Published:Updated:

``பாஜக-வினரைப் புறக்கணித்து கட்டமைப்பை வலுப்படுத்துங்கள்" - தேச ஒற்றுமை மாநாட்டில் நாஞ்சில் சம்பத்

நாஞ்சில் சம்பத்

``எதைச் சொன்னால் நமக்கு கோபம் வருமோ அதைக்கூறி நம்மைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள். எனவே, அவர்களைப் (பாஜக-வினரை) புறக்கணியுங்கள்" - நாஞ்சில் சம்பத்.

``பாஜக-வினரைப் புறக்கணித்து கட்டமைப்பை வலுப்படுத்துங்கள்" - தேச ஒற்றுமை மாநாட்டில் நாஞ்சில் சம்பத்

``எதைச் சொன்னால் நமக்கு கோபம் வருமோ அதைக்கூறி நம்மைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள். எனவே, அவர்களைப் (பாஜக-வினரை) புறக்கணியுங்கள்" - நாஞ்சில் சம்பத்.

Published:Updated:
நாஞ்சில் சம்பத்

ஈரோட்டில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் தேச ஒற்றுமை மாநாடு நடைபெற்றது. உலமா சபையின் மாநிலத் தலைவர் மௌலானா காஜா பாகவி தலைமைவகித்தார். மக்களவை உறுப்பினர்கள் கணேசமூர்த்தி, நவாஸ் கனி, அந்தியூர் செல்வராஜ், பாதிரியார் ஜெகத்கஸ்பர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த், ஈரோடு தெற்கு மாவட்டத் தலைவர் மக்கள் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் அமைச்சர் சு.முத்துசாமி, ``இந்திய நாட்டின் மீதான பற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் பிரமாண்டமான மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நம்மிடம் எவ்வளவோ மாறுபட்ட கருத்துகள் இருந்தபோதிலும் நாம் அனைவரும் கைகோத்து நிற்கும் இந்த உணர்வுதான் நமக்கு முக்கியம். தேச ஒற்றுமையை முன்னிறுத்தும் இதுபோன்ற மாநாடுகளே நாட்டுக்கு முக்கியத் தேவையாக இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தனிப்பாதை உண்டு. ஆனால், தேசம் என்று வரும்போது ஒற்றுமையே முக்கியம் என்ற உணர்வை இந்த மாநாடு ஏற்படுத்தியிருக்கிறது” என்றார்.

மாநாட்டின் ஒரு பகுதி
மாநாட்டின் ஒரு பகுதி

காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், ``கடந்த நான்கு மாதங்களுக்கு முன் தேச ஒற்றுமையை வலியுறுத்தி கன்னியாகுமரியிலிருந்து ராகுல் காந்தியால் தொடங்கப்பட்ட பாதயாத்திரைப் பயணம் வரும் 30-ம் தேதியுடன் காஷ்மீரில் நிறைவுபெறுகிறது. சுதந்திர இயக்கத்தைப்போல தேச ஒற்றுமை யாத்திரையில் ஒவ்வொரு குடிமகனையும் ஒருங்கிணைத்ததால்தான் இந்தப் பாதயாத்திரை பெரும் வெற்றி பெற்றது. ராகுல், இந்திய ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கியபோது, இந்தியா உடைந்துவிட்டதா என்று கேள்வி எழுப்பியவர்கள் அதிகம். அவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆயிரக்கணக்கான மொழிகளையும், கலாசாரங்களையும் கொண்டதுதான் இந்தியா. ஆனாலும் வேற்றுமையில் ஒற்றுமை என்பது இந்தியாவில் மட்டுமே சாத்தியம். இங்கு மதரீதியாகவும், பொருளாதாரரீதியிலும் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்த நினைக்கிறார்கள். இவர்களைப் புறக்கணிக்க வேண்டிய கட்டாயத்துக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம்.

நம்முடைய முன்னோர்கள் உருவாக்கிய ஜனநாயகத்தைதான் தற்போதைய ஆட்சியாளர்கள் பலவீனப்படுத்திவருகிறார்கள். இது ஒரு மதம் மட்டுமே சார்ந்த நாடு அல்ல, பல மதங்களைச் சேர்ந்தவர்களாலும் ஆளப்படும் நாடுதான் இது என்பதை அவர்களுக்குப் புரியவைப்போம்” என்றார்.

மோகன் குமாரமங்கலம்
மோகன் குமாரமங்கலம்

தொடர்ந்து நாஞ்சில் சம்பத், ``இருள் சூழ்ந்திருக்கிற இந்த தேசத்தில் என்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியவில்லை. சமீபத்தில் ஈரோட்டில் நடைபெற்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் விவாதத்தில் கலந்துகொண்டபோது என்னை உயிரோடு திரும்ப முடியாது என்று மிரட்டினார்கள். அன்று இருந்த அச்சுறுத்தல், எனக்கு இன்றும் இருந்தது. அந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை.

இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றை சிலர் திரிபுவாதம் பேசி திசை திருப்பப் பார்க்கிறார்கள். தேசப்பிதா காந்தியடிகள் சுதந்திரப் போராட்டத்துக்காக சிறையில் இருந்தபோது தன்னுடைய தாய்மொழியான குஜராத்தியில் தன் சுயசரிதையை எழுதினார். ஜவஹர்லால் நேரு, `தி டிஸ்கவரி ஆஃப் இந்தியா’ என்ற நூலை சிறையில் இருந்தபோதுதான் எழுதி முடித்தார். ஆச்சார்ய கிருபாலினி இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக சிறைக்குச் சென்றிருந்தபோதுதான் வேத உபநிஷத்துக்கான விளக்க உரையை எழுதினார். இப்படி தேசத்துக்காக சிறை சென்றவர்கள் நிறைந்தது நம் நாடு.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு நடுக்கத்தையும், பொருளாதார நலிவையும் ஏற்படுத்தி சுதேசி கப்பலை பிரிட்டிஷாருக்கு எதிராக இயக்கி அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் வ.உ.சிதம்பரனார்.

வ.உ.சி சுதேசி கப்பலை வாங்க நிதியை வாரி அளித்தவர் ஒரு இஸ்லாமியர். தேசப்பிதாவிடம் காதியை முதன்முதலாக கொடுத்தவர் பீவியம்மாள் என்ற இஸ்லாமியப் பெண். இளையான்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி இந்திய சுதந்திரப் போராட்டத்துக்குகாக ரூ.30 லட்சத்தைத் திரட்டி காந்தியடிகளிடம் கொடுத்தவரும் பீவியம்மாள்தான். அவர் 1924-ல் உயிரிழந்துவிட்டார்.

இப்படி நாட்டின் சுதந்திரப் போராட்டத்துக்காக உடல்ரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் பல்வேறு பங்களிப்பை அளித்தவர்கள் ஏராளம். ஆனால், இதுபோன்று இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதாக எந்த வரலாறும் இல்லாதவர்களும், தேசத்தை காட்டிக் கொடுத்தவர்களும், அந்தமான் சிறையில் அடைபட்டுக் கிடந்தபோது மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து பிரிட்டிஷாரின் காலில் விழுந்து தேசத்தின் தன்மானத்தையும், சுயமரியாதையையும் அடகு வைத்தவர்கள்தான் இன்று தேசபக்தியை பற்றிப் பேசுகிறார்கள். இன்று அவர்கள் இந்த நாட்டை கோட்சேயின் நாடாக மாற்ற முயற்சி செய்கிறார்கள்.
நாம் அவர்களைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை.

மாநாட்டின் ஒரு பகுதி
மாநாட்டின் ஒரு பகுதி

தற்போது இமாசலப் பிரதேசத்திலும், ஜார்க்கண்ட், திரிபுராவிலும் அவர்கள் தோல்வையைத் தழுவிவிட்டார்கள். ஆர்.எஸ்.எஸ்-ன் தலைமையிடமான நாக்பூரைச் சுற்றி 13 இடங்களில் அவர்கள் தோல்வியைத் தழுவி விட்டார்கள். எதைச் சொன்னால் நமக்கு கோபம் வருவமோ அதைக்கூறி நம்மைத் திசை திருப்பப் பார்க்கிறார்கள். எனவே, அவர்களைப் (பாஜக-வினரை) புறக்கணியுங்கள். இதைத்தான் தற்போது நம்முடைய முதல்வரும் செய்துவருகிறார். அவர்களைக் கடுமையாகப் புறக்கணிக்க நம்முடைய கட்டமைப்பை வலுவாக்குங்கள். அவர்கள் கீழே இறங்கும் வேளை வந்துவிட்டது. எனவே, நாடு முழுவதும் ஜமாத் அமைப்புகளின் மூலமாக இதுபோன்ற மாநாட்டை நடத்தி அவர்களைப் புறக்கணியுங்கள்” என்றார்.