Published:Updated:

ஐ.ஜி முருகன் பாலியல் வழக்கு: `தமிழகத்திலேயே விசாரிக்கலாம்' என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வழக்கை விசாரித்த நீதிபதி, ஐ.ஜி முருகன் மீதான பாலியல் புகார் வழக்கை தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்துசெய்வதாக உத்தரவிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றிய ஐ.ஜி முருகன் மீதான பாலியல் அத்துமீறல் புகார் வழக்கை, தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து, தமிழகத்திலேயே விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐ.ஜி முருகன்
ஐ.ஜி முருகன்

கடந்த 2018 ஆகஸ்ட் மாதம், லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குநராக இருந்த ஐ.ஜி முருகன், தனக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அதே துறையில் பணியாற்றிய பெண் எஸ்.பி ஒருவர் புகாரளித்திருந்தார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட டி.ஜி.பி சீமா அகர்வால் தலைமையிலான விசாகா குழு, ஐ.ஜி முருகன் மீதான பாலியல் புகாரை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப் பரிந்துரை செய்தது. இதை எதிர்த்த ஐ.ஜி முருகன், தன் மீதான வழக்கை சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றக் கூடாது எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

அதேசமயம், தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர், ஐ.ஜி முருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இருவரும், ``விசாரணையை தமிழகத்தில்தான் நடத்த வேண்டும்" எனவும் வாதிட்டனர். ஆனால், புகாரளித்த பெண் எஸ்.பி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ``தமிழகத்தில் நடத்துவதைவிட, கேரளா, தெலங்கானா போன்ற வெளிமாநிலங்களில் நடத்தினால் சரியாக இருக்கும்" என வாதிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 2019-ம் ஆண்டு ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கை தெலங்கானாவுக்கு மாற்றியது. மேலும், இந்த வழக்கை தெலங்கானா டி.ஜி.பி மேற்பார்வையிட்டு, ஆறு மாதங்களுக்குள் விசாரணையை முடித்துவைத்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து ஐ.ஜி முருகன் தரப்பிலும், தமிழக அரசு சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஐ.ஜி முருகன் பாலியல் அத்துமீறல் புகார் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தெலங்கானாவுக்கு மாற்றிய உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

“16 வருடங்களாக பாலியல் தொல்லை!” - கண்டுகொள்ளாத கல்வித்துறை.. கதறிய மாணவிகள்!
ஐ.ஜி முருகன்
ஐ.ஜி முருகன்

இதற்கிடையில், `தற்போது (2021) தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதால் வழக்கு விசாரணையை தமிழகத்திலேயே மேற்கொள்ளலாம்' என தமிழக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டனர். அதேபோல், புகாரளித்த பெண் எஸ்.பி-யும் தற்போது தமிழகத்தில் வழக்கு நடந்தால் தனக்கு நீதி கிடைக்கும் என நம்புவதாக உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரமும் தாக்கல் செய்திருந்தார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

எந்தத் தரப்பிலும் எதிர்ப்பில்லாத சூழ்நிலையில், இன்றைய தினம் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஐ.ஜி முருகன் மீதான பாலியல் புகார் வழக்கை தெலங்கானாவுக்கு மாற்றிய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்வதாக உத்தரவிட்டார். மேலும், தமிழக அரசும் மனுதாரரும் கோரிய விருப்பப்படி தமிழகத்திலேயே விசாரணை மேற்கொள்வதற்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிடுவதாக அறிவித்திருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு