Published:Updated:

`வாடகைக் கட்டடமா.. அந்த சவால்?!'- பஞ்சமி நில விவகாரத்தில் ராமதாஸுக்கு டி.கே.எஸ்.இளங்கோவன் எச்சரிக்கை

முரசொலி அலுவலகம்
முரசொலி அலுவலகம்

`தி.மு.க-வை விமர்சித்தால் பா.ஜ.க மகிழ்ச்சியடையும். தன் மகன் அன்புமணி ராமதாஸ் மீதுள்ள மருத்துவக்கல்லூரி ஊழல் வழக்கு விசாரணை தடைபடும்; மத்திய அமைச்சரவையில் தன் மகன் இடம்பெற வாய்ப்பு ஏற்படும் என்ற ஆசை காரணமோ என்ற சந்தேகமே எழுந்திருக்கிறது' - இளங்கோவன்

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருப்பதாகக் கூறிய பொய்க் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாமல் தோல்வியடைந்த பா.ம.க தலைவர் ராமதாஸ், பிரச்னையைத் திசை திருப்புவதை விடுத்து, புகார்களுக்கு ஆதாரங்களை அளிக்க வேண்டும் அல்லது பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும்” என தி.மு.க செய்தித் தொடர்புச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டிகே.எஸ் இளங்கோவன்
டிகே.எஸ் இளங்கோவன்

அசுரன் படத்தை தி.மு.க தலைவர் ஸ்டாலின் பார்த்துவிட்டு படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டி ஒரு ட்வீட் போட்டார். அந்த ட்வீட்டுக்கு பா.ம.க தலைவர் ராமதாஸ் பதில் ட்வீட் போட முரசொலி அலுவலகம் அமைந்திருக்கும் இடம் குறித்த சர்ச்சை பெரிய அளவில் வெடித்தது. ஆதாரத்தைக் காட்டச் சொல்லி தி.மு.க-வுக்கு எதிரணி கட்சிகள் அழுத்தம் கொடுக்க, முடிந்தால் முரசொலி அலுவலக இடம் பஞ்சமி இடம் என்பதை நிரூபியுங்கள் என தி.மு.க பா.ம.க-வுக்கு சவால் விடுத்தது.

இந்த நிலையில், ராமதாஸ் இன்று ட்விட்டரில், ``முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டடத்தில் இயங்குகிறதாமே.... அப்படியானால், அந்த பட்டா வெளியிட்டது, அரசியலில் இருந்து விலகத் தயாரா என்று சவால் விட்டதெல்லாம் வழக்கம்போல் வெற்று தானா? அரசியல் உலகில் எவ்வளவோ பல்டிகள் அடிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவை அனைத்திலும் ஆகச்சிறந்த பல்டி... முரசொலி நிலம் மீதான பழியைத் துடைப்போம் என்று வீர வசனம் பேசிவிட்டு, இப்போது நாங்களே வாடகைக்குதான் இருக்கிறோம் என்று சரண் அடைந்ததுதான். முரசொலி அலுவலகம் வாடகைக் கட்டடத்தில்தான் இயங்குகிறது என்பதாவது உண்மையா? மூலப் பத்திரத்தைத்தான் வெளியிடவில்லை. குறைந்தபட்சம் வாடகை ஒப்பந்தத்தையாவது முரசொலி நிர்வாகம் வெளியிடுமா? கூடவே சவால் விட்டவர் அரசியலில் இருந்து விலகுவாரா? அகில இந்தியாவில் மட்டுமல்ல.... ஈரேழு லோகத்திலும் வாடகைக் கட்டடத்தில் இருந்து கொண்டு உரிமையாளர் சார்பில் அவதூறு வழக்கு தொடர்ந்த ஒரே கம்பெனி.... நம்ம முரசொலி கம்பெனிதான். வெறும் கையால் முழம் போடுவதில் இவர்களை வெல்ல ஆளே இல்லை போலிருக்கிறது" எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், தி.மு.க செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன், ``ராமதாஸ் இப்படிக் கூறியிருப்பது பந்தயம் கட்டி படுதோல்வி அடைந்தவரின் பரிதாபத்தை பிரதிபலிக்கிறது. பாட்டாளிகளுக்காக இயக்கம் என்று துவங்கி, வன்னியர் சங்க அறக்கட்டளையைத் தன் பெயருக்கே மாற்றிக் கொண்டதைப் போன்றது முரசொலி அலுவலக விவகாரம் என்று அவர் பகல் கனவு கண்டுவிட்டார் என்று கருதுகிறேன். அதனால்தான் பஞ்சமி நிலம் என்று வீண் பழி சுமத்தி முரசொலியின் மூலப்பத்திரம் கேட்டவருக்கு, முரசொலி பஞ்சமி நிலம் இல்லை என்பதற்கு ஆதாரமாக அதற்குரிய பட்டாவை வெளியிட்டோம்; முணுமுணுப்பே இல்லாமல் சில வாரங்கள் அமைதி காத்தார். இப்போது பழையபடி வாடகைக் கட்டடம் என்று ஒரு புதிய பல்லவியைத் தொடங்கி தி.மு.க-வை வம்புக்கு இழுக்கிறார்.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என்ற குற்றச்சாட்டை ராமதாஸால் நிரூபிக்க முடியவில்லை. அவரைத் தூண்டிவிட்ட பா.ஜ.க-வாலும் நிரூபிக்க முடியவில்லை. தேசிய பட்டியலின பழங்குடியின ஆணையம் சார்பில் நடைபெற்ற விசாரணைகளிலும் புகாரளித்தவர்கள் புறமுதுகிட்டு காலஅவகாசம் கேட்டு கலைந்து சென்ற பிறகும் கூட இத்தனை வருடங்களாக அரசியலில் இருக்கும் ராமதாஸ், தான் சொன்ன பொய்யை விழுங்கவும் முடியாமல் நிரூபிக்கவும் முடியாமல் தவிக்கிறார். மீண்டும் மீண்டும் ஏதாவது ஒருவகையில் தி.மு.க-வை சீண்டி- அ.தி.மு.க-வின் ஊழல்களை திசை திருப்ப இரவு பகலாக பணியாற்றுகிறாரோ என்று சந்தேகிக்கிறேன்.

ராமதாஸ், ஸ்டாலின்
ராமதாஸ், ஸ்டாலின்

பஞ்சமி நிலத்துக்கான ஆதாரத்தை ராமதாஸ் வெளியிட்டிருந்தால் அவரது நேர்மையைப் பாராட்டியிருக்கலாம். இல்லையென்றால் தெரியாமல் தவறு செய்துவிட்டேன் என்று மன்னிப்புக் கேட்டிருந்தால் அவரது பெருந்தன்மை என்று விட்டிருக்கலாம். ஆனால், இரண்டும் இல்லாமல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை எதிர்கொள்ள வேண்டிய ராமதாஸ் இப்போதும் கூட தன் தவற்றை உணருவதாகத் தெரியவில்லை என்றால் யாருக்காக இந்த நாடகத்தை அரங்கேற்றுகிறார்? தி.மு.க-வை விமர்சித்தால் பா.ஜ.க மகிழ்ச்சியடையும். தன் மகன் அன்புமணி ராமதாஸ் மீதுள்ள மருத்துவக்கல்லூரி ஊழல் வழக்கு விசாரணை தடைபடும்; மத்திய அமைச்சரவையில் தன் மகன் இடம்பெற வாய்ப்பு ஏற்படும் என்ற நப்பாசை காரணமோ என்ற சந்தேகமே எழுந்திருக்கிறது.

தி.மு.க தலைவரைப் பொறுத்தமட்டில் பஞ்சமி நிலம் என்பதை நிரூபிக்கத் தயாரா என்று ராமதாஸுக்கு விட்ட சவால் இன்னும் அப்படியேதான் இருக்கிறது. அவர் சார்பில் தேசிய பட்டியலின பழங்குடியின ஆணையம், நீதிமன்றம் உட்பட எங்கெங்கு ஆதாரங்களைக் கொடுக்க வேண்டுமோ அங்கெல்லாம் ஆதாரங்களை நாங்கள் கொடுத்துவிட்டோம். இனி, தான் சுமத்திய பொய்க் குற்றச்சாட்டுக்குப் பொறுப்பேற்று நிரூபிக்க வேண்டியது ராமதாஸ் கையில்தான் இருக்கிறது. அதை தட்டிக் கழித்துவிட்டு, மீண்டும் வாடகைக் கட்டடம் என்று கூறி அவர் ஏன் தன்னைத்தானே திட்டமிட்டு தரம் தாழ்த்திக்கொள்கிறார் என்பது அவருக்கு மட்டுமே புரிந்த புதிராக இருக்கிறது.

முரசொலி நாளேடு
முரசொலி நாளேடு

எழுப்பப்பட்ட பிரச்னை முரசொலி இருக்கும் இடம், பஞ்சமி நிலமா அல்லவா என்பதுதானே தவிர, முரசொலி அலுவலகம் அங்கு வாடகைக்கு இருக்கிறதா இல்லையா என்பதல்ல. முரசொலி சார்பில் பட்டாவை வெளியிட்டது முரசொலி இயங்கும் இடம் பஞ்சமி நிலம் இல்லை என்பதை நிரூபிக்கவும், பொய்யையே தனது அரசியலுக்கு அஸ்திவாரமாக்கி, பொய்யிலே வாழ்ந்து வரும் ராமதாஸின் பொய் முகமூடியைக் கிழிப்பதற்காகவும் தான்.

`இதுவே அனைவருக்குமான எனது இறுதி பதில்! ’ - முரசொலி நில விவகாரத்தில் தகித்த ஸ்டாலின்

பஞ்சமி நிலம் என்று சொன்ன குற்றச்சாட்டிற்கு முடிந்தால் ஆதாரத்தைக் கொடுங்கள். அப்படி முடியாவிட்டால் தோல்வியை ஒப்புக்கொண்டு சமூக நீதிக் குரலை தொடர்ந்து ஒலித்து வரும் முரசொலி நாளிதழ் பற்றி அபாண்டமாக பழி சுமத்தி விட்டோமே என்று பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டு பிராயச்சித்தம் தேடப் பாருங்கள். எதுவுமே இல்லாமல் வாடகைக் கட்டடம் அது இது என்றெல்லாம் தொடர்ந்து தி.மு.க-வை வம்புக்கு இழுப்பதால், அ.தி.மு.க - பா.ம.க கூட்டணிக்காக தைலாபுரத்தில் நடந்த ரகசிய பேரம் மறந்து போகும், அ.தி.மு.க ஊழல்களைத் திசை திருப்பலாம், மத்திய பா.ஜ.க அரசின் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு வாக்களித்து சிறுபான்மை மற்றும் ஈழத்தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தை எளிதில் மக்கள் மனதிலிருந்து அகற்றி விடலாம், என்றெல்லாம் நினைத்தால் தயவுசெய்து அப்படிப்பட்ட ஒரு கனவைக் காண வேண்டாம் என்று ராமதாஸை கேட்டுக்கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.

பின் செல்ல