சென்னை: இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 6 சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டன! - ஆட்சியர் நேரில் ஆய்வு

சசிகலாவின் உறவினர்களான இளவரசி மற்றும் சுதாகரனுக்குச் சொந்தமான சென்னையிலுள்ள ஆறு சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டன.
கடந்த 2017-ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பத்து கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. சிறைத் தண்டனை காலம் முடிந்த நிலையில், சசிகலாவும் இளவரசியும் தங்களின் அபராத தொகையைச் செலுத்தியதால், அவர்கள் இருவரும் விடுதலை செய்யப்பட்டு தமிழகம் வந்துகொண்டிருக்கிறார்கள். தண்டைக் காலம் முடிந்திருந்தும் சுதாகரன் தனது அபராத தொகையை இன்னும் செலுத்தாததால் இன்னும் சிறையில்தான் இருக்கிறார்.

இந்தநிலையில் இளவரசி, சுதாகரனுக்குச் சொந்தமான சென்னையிலுள்ள ஆறு சொத்துகள் அரசுடைமை ஆக்கப்படுவதாகச் சென்னை மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. சென்னை டி.டி.கே சாலையிலுள்ள ஒரு சொத்தும், சென்னை வாலஸ் தோட்டத்திலுள்ள ஐந்து சொத்துகளும் அரசின் சொத்தாக உரிமை மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், `சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு வழக்கில் வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பின் அடிப்படையில், சென்னை வருவாய் மாவட்டத்துக்கு உட்பட்ட இளவரசி, சுதாகரனுக்குச் சொந்தமான ஆறு சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. இந்தச் சொத்துகள் அனைத்தும் தமிழக அரசின் சொத்துகள் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சொத்தில் கிடைக்கும் வருவாய் அனைத்தும் தமிழக அரசுக்குச் சொந்தம்’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.


அதன்படி, சென்னை வாலஸ் தோட்டத்திலுள்ள ஐந்து சொத்துகளையும், சென்னை டி.டி.கே சாலையிலுள்ள ஸ்ரீராம் நகரிலுள்ள ஒரு சொத்தும் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன. இன்று சசிகலா தமிழகம் திரும்பிக்கொண்டிருக்கும் வேளையில், நேற்றும் சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையிலுள்ள இளவரசி மற்றும் சுதாகரனுக்குச் சொந்தமான இடத்தை அரசு கையகப்படுத்தியது. அந்த இடத்தை சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.