Published:Updated:

`அரசாணை பொருந்தாது!' - தமிழக அரசுக்கு நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டிய பொன்.மாணிக்கவேல்

``சிறப்பு விசாரணைக் குழுவும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் தான் உருவாக்கப்பட்டது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது” - பொன். மாணிக்கவேல்.

பொன். மாணிக்கவேல்
பொன். மாணிக்கவேல்

பொன். மாணிக்கவேல் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் 1-ம் தேதி நியமிக்கப்பட்டார். ஒருவருடத்துக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன். மாணிக்கவேலின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

தமிழக அரசு
தமிழக அரசு

கடந்த சில நாள்களாகவே பொன். மாணிக்கவேலின் பதவிக்காலத்தை தமிழக அரசு நீட்டிக்கப்போவதில்லை என்ற தகவல்கள் வெளியான நிலையில் இன்று, ``சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்மாணிக்கவேலின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதால், உடனடியாக விசாரணை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்" என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டது.

`சிலையை மீட்டது மோடி, பொன்.மாணிக்கவேல் இல்லை!’ - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

இந்த நிலையில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல், தான் ஆவணங்களைச் சமர்ப்பிக்க முடியாது என தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் கடிதத்தில் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு வரும் டிசம்பர் மாதம் 2-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. உயர்நீதிமன்றம் சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்தது. அதேபோன்று சிறப்பு விசாரணைக் குழுவும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில்தான் உருவாக்கப்பட்டது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.

பொன். மாணிக்கவேல்
பொன். மாணிக்கவேல்

அதனால், உச்ச நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தின் உத்தரவு அல்லது வழிகாட்டுதல் இல்லாமல் விசாரணை ஆவணங்களை சமர்ப்பிக்க சட்டப்படி இயலாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வரும் 2-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. ஆவணங்களைச் சமர்ப்பிக்க கோரிய தமிழக அரசின் உத்தரவை சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் மறுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.