Published:Updated:

ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கத்தில் தாமதம்... மணிப்பூர் போல தலையிடுமா உச்சநீதிமன்றம்?

ஓ.பி.எஸ்
ஓ.பி.எஸ்

கட்சி மாறிய எம்.எல்.ஏ வழக்கில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, அந்த எம்.எல்.ஏ-வை மணிப்பூர் சட்டமன்றத்தில் நுழைய தடை விதித்துள்ளது..

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் வெற்றிக்குப் பிறகு, கட்சி தாவுவதும் அணி மாறுவதும் இந்திய அரசியலில் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. குதிரை பேரம், ரிசார்ட் அரசியலே இன்றைய அரசியல் மரபுகள். இரண்டு தகுதி நீக்க வழக்குகளின் முடிவு ஆட்சியையே முடிவுக்கு கொண்டுவரக்கூடிய சூழ்நிலை தமிழகத்தில் நிலவியது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களித்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் மீதான தகுதிநீக்க புகார்கள் மூன்றாண்டுகளுக்கு மேலாகியும் தற்போது வரை நிலுவையில் உள்ளன. இந்நிலையில் எம்.எல்.ஏ.,க்களின் தகுதி நீக்கம் குறித்த வழக்கு ஒன்றில் மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை அளித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

11 எம்.எல்.ஏ-க்கள்
11 எம்.எல்.ஏ-க்கள்

மணிப்பூர் மாநிலத்தில் 2017-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் 28 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. 21 இடங்களில் வென்று இரண்டாவது இடம் பிடித்த பா.ஜ.க சிறிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சியாம்குமார் சிங் பா.ஜ.க-வில் இணைந்து அமைச்சராகவும் பொறுப்பேற்றார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்று கட்சி மாறிய சியாம்குமார் சிங்கை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது மணிப்பூர் சபாநாயகர் நடவடிக்கை எடுக்காமலே காலம் தாழ்த்தி வந்தார். வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது.

இந்த வழக்கில் கடந்த ஜனவரி 21-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், ``ஒரு மாத காலத்துக்குள் சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கால அவகாசம் விதித்திருந்தது. வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மீண்டும் எட்டு வார கால அவகாசம் கேட்டு சபாநாயகர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் அதற்கு மறுத்துவிட்டது.

உச்ச நீதிமன்றம் சியாம்குமார் சிங்கை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதோடு சட்டமன்ற உறுப்பினராகச் செயல்படவும், சட்டமன்ற நடவடிக்கைகளில் ஈடுபடவும் தடைவிதித்துள்ளது. அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 142-ன் கீழ் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

சபாநாயகருக்கென்று சில தனித்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. `வானளாவிய அதிகாரம் கொண்டது’ சபாநாயகர் பதவி என்று சொல்லப்படுவதுண்டு. ஆனால், பல நேரங்களில் சபாநாயகர் ஆளுங்கட்சி சார்பாகவும் ஒருதலைபட்சமாகவும் செயல்படுகிறார் என்கிற குற்றச்சாட்டு எழுவதுண்டு.

கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்றம், ``சபாநாயகர் பதவிக்கு உண்டான அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் மறுபரீசலனை செய்ய வேண்டிய தேவையுள்ளது. சபாநாயகரும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர் என்பதால் தகுதிநீக்க விவகாரங்களில் ஒருதலைபட்சமாகச் செயல்படுவதற்கான முகாந்திரங்கள் உள்ளன. எனவே, தகுதிநீக்கும் அதிகாரத்தை சுதந்திரமான மற்றுமொரு அமைப்பிடம் வழங்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தது. வெவ்வேறு மாநிலங்களில் சபாநாயகர் மீது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த வருகிற சூழலில் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்றது.

`கட்சி ரெடி இல்லை; ஆனால், வாரிசு ரெடி' - ரஜினியின் கணக்கு எடுபடுமா?

ஆனால், உச்ச நீதிமன்றம் சபாநாயகர், தகுதிநீக்கம் தொடர்பான வேறு சில வழக்குகளிலும் முரண்பட்ட தீர்ப்புகளை வழங்கியுள்ளது. எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்யாமல் கட்சி மாறுவது பழைய ஸ்டைல் என்றால், எம்.எல்.ஏ-க்களை ராஜினாமா செய்ய வைத்து சட்டமன்றத்தின் பலத்தைக் குறைத்து ஆட்சியைக் கைப்பற்றுவது புதிய ஸ்டைல். அதைத்தான் கர்நாடகா தொடங்கி தற்போது மத்தியப் பிரதேசம் வரை பார்த்து வருகிறோம்.

ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ்
ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

கர்நாடகா வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கொறடா அதிகாரத்தை நீர்த்துப்போகச் செய்துவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. தமிழகத்தில் ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்களின் தகுதிநீக்க புகார் மீது தமிழக சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை என்கிற வழக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றது. அ.தி.மு.க கொறடா உத்தரவை மீறி ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தனர். இது தகுதிநீக்கத்துக்கு உரிய காரணம் எனச் சொல்லப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருந்த வழக்கை கடந்த மாதம், ``சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்கிற நம்பிக்கை உள்ளது” என்று கூறி முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம். சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றுதான் வழக்கே தொடரப்பட்டது. மீண்டும் சபாநாயகர் வசமே அதை ஒப்படைத்தது உச்ச நீதிமன்றம். மேலும் 11 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் சபாநாயகருக்கு எந்தக் காலக்கெடுவும் நிர்ணயிக்க மறுத்துவிட்டது உச்ச நீதிமன்றம். இதுவே மணிப்பூர் வழக்கில் ஒருமாத காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காலக்கெடு விதித்திருந்தது.

ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ்
ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ்

இவ்வாறு வெவ்வேறு வழக்குகளில் உச்ச நீதிமன்றத்தின் அணுகுமுறை முரணாக இருந்துவந்துள்ளது. ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க புகாரில் சபாநாயகரால் நோட்டீஸ் அணுப்பப்பட்டு, விளக்கம் அளிக்க தற்போது ஒரு மாதம் அவகாரம் கோரப்பட்டுள்ளது.

இதிலும் கால தாமதம் ஏற்படுகிற பட்சத்தில் உச்ச நீதிமன்றம் என்ன நடவடிக்கை எடுக்கும்; 11 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம் அ.தி.மு.க-வுக்குள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு