பாகிஸ்தானில் பொருளாதார நிலை நாளுக்கு நாள் மிக மோசமாகிக்கொண்டே வருகிறது. விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துக்கொண்டு செல்வதால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இது தொடர்பாக பாகிஸ்தானின் நிதியமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், ``பெட்ரோலியப் பொருள்களின் விலையை உயர்த்துவதைத் தவிர அரசுக்கு வேறு வழியில்லை. விலை உயர்த்தப்பட்ட பிறகும், நாங்கள் டீசலுக்கு லிட்டருக்கு 56 ரூபாய் இழப்பைச் சந்திக்கிறோம்'' என்றார்.

இதைத் தொடர்ந்து, பெட்ரோலியப் பொருள்கள் விலை உயர்வுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, `` பாகிஸ்தானை ஆளும் மோசடிக் கும்பலால் நாடு பெரும் பணவீக்கத்தை சந்திக்கப்போகிறது. ரஷ்யாவுடன் 30 சதவிகித மலிவான விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தத்தை எனது தலைமையிலான அரசு மேற்கொண்டது. ஆனால் இந்த உணர்ச்சியற்ற அரசாங்கம் அதைத் தொடரவில்லை.
அமெரிக்காவின் நட்பு நாடான இந்தியா, ரஷ்யாவிடமிருந்து மலிவான விலையில் கச்சா எண்ணெயை வாங்குவதன் மூலம் எரிபொருள் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது'' என்றார். இந்திய வெளியுறவுக் கொள்கை குறித்து தொடர்ந்து இம்ரான் கான் பாராட்டிப் பேசிவருவது குறிப்பிடத்தக்கது!
