் செல்ல விரும்பவில்லை. அதற்கான நேரம் இதுவல்ல."

"இந்துக்களின் விரோதி திமுக என்கிறீர்கள். ஆனால், அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதானே, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டிருக்கிறது?"

``இது அப்பட்டமான பொய். குத்தகை முடிந்து திருப்பி ஒப்படைக்கப்பட்ட நிலங்கள் எல்லாம் மீட்டதாக கணக்கு காட்டுகிறார்கள். இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சருக்கே இந்து மதம் மீது நம்பிக்கை இல்லை. அமைச்சரே இந்து மதத்துக்கு எதிராக இருக்கிறாரே. எனக்குத் தெரிந்த ஒருவர் அமைச்சர் சேகர் பாபு வீட்டுக்குச் சென்றிருக்கிறார். அவரின் பூஜை அறையில் இந்து கடவுள்கள் படங்களுக்கு மேலாக அன்னை மேரி, குழந்தை ஏசுவின் சிலையை வைத்து வழிபடுகிறார். என்னைக் கேட்டால், அந்தத் துறைக்கு கே.என்.நேருவை அமைச்சராக நியமிக்கலாம். குறைந்தபட்சம் கோயிலில் திருட மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது."

``அமைச்சர் சேகர் பாபு செய்ததுதானே சமத்துவம். இதில் என்ன தவறு இருக்கிறது?"

``என்ன வேஷம் என்றாலும் போடலாம். கோயில் கோயிலாகச் செல்வது எல்லாம் வெறும் நடிப்பு. ஒரு பொதுக்கூட்டத்தில் உதயநிதி பேசும்போது, கிறிஸ்தவ மத கோஷம் போடுகிறார். சிதம்பரம், திருவண்ணாமலை கோயிலுக்குச் சொந்தமான ஆறு ஏக்கர் நிலத்தை தி.மு.க முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி கல்லூரியின் பெயரில் ஆக்கிரமித்து வைத்திருக்கிறார். அதேபோல, துவரங்குறிச்சியில் இந்து கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை திமுக-வைச் சேர்ந்த மனுஷ்யபுத்திரனின் குடும்பத்தார்கள் ஆக்கிரமைப்பு செய்திருக்கிறார்கள். நான் கேட்கிறேன்... உண்மையிலே இந்து கோயில் மீது அக்கறை இருந்தால் அமைச்சர் சேகர் பாபு மீட்கட்டும் பார்க்கலாம்.”

" மத நம்பிக்கையால் பல ஆண்டுகளாக எதிர்த்துவந்த சேது சமுத்திர திட்டத்துக்கு பா.ஜ.க திடீரென ஆதரவு தெரிவித்து இருக்கிறதன் பின்னணி என்ன?"

" உள்நாட்டுக் கப்பல்கள் இலங்கையைச் சுற்றாமல் சென்னையை அடைவதற்காக சேது சமுத்திர திட்டம் வெள்ளைக்காரர்கள் காலத்திலிருந்தே பேசப்படுகிறது. எங்களுக்கு அது ராமர் பாலம். அது இருந்ததால்தான் சுனாமியிலிருந்து ராமேஸ்வரம் தப்பியது. கப்பல் போக்குவரத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்றவாறு செலவு, நேரத்தைக் குறைக்கும் வகையில் ராமர் பாலத்துக்கு சேதம் இல்லாமல் மீதமுள்ள ஆறு வழித்தடங்களில் திட்டங்களைச் செயல்படுத்தினால் எனக்கு எந்த ஆட்சேபமும் இல்லை."

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா
நரேஷ் குமார்.வெ

" தமிழக பா.ஜ.க என்றாலே நினைவுக்கு வருவது நீங்கள்தான். ஆனால், இப்போது அந்த நிலை மாறிவிட்டதே?"

``என்னை யாரும் மறந்துவிடவில்லை. தமிழ்நாடு பா.ஜ.க-வில் நான்தான் இப்போது மோஸ்ட் சீனியர். மாவட்ட பொறுப்புக்கு மேலே, தொடர்ந்து 33 ஆண்டுகள் பதவியில் இருக்கும் ஒரே நபர் நான் மட்டும்தான். எனது கருத்துக்கு அகில இந்திய தலைவர்கள் யாருமே மறுப்பு தெரிவித்தது இல்லை."

``ஆனால், உங்களுக்குப் பிறகு கட்சிக்கு வந்தவர்களெல்லாம் பெரிய பதவிக்குப் போய்விட்டார்கள். அதை நினைத்தால் கஷ்டமாக இல்லையா?"

" (பலமாக சிரிக்கிறார்) அந்தப் பதவிக்கெல்லாம் சென்றால், இது போன்று சுதந்திரமாகப் பேசமுடியாது. என்னை அரசியல் களத்தைவிட்டு வெளியேற்றிவிடலாம் என்று நினைக்கிறீர்களா?"

``வாட்ச் சர்ச்சை, சர்ச்சை கருத்துகள் பேசி உங்களையே அண்ணாமலை ஓவர் டேக் செய்துவிட்டார் என்று சொல்கிறார்களே?"

``(பலமாக சிரிக்கிறார்) நானெல்லாம் டைட்டன் வாட்ச்தான் கட்டியிருக்கிறேன். தனது தவற்றை மறைக்க அமைச்சர் செந்தில் பாலாஜிதான் அந்த வாட்ச் கதையைக் கிளப்பிவிட்டார். எங்களின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு என் மகள் வயது இருக்கும். தந்தைக்குப் பிறகு மகன் பொறுப்புக்கு வருவது சந்தோசம்தான். அதேநேரத்தில் என்னை யாராலும் ஓவர் டேக் செய்ய முடியாது. ஐ ஹேவ் மை ஓன் பாத்."

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா
நரேஷ் குமார்.வெ

``பா.ஜ.க என்றாலே ஆபாசம்தான் என்ற அளவுக்கு ஆடியோ, வீடியோ வெளியாகி வருகிறதே?"

``திராவிடக் கட்சிகளிலிருந்து வந்தவர்களால்தான் இது நடக்கிறது. தற்போது அமைச்சராக இருக்கும் எங்கள் தொகுதியைச் சேர்ந்தவரின் வீடியோ குறித்து யாருமே பேசவில்லையே. பாலியல் தொழில் செய்யும் பெண் சாலையோரத்தில் விபசாரம் செய்தாலும் அதை யாருமே கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், 10:30 மணி ஆகியும் தன் கணவனைக் காணவில்லை என்று ஜன்னலைத் திறந்து பார்க்கும் பத்தினியை, இந்த ஊர் தப்பாதான் பேசும். நாங்கள் இரண்டாவது ரகம். எனவே, பா.ஜ.க-வினர் மிகக் கவனமாக இருக்க வேண்டும்."

``ஆனால், இதையெல்லாம் தனக்கென்று ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு தமிழக பா.ஜ.க தலைமைதான் செய்கிறது என்பதுதானே குற்றச்சாட்டே?"

``மாநிலத் தலைவரை நம்பவில்லையென்றால், டெல்லியில் பேசலாம். அதற்காக ஒவ்வொரு மாநிலத்துக்கும் பொறுப்பாளர்கள் இருக்கிறார்கள். அதைவிட்டுவிட்டு, கட்சி குறித்து வெளியில் பேசுவது தவறு. தற்போது கட்சியைவிட்டு வெளியேறிய காயத்ரி பேசுவதும் சரியில்லை. அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்."

அண்ணாமலை
அண்ணாமலை

"சீனியர்களின் பேச்சை அண்ணாமலை கேட்பதே இல்லை என்கிறார்களே?"

" அப்படியெல்லாம் இல்லை. சீனியர்கள் என்றால் நான்தான் தற்போது முதலில் இருக்கிறேன். நான் எங்குமே புகார் அளிக்கவில்லையே. உண்மையில் சீனியர்களின் பேச்சையும் அண்ணாமலை கேட்கத்தான் செய்கிறார்."

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா
நரேஷ் குமார்.வெ

" ஒற்றைத் தலைமை அ.தி.மு.க குறித்து..."

" ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அ.தி.மு.க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதில் பா.ஜ.க கண்ணும் கருத்தாக இருக்கிறது. யார் அ.தி.மு.க என்பது குறித்து வழக்கு இருப்பதால், அது குறித்து பேசுவது சரியாக இருக்காது. அதே நேரத்தில், அ.தி.மு.க ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.