Published:Updated:

`தமிழகத்தில் மொழி உணர்வு அதிகம்' என்றேன் மோடியிடம்! -சம்ஸ்கிருத முன்னெடுப்புக்கு இல.கணேசன் பதில்

நாடாளுமன்றக் கூட்டத்துக்கு முன்னதாக பிரதமர் இல்லத்தில் அதிகாரபூர்வமற்ற கூட்டம் நடக்கும். அப்போது பிரதமருடன் உறுப்பினர்கள் தங்களின் கருத்துகளை எடுத்துரைப்பார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

மத்திய அரசு சம்ஸ்கிருத மொழிக்கு அளிக்கும் முக்கியத்தை மற்ற பிராந்திய மொழிகளுக்குத் தருவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.

நாடாளுமன்றத்தில் சம்ஸ்கிருத வளர்ச்சி குறித்து பா.ஜ.க உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பிரஹ்லாத் சிங் படேல், `சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக டெல்லியில் தேசிய சம்ஸ்கிருத மையம் நிறுவப்பட்டுள்ளதாகவும், இதற்கு, 2019-20-ல் ரூ. 231.15 கோடி, 2018-19-ல் ரூ. 214.38 கோடி, 2017-18-ல் ரூ.198.31 கோடி எனக் கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் ரூ.643.84 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்' தெரிவித்தார்.

M. K. Stalin
M. K. Stalin

ஆனால், தமிழ் மொழிக்காக ஒதுக்கப்பட்ட நிதி என்பது இதனுடன் எந்த வகையிலும் ஒப்பிட முடியாதபடியாக உள்ளது. இது தொடர்பாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ``சம்ஸ்கிருதத்தை வளர்ப்பதுதான் அவர்களது நோக்கமும் இலக்குமாக இருக்குமானால் அதனை நாம் குறைசொல்லவில்லை. இந்தியாவில் சம்ஸ்கிருதம் மட்டும்தான் இருக்கிறதா? பல கோடி மக்கள் பேசும் மொழிகள், அரசியல் சட்டம் அங்கீகரித்த மொழிகள் என எத்தனையோ மொழிகள் இந்தியாவில் இருக்க, புழக்கத்தில் சுருங்கிவிட்ட சம்ஸ்கிருதத்துக்கு மட்டும் சிம்மாசனம் என்றால், வேறு மொழி பேசுபவர்களை இவர்கள் இந்தியர்களாக ஏன் மனிதர்களாகவே மதிக்கத் தயாராக இல்லையா?

தமிழ் மொழி, இந்த மத்திய அரசால் எப்படி நடத்தப்படுகிறது? அதனை வளர்க்க எவ்வளவு தொகை ஒதுக்கி இருக்கிறார்கள்? அந்தக் கணக்கைப் பார்த்தால், தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் மலையளவு வேறுபாடு இருப்பதைக் காணலாம். செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்துக்கு 2017-18-ல் ரூ.10.59 கோடி, 2018-19-ல் ரூ.4.65 கோடி, 2019-20 -ல் ரூ.7.7 கோடி எனக் கடந்த 3 ஆண்டுகளில் வெறும் ரூ. 22.94 மட்டுமே" எனக் குற்றம்சாட்டியிருந்தார்.

Narendra Modi
Narendra Modi
AP

சம்ஸ்கிருதத்துக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குறித்துப் பேசிய பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசனும், `` தமிழ் ஒரு மாநிலத்தில் மட்டும் பேசும் மொழி. ஆனால் சம்ஸ்கிருதம் நாடுமுழுவதும் பேசும் மொழி' என விளக்கம் தெரிவித்தது பெரும் விவாதமானது.

இல.கணேசனிடம் பேசினோம். ``தமிழ் தொன்மையான மொழி என்பதில் சந்தேகம் இல்லை. அது பேச்சு மொழியாகவும் இருக்கிறது. சம்ஸ்கிருதம் என்பது பேச்சு மொழி கிடையாது. ஆனால் அதுவும் தொன்மையான மொழி, கலாசார மொழி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொன்மையான மொழிகள் தொடர்பான ஆய்வுகள் நடைபெறுகின்றன. அதனால்தான் அதற்கான நிதி ஒதுக்கீடு நடக்கிறது. மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வரும் முன்னரே சம்ஸ்கிருதம் குறித்து இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழை நானோ மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசோ புறக்கணித்தது கிடையாது. பிரதமர் பேசும் உலக அரங்கில் தமிழை பலமுறை குறிப்பிட்டுள்ளார். ஒன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன். நாடாளுமன்றக் கூட்டத்துக்கு முன்னதாக பிரதமர் இல்லத்தில் அதிகாரபூர்வமற்ற கூட்டம் நடக்கும். அப்போது பிரதமருடன் உறுப்பினர்கள் தங்களின் கருத்துகளை எடுத்துரைப்பார்கள். நான் எம்.பி-யாக தேர்வான பின்னர் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்து.

இல.கணேசன்
இல.கணேசன்

அப்போது, நான் பிரதமரிடம், ``நாம் ஒரே நாடு ஒரே திட்டங்களை அமல்படுத்துகிறோம். ஆனால், ஒவ்வொரு மாநிலத்துக்கும் சில தனித்தன்மை இருக்கிறது. சில விஷயங்கள் அதில் உணர்வு சார்ந்தவை. உதாரணமாக தமிழகத்தில் மொழி உணர்வு அதிகம். வணக்கம் என்னும் ஒரு வார்த்தையை நீங்கள் சொன்னால் 5 நிமிடங்கள் கைதட்டுவார்கள். ஆனால் அதே மொழியைத் தவறாக எதாவது சொன்னாலோ, மற்ற மொழிகளை முன்னிலைப்படுத்தினாலோ முதல் ஆளாகப் போராட்டக் களத்துக்கு வருவார்கள்.

நிர்மலாவின் `வெங்காய' கருத்து, பிரக்யா பேச்சு, குதிரைபேரம்... - இல.கணேசன் `லாஜிக்' பேட்டி

இதுபோன்று ஒவ்வொரு மாநிலத்துக்கும் சில தனித்தன்மை இருக்கும். அதை நாம் ஏற்பதில்தான் நமது ஒற்றுமை இருக்கிறது' என்றேன்.

எனது பேச்சைக் கேட்ட பிரதமர், `தமிழ் தொன்மையான, அழகான மொழி' என்றார். `ஒரு ஊரில் இருக்கும் கலாசாரங்களை மற்ற ஊரில் இருக்கும் மக்களும் தெரிந்துகொள்ள சில திட்டங்களை அமல்படுத்த வேண்டும்' என்றார். அவர் அதன் பின்னர் கலந்துகொண்ட நிதி ஆயோக் உள்ளிட்ட பல கூட்டங்களில் இதைப் பேசியுள்ளார். தமிழகத்தில் தமிழ் குறித்துப் பிரதமர் பேசினால், அரசியல்வாதி பேசுகிறார் எனலாம். ஆனால் அதற்கு சம்பந்தமே இல்லாத இடங்களிலும் அவர் பேசியுள்ளார். இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், பிராந்திய மொழிகள் அனைத்தையும் பா.ஜ.க எதிர்க்கவில்லை என்பதை உறுதியாகச் சொல்ல முடியும்" என்றார்.

தமிழ்
தமிழ்

தொடர்ந்து அவரிடம் இன்று சிஏஏ -க்கு எதிராக தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டம் தொடர்பாகக் கேள்வி எழுப்பினோம். ``பெரும்பாலும் அமைதியான முறையில் போராட்டம் நடைபெறுவதாகத் தகவல்கள் வருகின்றன. மகிழ்ச்சி. எனினும் நீதிமன்றம் தடை விதித்தும் பேரணி நடத்துவது சரிகிடையாது" என்றவரிடம்,

`தமிழக பா.ஜ.க தலைவர் பதவி இன்னும் காலியாக இருக்கிறது. ரஜினியின் அரசியல் நிலைப்பாட்டுக்காக டெல்லி பா.ஜ.க தலைமை காத்திருப்பதாகத் தகவல் வருகிறதே?' என்ற கேள்விக்கு சிரித்தபடியே பதிலளித்த இல.கணேசன், ``ரஜினிக்காக நாங்கள் கட்டாயம் காத்திருக்கவில்லை. பா.ஜ.க-வைச் சேர்ந்த ஒருவர்தான் மாநிலத் தலைவாராக நியமிக்கப்படுவார் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்லமுடியும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு