Published:Updated:

“தி.மு.க-வை விட... பா.ஜ.க நட்புதான் நெடியது! - பாசம் காட்டும் பாரிவேந்தர்

பாரிவேந்தர்
பிரீமியம் ஸ்டோரி
பாரிவேந்தர்

உதயசூரியன் சின்னத்தில் எம்.பி-யாக இருப்பதால், இன்னும் இரண்டு ஆண்டுகள் பெயரளவுக்கு தி.மு.க-வுடன் இருந்தாக வேண்டியது அவசியம்

“தி.மு.க-வை விட... பா.ஜ.க நட்புதான் நெடியது! - பாசம் காட்டும் பாரிவேந்தர்

உதயசூரியன் சின்னத்தில் எம்.பி-யாக இருப்பதால், இன்னும் இரண்டு ஆண்டுகள் பெயரளவுக்கு தி.மு.க-வுடன் இருந்தாக வேண்டியது அவசியம்

Published:Updated:
பாரிவேந்தர்
பிரீமியம் ஸ்டோரி
பாரிவேந்தர்

இசையமைப்பாளர் இளையராஜா, பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு சர்ச்சையில் சிக்கிய சூடு குறைவதற்குள், மோடியை காந்தியுடன் ஒப்பிட்டுப் பேசி வாலன்டியராக சர்ச்சை வண்டியில் ஏறியவர் பாரிவேந்தர். ஐ.ஜே.கே கட்சித் தலைவரும், தி.மு.க சின்னத்தில் போட்டியிட்டு எம்.பி ஆனவருமான பாரிவேந்தர் ஜூ.வி-க்கு அளித்த பேட்டி இது.

“திடீரென மோடியை காந்தியுடன் ஒப்பிட்டுப் பேசவேண்டிய அவசியம் என்ன?”

“மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்திலிருந்தே அவருடன் நெருக்கமாக இருக்கிறேன். இத்தனை ஆண்டுகள் பழக்கத்தில் சொல்கிறேன்... காந்தியைப்போல உண்மையான தேசப்பற்று கொண்டவர் மோடி. நாடு, நாட்டு மக்கள் முன்னேற்றம், ஒற்றுமை... இவைதான் மோடிக்கு முக்கியம். நான் மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்பவன். அப்படித்தான் மோடியை காந்தியுடன் ஒப்பிட்டேன்!”

“ஆனால், தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை வீசுவதாகச் சொல்கிறார்களே?”

“மோடியைப் பற்றி தமிழகத்தில்தான் இப்படிப் பேசுகிறார்கள். வடநாட்டில் 303 எம்.பி-க்களை வெற்றிபெற வைத்திருப்பவர்களெல்லாம் மனிதர்கள் இல்லையா? மோடிக்கு எதிராகப் பேசினால் பிரபலமாகலாம் என்பதால், தமிழகத்தில் பலர் இப்படிப் பேசித் திரிகிறார்கள்.”

“பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மோடி அரசும் ஒரு காரணம்தானே?”

“காலத்துக்கு ஏற்றாற்போல விலைவாசி உயரத்தான் செய்யும். மக்களின் வாங்கும் சக்தியும் கூடிக்கொண்டேதான் போகிறது. ஏதோ பா.ஜ.க ஆட்சியில் இருப்பதால்தான் விலைவாசி உயர்வது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். யார் ஆட்சியில் இருந்தாலும் இதுதான் நடக்கும்.”

“தி.மு.க சின்னத்தில் போட்டியிட்டு எம்.பி-யாகிவிட்டு, பா.ஜ.க-வைப் பாராட்டுவதுதான் கூட்டணி தர்மமா?”

“முதலில் ஒன்றைச் சொல்லிவிடுகிறேன்... 2014 நாடாளுமன்றத் தேர்தலைப்போல 2019 தேர்தலிலும் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைக்கவே விரும்பினோம். ஆனால், அவர்களுக்கே ஐந்து தொகுதிகள்தான் கிடைத்தன. அதில் ஒன்றைக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தோம்; கொடுக்கவில்லை. அதனால், தி.மு.க கூட்டணியில் இணையலாம் என்று கட்சியினர் கோரிக்கை வைத்ததால் கூட்டணி அமைத்தோம். தி.மு.க தோழமைக் கட்சி என்றாலும், எங்களுக்கு என தனிக் கொள்கைகள் இருக்கின்றன. தி.மு.க சின்னத்தில் வென்றிருந்தாலும், எங்கள் கொள்கையில் விட்டுக்கொடுக்க முடியாது. தி.மு.க-வின் நட்பைவிட, பா.ஜ.க-வுடனான எங்களது நட்புதான் நெடியது!”

“அப்படியெனில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் பா.ஜ.க-வுடன் செல்வீர்களா?”

“உதயசூரியன் சின்னத்தில் எம்.பி-யாக இருப்பதால், இன்னும் இரண்டு ஆண்டுகள் பெயரளவுக்கு தி.மு.க-வுடன் இருந்தாக வேண்டியது அவசியம். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பா.ஜ.க-வுடன் கூட்டணி செல்வதற்கான வாய்ப்புகளே அதிகம். எனக்கு தேசியம்தான் முக்கியம்!’’

“தி.மு.க-வின் ஓராண்டு ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“தனிப்பட்ட முறையில் முதல்வர் ஸ்டாலினைப் பிடிக்கும். ஜென்டில்மேன், நல்ல உழைப்பாளி. தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களிலும் ஸ்டாலினின் புகழ் பரவிவருகிறது. அதேசமயம், நலத்திட்டங்கள் என்கிற பெயரில் இலவசங்களைக் கொடுத்து, மக்களைச் சோம்பேறிகளாக்கு கிறார்கள். மக்கள் சுயமாகச் சம்பாதித்து, கண்ணியத்துடன் வாழும் நிலையை ஏற்படுத்திக்கொடுக்கும் அரசே சிறந்த அரசு. எனினும், ஒரு முதல்வராகச் சிறப்பாகச் செயல்பட முயல்கிறார் ஸ்டாலின்.”

“தி.மு.க-வை விட... பா.ஜ.க நட்புதான் நெடியது! - பாசம் காட்டும் பாரிவேந்தர்

“உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்போவதாக தகவல்கள் வருகின்றன... உங்களுடைய வாரிசும் அரசியலில் இருப்பதால், இந்த விஷயத்தில் உங்கள் கருத்து என்ன?’’

“உதயநிதி விஷயத்தில் அவசரம் தேவையில்லை. ஆட்சி நன்றாகச் சென்றுகொண்டிருக்கும்போது ஸ்டாலின் மீது அதிருப்தி ஏற்படலாம். இது கட்சிக்கும் குடும்பத்துக்கும் நல்லதல்ல. பொதுவாக வாரிசு அரசியல் என்பது கட்சியை வளர்க்கவும், கட்சியை அடுத்த தலைமுறையினரிடம் எடுத்துச் செல்லவும் மட்டுமே பயன்பட வேண்டும். ஒருபோதும் அரசுப் பதவியில் வாரிசைத் திணிக்கக் கூடாது.”

“ஆளுநர் - தி.மு.க மோதல் பற்றி...”

“முன்பெல்லாம் ஆளுநர் பதவி என்பது ரப்பர் ஸ்டாம்ப்போல பயன்பட்டது. காலத்துக்கு ஏற்ப அதிலும் மாற்றங்கள் வந்துவிட்டன. அரசியல்வாதிகள் ஆளுநராக அமர்ந்தால், சொல்லும் இடங்களில் கையெழுத்து போடும் அலங்காரப் பதவியாக அதை அனுபவித்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். தற்போதைய ஆளுநர் ரவி அதிகாரியாக இருந்து வந்ததால், அதே மிடுக்கோடு நடந்துகொள்கிறார். ஒரு ஃபைல் அவரிடம் செல்லும்போது, அதை ஆராய்கிறார். அதனால் தாமதம் ஏற்படுகிறது. நீட் சட்டத்துக்கு எதிரான சட்டமன்றத் தீர்மானத்தை, கையெழுத்திட்டுக் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது ஒன்றும் சிரமம் அல்ல. குடியரசுத் தலைவராலும் ஒன்றும் செய்ய முடியாது என்கிறபோது அதை ஏன் அவருக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் ஆளுநரின் எண்ணம்.”

“நீங்களும் மருத்துவக் கல்லூரி நடத்துகிறீர்கள், நீட் பற்றி உங்கள் பார்வை என்ன?”

“நீட் தேர்வு வந்த பிறகுதான் மிகப்பெரிய பிரச்னையிலிருந்து வெளியே வந்தேன். வசதியானவர்கள் பணத்தைக் கொட்டிக்கொடுத்து படிப்பை வியாபாரமாக்கிவந்தனர். இடைத்தரகர்கள் கொள்ளையடித்தனர். நீட் வந்த பிறகு கட்டணம் உட்பட எல்லாமே வெளிப்படையாக நடக்கின்றன. கறுப்புப் பணம் தடுக்கப்பட்டுள்ளது.”

“ஆனால், நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கருத்து உள்ளதே?”

“தவறான தகவல். என்னிடம் ஆதாரங்கள் உள்ளன... 2021-22 கல்வியாண்டில் எங்கள் கல்லூரியில் தமிழகத்தைச் சேர்ந்த 151 மாணவர்களும், பிற மாநிலங்களைச் சேர்ந்த 99 மாணவர்களும் இணைந்துள்ளனர். அவர்களில் தமிழக மாணவர்களின் நீட் மதிப்பெண் 720-க்கு அதிகபட்சமாக 424-ஆகவும், மற்ற மாநிலத்தவர்களின் நீட் மதிப்பெண் 720-க்கு 374-ஆகவும் உள்ளது. அதாவது, வட மாநிலத்தவர்களைவிட தமிழக மாணவர்கள்தான் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில் கிராமம், நகரம் என்ற வேறுபாடு இல்லை. அரசியல்வாதிகள்தான் இல்லாத மாயையைக் காட்டி மாணவர்களை அச்சுறுத்துகிறார்கள்.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism