Published:Updated:

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!

சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா

‘சசிகலாவே அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர்’ என அவரின் ஆதரவாளர்கள் உரிமை கோருகிறார்கள். ஆனால், ‘அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இப்போது இல்லை’ என அடித்துச் சொல்கிறது எதிர்த் தரப்பு

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!

‘சசிகலாவே அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர்’ என அவரின் ஆதரவாளர்கள் உரிமை கோருகிறார்கள். ஆனால், ‘அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இப்போது இல்லை’ என அடித்துச் சொல்கிறது எதிர்த் தரப்பு

Published:Updated:
சசிகலா
பிரீமியம் ஸ்டோரி
சசிகலா
பெங்களூரிலிருந்து சென்னைக்கு ஆறு மணி நேரத்தில் வந்துவிட முடியும். ஆனால், சசிகலா ஒரு நாள் முழுக்கப் பயணம் செய்து வந்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, நான்கு ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு தமிழகம் திரும்பும் சசிகலா நிறைய மாறியிருப்பார் என எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் வருகையே தமிழகத்தில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!

* ‘`சசிகலா வருகையால் தினகரனுக்குத்தான் பதற்றம். அ.தி.மு.க-வினருக்கு அல்ல’’ என்றார் அமைச்சர் ஜெயக்குமார். ஆனால், ஆளுங்கட்சியினர் எவ்வளவு பதறினார்கள் என்பது ஒவ்வொரு ஆக்‌ஷனிலும் தெரிந்தது. இதில் முதலில் பாதிக்கப்பட்டது, ஜெயலலிதா நினைவிடம்தான். மிகச் சரியாக சசிகலா சிறையிலிருந்து விடுதலையான அதே ஜனவரி 27-ம் தேதி இதைத் திறந்து வைத்தார்கள். இதன்மூலம் கட்சியினரின் கவனம் சசிகலா பக்கம் திரும்பாமல் பார்த்துக்கொண்டனர். சசிகலா சென்னை திரும்பும் நாளில் இங்குதான் முதலில் செல்வார் என்று தீர்மானமாகத் தெரிந்ததும், முதல் வேலையாக அதை மூடிவிட்டார்கள். ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர் நினைவிடங்களில், அருங்காட்சியகப் பணிகள் நடப்பதாகக் கூறி, பார்வையாளர்களுக்கு அரசு தடை விதித்தது.

* ஜெயலலிதா மறைந்த சில வாரங்களில் அ.தி.மு.க பொதுச்செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட சசிகலா, முதலில் சென்ற இடங்களில் ஒன்று, சென்னை ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆர் வீடு. அங்கு எம்.ஜி.ஆர் சிலையையும் அவர் திறந்து வைத்தார். பெங்களூரிலிருந்து சென்னை திரும்பும் நாளில் மீண்டும் இங்கு செல்ல விரும்பினார் சசிகலா. அங்கு அவர் கொடியேற்றுவதற்காக அவசரமாக ஒரு கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. டி.டி.வி.தினகரன் நடத்திவரும் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இது வைக்கப்பட்டது. இது நடைபாதையை வழிமறித்து இருப்பதாக எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள்கள் கீதா மோகன், ராதா கோபாலகிருஷ்ணன் ஆகியோர் புகார் தர, இரண்டே நாள்களில் கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. மூன்று நாள்கள் கழித்து அ.ம.மு.க கொடிக்கம்பம் மீண்டும் வைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் குடும்பம் சார்பில் இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு போடும் அளவுக்குப் பிரச்னையானது.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!

* சசிகலா சென்னை திரும்பிய அதே பிப்ரவரி 8-ம் தேதி வேலூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்வதாக இருந்தார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சசிகலா அந்தப் பகுதி வழியாக அதே நேரத்தில் சென்னை திரும்புவதாக இருக்கும் என்பதால், முதல்வர் பிரசாரத் தேதி மாற்றப்பட்டது.

* சிறைத்தண்டனை முடிந்து, கொரோனா சிகிச்சையையும் முடித்துக்கொண்டு ஜனவரி 31-ம் தேதி பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார் சசிகலா. அப்போது அ.தி.மு.க கொடி கட்டிய காரில்தான் கிளம்பிச் சென்று, பெங்களூரில் பண்ணை வீட்டில் தங்கினார். அ.தி.மு.க கொடியை அவர் பயன்படுத்தியது சட்டவிரோதம் என அமைச்சர்கள் குழுவே தமிழக டி.ஜி.பி-யிடம் புகார் கொடுத்ததும், இதுவரை நடக்காத ஒரு விஷயம். தமிழகம் திரும்பும்போது, சாமர்த்தியமாக அ.தி.மு.க பிரமுகர் ஒருவரின் காரை வாங்கி, அதில் அ.தி.மு.க கொடி கட்டிக்கொண்டு சசிகலா வந்தது யாரும் எதிர்பார்க்காத திருப்பம். (கார் கொடுத்தவரை சிலமணி நேரத்தில் கட்சியிலிருந்து நீக்கிவிட்டார்கள்) முதலில் இந்தக் காரில் ஏற சசிகலா தயங்கினாராம். ஆனால், உறவினர்கள் வற்புறுத்தி சம்மதிக்க வைத்துள்ளனர்.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!
திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!

* ‘சசிகலாவே அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர்’ என அவரின் ஆதரவாளர்கள் உரிமை கோருகிறார்கள். ஆனால், ‘அ.தி.மு.க-வில் பொதுச்செயலாளர் என்ற பதவியே இப்போது இல்லை’ என அடித்துச் சொல்கிறது எதிர்த் தரப்பு. ஜெ. இறந்ததும் சசிகலா பொதுச் செயலாளர் ஆனார். எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் என இரண்டு அணிகளாகப் பிரிந்திருந்தவர்கள் இணைந்ததும் 2017-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூடியது. அதில், சசிகலா நியமனத்தை ரத்து செய்தனர். பொதுச்செயலாளர் பதவியையே ஒழித்துவிட்டு, அதற்குப் பதிலாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கினர். அந்தப் பதவிகளில் பன்னீரும் பழனிசாமியும் உள்ளனர். இது தொடர்பாக வழக்கு நடக்கும் நிலையில்தான், சசிகலா தரப்பு உரிமை கோருகிறது. அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு அவர் வருவதைத் தடுக்க போலீஸ் பாதுகாப்பு போடுகிறார்கள்.

* சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரைக் குற்றவாளிகளாக அறிவித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா, தீர்ப்பையும் தெளிவாக எழுதியிருந்தார். நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை, தனித்தனியாக அபராதம் ஆகியவற்றுடன், சொத்துக்குவிப்பு வழக்கில் தொடர்புடைய எந்தெந்தச் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் எனவும் பட்டியல் போட்டிருந்தார். இந்தத் தீர்ப்பையே உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது. ஜெயலலிதா மறைந்துவிட, மற்றவர்கள் சிறைத்தண்டனை அனுபவித்தனர். சுதாகரன் தவிர மற்றவர்கள் அபராதம் செலுத்திவிட்டனர். இந்நிலையில், சொத்துகளைக் கையகப்படுத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் சசிகலா சென்னை திரும்புவதற்கு முதல் நாள், சென்னையில் இளவரசி மற்றும் சுதாகரன் பெயரில் உள்ள சில சொத்துகளை அரசு ஏற்றதாக மாவட்ட கலெக்டர் அறிவித்தார். அடுத்த நாள் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த இருவர் பெயரில் இருந்த சொத்துகள் சிலவற்றை அரசு கையகப்படுத்தியது.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!
திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!

* முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முன்னிலைப்படுத்தி தமிழக அரசின் சாதனைகளைக் கூறும் விளம்பரங்கள் வரிசையாக வெளிவருகின்றன. இந்நிலையில், சசிகலா தமிழகம் வருவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனியாக ஒரு விளம்பரம் கொடுத்திருந்தார். அவரது சாதனைகளை விவரிக்கும் விளம்பரம் அது. மாறிய அரசியல் சூழலில், இந்தத் தனி ஆவர்த்தனம் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டது.

* ஆரவாரமாகத் தமிழகத்துக்குத் திரும்பியிருக்கும் சசிகலா, அடுத்து வரும் சில வாரங்கள் தமிழக அரசியல் பரபரப்பாக இருக்கும் என்பதை உணர்த்தியிருக்கிறார். ‘`நிச்சயமாக தீவிர அரசியலில் ஈடுபடுவேன். தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நான் அடிமை. அடக்குமுறைக்கு அடிபணிய மாட்டேன். ஜெயலலிதா வழிவந்த ஒரு தாய் பிள்ளைகள், ஒற்றுமையோடு இணைந்து செயல்படுவதே என் விருப்பம்’’ என்று கூறியிருக்கிறார். இது ஆளுங்கட்சியில் என்ன அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பது இனிமேல்தான் தெரியும்.

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!
திரும்ப வந்துட்டேன்னு சொல்லு!

* பல விஷயங்கள் மாறினாலும், மாறாத ஒரு விஷயம் உண்டு. அது, சசிகலாவின் உறவு வட்டம். இந்த மன்னார்குடி வகையறா மீண்டும் சசிகலாவைச் சுற்றிக்கொண்டிருக்கிறது. ‘சசிகலா தமிழகம் திரும்பும்போது, அவருடன் வருவதற்கு ஐந்து கார்களுக்கு மட்டுமே அனுமதி’ என்று போலீஸ் கூறியிருந்தது. இந்த ஐந்து கார்களிலும் வந்தவர்கள் அவரின் உறவினர்கள்தான். ஆதரவாளர்கள், கட்சிக்காரர்கள் எல்லோரும் தூரமாகவே இருந்தனர். இந்த உறவுகளை மீறி சசிகலாவை யாரும் நெருங்க முடியவில்லை.

* சசிகலா உறவு வட்டத்தில் திடீர் திடீரென சிலர் செல்வாக்கு பெறுவார்கள். சிலர் காணாமல் போவார்கள். அந்த வகையில் இது, தினகரனின் மைத்துனர் டாக்டர் வெங்கடேஷின் சீசன். பெங்களூரிலிருந்து திரும்பிய நாளில், வெங்கடேஷின் பேச்சைக் கேட்டே எதையும் செய்தார் சசிகலா. உறவினர்கள் அத்தனை பேரும் கூடியிருக்க, இடையில் டி.டி.வி.தினகரனை முறைத்துக்கொண்ட சசிகலாவின் சகோதரர் திவாகரன் மட்டும் வரவில்லை. திவாகரனின் மகன் ஜெயானந்த் வந்து ரொம்ப நேரம் காத்துக்கிடந்தார். ஆனால், அவரை சசிகலா பார்க்கவே இல்லை.

இந்த உறவுகள் இனி பரபர செய்திகளின் மையப்புள்ளி ஆவார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism