Published:Updated:

`ஒரு அங்குலம்கூட பின்வாங்கப் போவதில்லை!' - குடியுரிமை திருத்தச் சட்ட விவகாரத்தில் அமித் ஷா #CAA

அமித் ஷா
அமித் ஷா ( Twitter/@BJP4Rajasthan )

குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை எந்தக் காரணத்துக்காகவும் திரும்பப் பெறப்போவதில்லை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக்கோரி நாட்டின் பல்வேறு இடங்களில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலதரப்பினரும் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், மற்றொரு புறம் இதே சட்டத்துக்கு ஆதரவு அளித்தும் இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் பா.ஜ.க பல இடங்களில் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தி வருகிறது.

குடியுரிமைச் சட்ட பிரசாரம்
குடியுரிமைச் சட்ட பிரசாரம்
Twitter/@BJP4Rajasthan

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு பிரசாரத்தை நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். அப்போது, குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெறப்போவதில்லை என்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸைக் கடுமையாக விமர்சித்தும் பேசியுள்ளார். ``குடியுரிமைச் சட்டத் திருத்தம் சிறுபான்மையினருக்கு எதிரானது இல்லை. அது திரும்பப் பெறப்படும் என்ற கேள்விக்கே இடமில்லை.

மம்தா பானர்ஜி, காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய அனைவரும் சட்ட நடைமுறைகளுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள். அவர்கள் நாட்டு மக்களிடம் பொய்யான தகவல்களைப் பரப்பிக்கொண்டிருக்கின்றனர். உங்களுக்கு (ராகுல் காந்தி) தைரியம் இருந்தால் குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடர்பாக என்னுடன் விவாதம் நடத்துங்கள். இல்லையென்றால் இந்தச் சட்டத்தையும் அதன் அமைப்பையும் நான் இத்தாலி மொழியில் மொழி பெயர்க்கவும் தயாராக உள்ளேன். அப்போதுதான் உங்களால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

அமித் ஷா
அமித் ஷா
Twitter/@BJP4Rajasthan

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக தவறான பிரசாரத்தைக் காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது. இதனால் இளைஞர்களை தவறாக வழிநடத்தி சாலைகளில் இறங்கிப் போராடத் தூண்டியுள்ளனர். அவர்கள் எவ்வளவு பொய்களைப் பரப்பினாலும் நாங்கள் கடுமையாக உழைத்து சிறுபான்மையினர் மற்றும் இளைஞர்களின் நம்பிக்கையைப் பெறுவோம். எதிர்க்கட்சிகள் ஓர் அணியாகத் திரண்டு எவ்வளவு பெரிய போராட்டம் நடத்தினாலும், குடியுரிமைச் சட்டத் திருத்தத்திலிருந்து ஒரு அங்குலம்கூட பின்வாங்கப்போவதில்லை. இந்தச் சட்டம் யாரிடம் இருந்தும் இந்தியக் குடியுரிமையைப் பறிக்காது” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு