வேலூர், காட்பாடியிலுள்ள ரங்காலயா மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் துரைமுருகன் ‘ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி’ சாதனை மலரை வெளியிட்டார். அப்போது பேசிய அவர், ``தளபதி ஆட்சிக்கு வந்த பிறகு 24 மணிநேரமும் மக்களுக்கான திட்டங்களைத் தீட்டுவது, அந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலேயே இருக்கிறார். இவ்வளவு இருந்தும் சில நேரங்களில் மக்கள் தவறுகள் செய்துவிடுகிறார்கள். அதில் ஒன்றுதான்... விஷச்சாராயம் குடித்து, விழுப்புரம் மாவட்டத்தில் பலபேர் இறந்திருக்கிறார்கள். அன்றைய தினம், வீட்டிலுள்ள டேபிளில் தளபதி சாப்பிடுவதற்குத் தயாராக சாப்பாடு வைக்கிறார்கள். அப்போது, ‘விஷச்சாராயம் குடித்து இறந்துவிட்டார்கள்’ என்று செய்தி வருகிறது.

உடனே அவர் கபகபவென ஒரு டிபன் கேரியரைக் கொண்டு வரச்சொல்லி, டேபிளில் இருப்பதையெல்லாம் டிபன் கேரியரில் கொட்டி எடுத்துக்கொண்டு, விழுப்புரத்துக்குப் போனார். அங்கு, பாதிக்கப்பட்டவர்களைப் பார்த்து ஆறுதல் தெரிவித்துவிட்டு, திரும்புகிற வழியில் திண்டிவனத்தில் நின்று ஆறிப்போன சோற்றைச் சாப்பிட்டுவிட்டு, சென்னைக்கு வந்துசேர்ந்தார். தளபதியுடன் நேற்று பேசிக்கொண்டிருந்தேன். ‘சாப்பிட்டுவிட்டுப் போயிருக்கலாமே?’ என்று சொன்னேன். ‘சாப்பிடலாம். ஆனால், மனசு சரியில்லை’ என்றார்.
கொரோனா காலத்தில் எல்லோரும் வீட்டிலிருந்து வெளியே வராமலிருந்தோம். மூக்கில் மாஸ்க்கை மாட்டிக்கொண்டிருந்தோம். ஆனால், தளபதி மட்டும் அஞ்சாமல் கொரோனா வார்டுக்குள் நுழைந்துவிட்டார். அதிகாரிகள் பயந்து ஒளிந்துகொண்டார்கள். அப்போது, ‘யாரும் என்னைப் பின்தொடர்ந்து வராதீர்கள். நானும் என் உயிரைப் பணயம் வைத்துதான் உள்ளே போகிறேன்’ என்று தளபதி சொன்னார்.

அதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக வேண்டியதைச் செய்யவும் உத்தரவிட்டார். இந்தத் தியாக உள்ளம், தொண்டு உள்ளம் நம் முதல்வருக்கு இருக்கிற காரணத்தால்தான், சாராயம் குடித்து இறந்தார்கள் என்று செய்தி வந்த உடனே பறந்துபோனார். அதேபோல், ‘வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், அடித்தட்டு மக்களுக்காகப் பணிபுரிய வேண்டும்’ என்று சொல்லிக்கொடுத்தவர் எங்கள் தலைவர் கலைஞர். அவர் வழியில் தளபதி பயணித்துகொண்டிருக்கிறார்’’ என்றார்.