பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த ஆண்டு பதவி விலகியதிலிருந்து அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில், இம்ரான் கான் அல்-காதர் அறக்கட்டளை தொடர்பான ஊழல் வழக்கில் செவ்வாய்க்கிழமை கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக இம்ரான் கானை விசாரிக்க 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க National Accountability Bureau (NAB) கோரியிருந்தது.

அதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தன. சில இடங்களில் வன்முறைச் சம்பவங்களும் அரங்கேறின. இதற்கிடையே, இம்ரான் கான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ``24 மணி நேரமாக கழிவறைக்குக்கூட செல்ல என்னை அனுமதிக்கவில்லை. மெல்லக் கொல்லும் ஊசி போட்டு என்னைக் கொலைசெய்து விடுவார்களோ என அஞ்சுகிறேன். எனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இது தொடர்பான வழக்கு பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றத்தில் பாகிஸ்தான் தலைமை நீதிபதி உமர் அதா பண்டியல் தலைமையிலான மூன்று பேர்கொண்ட அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், அல்-காதர் அறக்கட்டளை தொடர்பான ஊழல் வழக்கில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் இம்ரான் கான் கைதுசெய்யப்பட்ட விதம், காவலில் வைக்கப்பட்ட விதம் குறித்து கோபத்தை வெளிப்படுத்தினர். மேலும், நீதிமன்றம் மீண்டும் கூடும் மாலை 4:30 மணிக்குள் (உள்ளூர் நேரம்) இம்ரான் கானை ஆஜர்படுத்துமாறு NAB-க்கு உத்தரவிடப்பட்டது.

அதைத் தொடர்ந்து, இம்ரான் கான் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து விசாரணையைத் தொடர்ந்த நீதிபதிகள் அமர்வு, "இம்ரான் கானை மீண்டும் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நீதிமன்ற வளாகத்திலிருந்து ஒரு தனிநபரை எப்படிக் கைதுசெய்ய முடியும்... நீதிமன்ற பதிவாளரின் அனுமதியின்றி நீதிமன்றத்திலிருந்து எவரையும் கைதுசெய்ய முடியாது.
ஒரு நபர் நீதிமன்றத்தில் சரணடைந்தால், அவரைக் கைதுசெய்வதன் அர்த்தம் என்ன... ஒருவருக்கு நீதிக்கான உரிமையை எப்படி மறுக்க முடியும்... 90 ராணுவ வீரர்கள் நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்தால், நீதிமன்றத்திற்கென என்ன மரியாதை இருக்கிறது... எனவே, இம்ரான் கான் கைதுசெய்யப்பட்டது சட்ட விரோதமானது.

அதனால் கைது நடவடிக்கை செல்லாது. அதன் முழு செயல்முறையும் பின்வாங்கப்பட வேண்டும். இந்த வழக்கை இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுவிசாரணை செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவை இம்ரான் கான் ஏற்றுக்கொள்ள வேண்டும். சட்டம்-ஒழுங்கை உறுதிப்படுத்துவது ஒவ்வோர் அரசியல்வாதியின் பொறுப்பாகும்" எனத் தெரிவித்திருக்கிறது.